Published:Updated:

``தமிழ் சினிமாவில் அமைச்ச விசாகா கமிட்டி என்ன ஆச்சு தெரியுமா?!'' - `மாதர் சங்கம்' உ.வாசுகி

``சினிமாவிலும் நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்தபோது, நடிகை ஶ்ரீபிரியாவை தலைவியாகப் போட்டு, விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியில் நடிகை குஷ்புவும் இடம்பெற்றிருந்தார். ''

``தமிழ் சினிமாவில் அமைச்ச விசாகா கமிட்டி என்ன ஆச்சு தெரியுமா?!'' - `மாதர் சங்கம்' உ.வாசுகி
``தமிழ் சினிமாவில் அமைச்ச விசாகா கமிட்டி என்ன ஆச்சு தெரியுமா?!'' - `மாதர் சங்கம்' உ.வாசுகி

ரு பக்கம், சபரிமலையில் தாங்களும் காலெடுத்து வைக்க விரும்புவது... இன்னொரு பக்கம், தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை நோக்கி மீ டூ என்று விரல் நீட்டிச் சுட்டுவது எனக் கடந்த சில நாள்களாகப் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. மீ டூ-வில் செலிபிரிட்டிகளின் தலைகள் உருண்டுகொண்டிருக்கின்றன. சபரிமலையிலோ, `சேவ் சபரிமாலா' என்கிற துண்டுப் பிரசுரங்கள் கோயில் உண்டியலில் நிரம்பி வழிகிறது. பெண்கள் தொடர்பான இந்த இரண்டு விஷயங்கள் பற்றி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் உ.வாசுகியிடம் பேசினேன்.

    ``பெண் சமத்துவம் என்பது, அரசியல் சாசனத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை. அந்தக் கோணத்தில் பார்க்கையில், சபரிமலைக்குப் பெண்கள் செல்வதைத் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றமும் இந்த அடிப்படையில்தான் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதனால், சபரிமலைக்குப் பெண்களுக்கான ஒத்துழைப்பை அனைவரும் நல்க வேண்டும். சபரிமலையில் பெண்களைத் தடுப்பவர்களில் பக்தர்களும் இருக்கிறார்கள். அதேநேரத்தில், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர்களும் அரசியல் காரணங்களுக்காகப் பெண்களைத் தடுக்கிறார்கள். கேரள மக்கள், ஓர் இயற்கைப் பேரிடரிலிருந்து இப்போதுதான் மீண்டுவருகிறார்கள். அங்கே அரசியல் சூழ்நிலை, ஆளும் அரசுக்குச் சாதகமாக இருக்கிறது. அதைச் சீர்குலைக்கவே சபரிமலை விஷயத்தை பி.ஜே.பி. கையில் எடுத்துள்ளது. `டிஸ்மிஸ் பினராயி விஜயன்' என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்துவருகிறார்கள்.

சபரிமலையில் இளம் வயதுப் பெண்களுக்கு அனுமதியில்லை என்கிற ஐதீகம், நூறாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கிறது; அந்தப் பாரம்பர்யத்தைச் சீர்குலைப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையில், 1972-ம் ஆண்டு, உயர் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பு, எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்றுவந்திருக்கிறார்கள். ரெகுலராக போய்வருவதாக இல்லாமல், குழந்தைகளுக்கு முதல் சோறூட்டும் `சோறுன்னு' விழாவுக்கு, ராஜ குடும்பத்துப் பெண்கள், சாமான்யக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் சென்று வந்திருக்கிறார்கள். இதைத் தடுக்க, மகேந்திரன் என்பவர் 1970-ம் ஆண்டு, வழக்கு போட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் உயர் நீதிமன்றம், 10 வயது முதல் 50 வயது வரையான பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்று 1972-ல் தீர்ப்பளித்தது. அதனால், நூற்றாண்டுகளாக இருக்கும் பழைமையான பாரம்பர்யம் என்பதே பொருந்தவில்லை. தவிர, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னால், எல்லாப் பெண்களும் சபரிமலைக்கு வந்தே ஆவோம் என்று பிடிவாதம் பிடிக்கப்போவதில்லை. `சபரிமலைக்குப் போகணும், ஐயப்பனை வழிபடணும்' என விரும்பி வருகிற பெண்களைத் தடுத்து பிரச்னை செய்ய வேண்டாமே என்பதுதான் என் கருத்து.

