Published:Updated:

``ரெஹானா பாத்திமாவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?'' - கவிஞர் சல்மா கேள்வி

``ஒட்டுமொத்தத்துல மதத்தையும் மதம் சார்ந்த வன்முறைகளையும் தூண்டிவிட்டு, கேரளாவில் தங்கள் கட்சிக்கான ஓட்டை அதிகரிக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் திட்டமிட்டு இதைச் செய்யறாங்க. இது எல்லாமே பா.ஜ.க அரசின் திட்டம்!''

``ரெஹானா பாத்திமாவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?'' - கவிஞர் சல்மா கேள்வி
``ரெஹானா பாத்திமாவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?'' - கவிஞர் சல்மா கேள்வி

`எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த இரண்டு நாள்களாக சில பெண்கள் சபரிமலைக்குச் செல்வதும், சிலரின் எதிர்ப்பால் திரும்பி வருவதுமாக இருக்கிறார்கள். நேற்றைய தினம், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்பவர் சபரிமலைக்கு வந்தார் என்ற செய்தி பரபரப்பாக்கியது. யார் இந்த ரெஹானா பாத்திமா? அவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வேக வேகமாகப் பரவ ஆரம்பித்தன. அவருடைய வீடு சூறையாடப்பட்ட படங்களும் பரவின. இதுகுறித்து, எழுத்தாளரும் தி.மு.க மகளிர் அணி மாநில துணைப் பொதுச் செயலாளருமான சல்மாவிடம் பேசினேன். 

``ரெஹானா பாத்திமா முஸ்லிம் மதத்திலிருந்து, எப்போதோ இந்து மதத்துக்கு மாறிட்டாங்க. திட்டமிட்டு சபரிமலை விஷயத்தில் மதத்தைக் கொண்டு வந்திருக்காங்க. பாத்திமா, ஜமீலா என்கிற பெயர்கள் இஸ்லாம் மதத்திலும் இருக்கு; இன்னும் ஒரு மதத்திலும் இருக்கு. அந்தப் பெண் இந்து மதத்துக்கு மாறியும், பெயரை மாற்றாமல் இருப்பதன் பின்னணியிலும் சில காரணங்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, பிரச்னையின் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். அவங்க ஒரு பக்கம் பக்தர்களை அடிப்பாங்க. முஸ்லிம் பொண்ணு என வதந்தியைக் பரப்புவாங்க. இன்னொரு பக்கம் வழக்கும் ஃபைல் பண்ணுவாங்க. கலவரத்தையும் உருவாக்குவாங்க. ஒட்டுமொத்தத்துல மதத்தையும் மதம் சார்ந்த வன்முறைகளையும் தூண்டிவிடறவங்க அவங்கதான். கேரளாவில் தங்கள் கட்சிக்கான ஓட்டை அதிகரிக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் திட்டமிட்டு இதைச் செய்யறாங்க. இது எல்லாமே பா.ஜ.க அரசின் திட்டம். அவங்க ரொம்ப பிளான் பண்ணி, ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கிறாங்க.

நல்லா யோசித்துப் பார்த்தீங்கன்னா, இதுல இஸ்லாமின் ரோல் எங்கேயுமே இல்லைங்கிறது தெளிவாப் புரியும். பெண்கள் சபரிமலைக்குப் போகணும்னு விரும்பறாங்க. அதற்காக வழக்குத் தொடுக்கிறாங்க. அதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி கொடுக்குது. தீர்ப்பு சொன்ன நீதிபதிகளும் இந்துக்கள்தான். அங்கும் முஸ்லிம் ரோல் இல்லை. அந்தப் பெண்ணின் முஸ்லிம் பெயர் அடையாளத்தை வெச்சு, அவர் தொடர்பான மற்ற உண்மைகளை மறைச்சு பா.ஜ.க. மக்களைத் திசை திருப்புது.

ஆண்கள் போலவே நாங்களும் சபரிமலைக்குப் போகணும் எனப் பெண்கள் தங்கள் சம உரிமைக்காகப் போராடினாங்க. ஏற்கெனவே இந்து மதத்துக்கு மாறின ரெஹானா பாத்திமா, நேற்று சபரிமலைக்குப் போனதிலிருந்து, இது மதம் சார்ந்த ஒரு விஷயமா மாற்றப்பட்டுச்சு. ஆட்சியைப் பிடிக்கிறதுக்காக பா.ஜ.க. மதத்தைப் பயன்படுத்துறது வழக்கம்தான். அவங்க ஆட்சிக்காக பாபர் மசூதியை இடிப்பாங்க; கோத்ரா ரயிலை எரிப்பாங்க. அதையெல்லாம் இப்போ யோசித்துப் பார்த்தாலும் பயமா இருக்கு.

உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி சபரிமலைக்குச் செல்ல பெண்கள் வாங்கிய உரிமை இது. முஸ்லிம் பெயர்கொண்ட ஓர் இந்துப் பெண் உள்ளே நுழைந்ததால், இது மொத்தமாக திசைத் திருப்பப்பட்டிருக்கு; பாதிக்கப்பட்டும் இருக்கு. ரெஹானா யாரோட ஆளா செயல்பட்டாங்க என்பது இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. எல்லோருக்கும் அந்தப் பெண் தொடர்பான உண்மையான விஷயங்கள் போய்ச் சேரணும். மற்றபடி, இதில் முஸ்லிம்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியணும்'' என்கிறார் சல்மா.