Published:Updated:

முதல் சீண்டலிலேயே புகார் சொல்ல பெண் ஏன் தயங்குகிறாள்... அதை தவிர்ப்பது எப்படி? #MeToo

முதல் சீண்டலிலேயே புகார் சொல்ல பெண் ஏன் தயங்குகிறாள்... அதை தவிர்ப்பது எப்படி? #MeToo
முதல் சீண்டலிலேயே புகார் சொல்ல பெண் ஏன் தயங்குகிறாள்... அதை தவிர்ப்பது எப்படி? #MeToo

"ஒரு பெண் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக வெளியில் தெரிவித்தால், பாதிக்கப்பட்ட பெண்ணையே தவறாக நினைக்கும் அளவில்தான் நம் சமூக அமைப்பு இருக்கிறது. அந்த பயம்தான் பெண்களை வெளியில் சொல்லவிடாமல் தடுக்கிறது!"

சினிமா பிரமுகர்கள், இசைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் என யாரையும் விட்டுவைக்கவில்லை `மீ டூ‘ (#MeToo). பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் `தாங்கள் யாரால், எப்படித் துன்புறுத்தப்பட்டோம் என்பதை அம்பலப்படுத்துவதே இந்த `மீ டூ' பிரசாரத்தின் உள்ளடக்கம். `எதிர்காலத்தில் இது போன்ற அத்துமீறல்கள் நடக்கக் கூடாது' என்பதே இந்தப் பிரசாரத்தின் நோக்கம். 2006-ம் ஆண்டே இந்த #MeToo அலை அடித்தாலும், 2017 – ம் ஆண்டு அக்டோபர் மாதம் அலைசா மிலானோ என்ற அமெரிக்க நடிகையால்தான் இது பிரபலமானது. இந்தப் பிரசாரத்தை தொடங்கிய அன்றே கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தாங்கள் எப்படித் துன்புறுத்தலுக்கு ஆளானோம் என்பதை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவில் இந்தப் பிரசாரம் இந்த ஆண்டுதான் பரவலாக கவனம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் சுழன்றடித்தது `மீ டூ' புயல். 

ஒருபுறம் இந்தப் பிரசாரத்துக்கு ஆதரவு பெருகினாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஏன் சொல்லவேண்டும், பாதிக்கப்பட்டபோதே தெரிவித்திருக்கலாமே என எதிர்மறையான விமர்சனங்களும் எழுகின்றன.

ஆனால், "ஒரு பெண் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக வெளியில் தெரிவித்தால், பாதிக்கப்பட்ட பெண்ணையே தவறாக நினைக்கும் அளவில்தான் நம் சமூக அமைப்பு இருக்கிறது. அந்த பயம்தான் பெண்களை வெளியில் சொல்லவிடாமல் தடுக்கிறது" என்கிறார் உளவியல் நிபுணர் பூங்கொடி.

``நம் சமூகத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தை முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை பெரும்பாலானோருக்குப் பாலியல் அச்சுறுத்தல்கள் இருக்கவே செய்கின்றன. நிறைய குழந்தைகளுக்கு நாம் துன்புறுத்தப்படுகிறோம் என்பதே தெரிவதில்லை. நெருங்கிய உறவினர்களாலும், தங்களுக்கு நன்றாகப் பழக்கப்பட்டவர்களாலும்தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் அத்துமீறல்களை வீட்டில் சொன்னாலும் பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. சென்னை அயனாவரம் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விஷயம் வெளியே தெரிந்த பின்னர், அதே போன்று பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் என்னிடம் அழைத்து வரப்பட்டார்கள். அதற்கு முன்பாகவே பாதிக்கப்பட்டு, குழந்தைகள் வீட்டில் சொல்லியிருந்தாலும் அப்போதுதான் பாதிப்பின் வீரியம் புரிந்து பெற்றோர்கள் அழைத்து வந்தார்கள். 

குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும்போது இப்படியான சிக்கல்கள் இருப்பது போன்று பெரிய பெண்களுக்கு வேறு மாதிரியான பிரச்னைகள் இருக்கின்றன. பெண்கள், எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், பணிபுரியும் இடங்களில் பல்வேறு விதமான பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகத்தான் நேர்கிறது. வல்லுறவுக்கு உள்ளாக்குவது மட்டுமே துன்புறுத்தல் அல்ல. அனுமதியில்லாமல் தொடுவது, உரசுவது, தவறான நோக்கத்தோடுப் பார்ப்பது போன்றவையும் பாலியல் அத்துமீறல்தான். இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண்கள் அதை உடனடியாக வெளியில் சொல்லத் தயங்குவார்கள்.

தான் சொல்வதை யார் நம்புவார்கள் என்கிற அவநம்பிக்கையும், `சொன்னால் தன்னையும் பிறர் தவறாக நினைப்பார்கள், எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும்' என்கிற பயமும்தான் அதற்குக் காரணம். திரைத்துறையில் பல்வேறு புகார்கள் எழுகின்றன. அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவேளை உண்மையாக இருந்து, அந்தப் பெண்கள் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தாலும் அவர்களின் புகார்கள் பெரிதாகக் கண்டு கொள்ளப்பட்டிருக்காது. தவிர அவர்களுக்குப் பட வாய்ப்புகளும் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கும். அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு வயதும் குறைவாக இருந்திருக்கும். போதிய விழிப்புஉணர்வு, முதிர்ச்சி இருந்திருக்காது. தற்போது அவர்கள் ஓரளவுக்குப் பிரபலமாக இருப்பதால் அவர்களின் குரலுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பிருக்கிறது. நிறைய பெண்கள் புகார் தெரிவிப்பதால், `நாம் தனிமைப்படுத்தப்பட மாட்டோம்' என்கிற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் பல பெண்கள் துணிந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். காலம் தாழ்த்தி புகார் தெரிவிக்க உளவியல் ரீதியாக இதுவே காரணம்" என்கிறார் பூங்கொடி.

மேலும் ``பெண்களிடம் அவர்களின் வேலை குறித்தும், எதிர்கால முன்னேற்றம் குறித்தும் அச்சத்தை ஏற்படுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறுகிறார்கள். அதை அவர்கள் வெளியில் சொல்லாமல் விடுவதால், அடுத்தடுத்து அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். `இந்த அத்துமீறல்களுக்கு அடிபணிந்தால்தான், முன்னேற்றம் கிடைக்கும், வேலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்' என்கிற சூழல் ஏற்பட்டால், அந்த வேலையைத் தூக்கி எறியவும், அதுகுறித்து உடனடியாக வீட்டிலும், காவல்துறையிலும் புகார் தெரிவிக்கவும் பெண்கள் முன்வரவேண்டும்.

பெண்கள், எல்லா நேரங்களிலும் எல்லோரிடமும் கவனமாக இருக்கவேண்டும். பணியிடங்களில் யாராவது தனியாக அழைத்தால் செல்லக் கூடாது. காரணமும் தேவையுமில்லாமல் இரவு நேரத்தில் வேலை செய்யச் சொன்னால் செய்யக் கூடாது. குடும்பத்தாருக்கும் இதில் நிறைய பொறுப்பிருக்கிறது" என்கிறார் பூங்கொடி.

பாலியல் ரீதியாகப் பெண்கள் பாதிக்கப்படும்போதெல்லாம், பெண்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை சொல்லும் நிலையில்தான் இன்னும் நம் சமூகம் இருக்கிறது. பாலியல் வக்கிரவாதிகளின் மனநிலை சாக்கடையாக இருக்கும்வரை, அது நம் குழந்தைகளின் மீதும், பெண்களின் மீதும் தெறிக்காமல் தற்காத்துக் கொள்வதுதான் நமக்கிருக்கும் ஒரே வழி.

பின் செல்ல