தெலங்கானாவில், `எங்களைத் தேர்ந்தெடுத்தால், பெண்களைச் சபரிமலைக்கு அழைத்துச்செல்வோம்' எனத் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகச் சொல்லியிருக்கிறது பி.ஜே.பி. இதிலிருந்தே, சபரிமலையில் நிகழும் பதற்றங்களுக்கு யார் காரணம் என்பது புரிந்திருக்கும். கேரளாவில் இருக்கும் இடதுசாரி அரசுக்கு ஓர் இடர்பாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி.யின் உள்நோக்கம்'' என்கிற வாசுகி, மீ டூ இயக்கம் பற்றிப் பேச ஆரம்பித்தார். 

``மீ டூ இயக்கத்துக்கான அடிப்படை விஷயமே, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதுதான். பணியிடங்களில் பாலியல் தொல்லை என்பது எல்லாக் காலங்களிலும் நடந்துகொண்டிருப்பது. இப்போது ஏன் இது பரபரப்பாகப் பேசப்படுகிறது? குற்றம் சுமத்துகிறவர்களும் குற்றம் சாட்டப்படுகிறவர்களும், உயர் மட்டத்திலும் முக்கியமான பொறுப்புகளிலும், ஏதோ ஒரு விதத்தில் அதிகார நிலைகளிலும் இருக்கிறார்கள் மற்றபடி, சமுதாயத்தில் ஓரம் கட்டப்பட்ட ஏழை பெண்களும் தலித் பெண்களும், கூடுதலாகச் சந்திக்கும் பிரச்னை இது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளிலும், கோவில்பட்டியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் இது தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

எல்லாப் பெண்களுமே ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ பாலியல் தொல்லைகளைச் சந்திருப்பார்கள். எல்லோருக்குமே அதை வெளியில் சொல்லும் துணிச்சல் இருப்பதில்லை. அப்படிச் சொல்லும் பெண்களையும், `நீ இந்த நேரத்தில் ஏன் வெளியே போனே', `நீ ஏன் இப்படி டிரெஸ் பண்ணினே', `நீ  ஏன் இப்படிப் பழகினே', `நீதான் இடம் கொடுத்தே' என்று குற்றம் சொல்கிறது இந்தச் சமுதாயம். தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆண்களைப் பற்றிப் புகார் சொல்லும் பெண்கள், பல வருடங்களாக மனதிலிருந்த பாரத்தை இறக்கிவைக்கும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன். `நான் ஏன் அவமானப்படணும்? நீதான் அவமானப்படணும்' என்கிற தொனி இதில் இருக்கிறது. அந்த அளவில் இதை நான் வரவேற்கிறேன். எல்லா அலுவலகங்களிலும் விசாகா கமிட்டியை அமைப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு.

சினிமாவிலும் நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்தபோது, நடிகை ஶ்ரீபிரியாவை தலைவியாகப் போட்டு, விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியில் நடிகை குஷ்புவும் இடம்பெற்றிருந்தார். அந்த கமிட்டியில் எங்கள் மாதர் சங்க அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் உறுப்பினராக இருந்தார். ஆனால், தற்போது  அந்த கமிட்டி எந்த நிலைமையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஒருவேளை அந்த கமிட்டி சரியாகச் செயல்பட்டிருந்தால், இந்த அளவுக்கு மீ டூ பிரச்னைகள் வராமல் போயிருக்கலாம்'' என்கிறார் வாசுகி.