Published:Updated:

#MeToo இயக்கம் ஆரம்பித்தது யார்.. ஏன்.. எதிர்காலம் என்ன? #TaranaBurke

#MeToo-வால் மனம் பாதிக்கப்படுகிறதா? அவற்றைப் படிக்க வேண்டாம். படிக்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வும் வேண்டாம். ஆறு மாதம் கழித்து நீங்கள் #MeToo சொல்ல விரும்பினாலும் இந்த இயக்கம் இருக்கும். இது அழியாது.

#MeToo இயக்கம் ஆரம்பித்தது யார்.. ஏன்.. எதிர்காலம் என்ன? #TaranaBurke
#MeToo இயக்கம் ஆரம்பித்தது யார்.. ஏன்.. எதிர்காலம் என்ன? #TaranaBurke

#Metoo இதுவரை பெண்களை வெறும் பாலியல் பொருளாக மட்டுமே பார்த்துவந்த ஆண்களுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக உருவெடுத்துள்ளது. பெண்களிடம் சமூகத்திலிருக்கும் மிகப்பெரிய சிக்கல், தீர்க்க முடியாத பெரிய பிரச்னை என்னவென்று கேட்டால் அது பாலியல் ரீதியிலான வன்முறைகளைத்தான் சொல்வார்கள். உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒருவகையில் ஓரிடத்தில் நிச்சயமாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்களாகவே இருப்பார்கள்.

இதனாலேயே பொதுவெளியின்மீது மிகப்பெரிய அச்சத்துக்குள்ளாகி வீட்டிற்குள் அடைபட்டுகிடந்தவர்கள், கிடப்பவர்கள் நிறைய. ஆனால், எதிர்காலம் நிச்சயம் பெண்களுக்கு இப்படியிருக்காது. அதற்கு இந்த #MeToo மட்டும் காரணமல்ல. இது ஓர் ஆரம்பம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதன்வடிவம் மாறும். பெண்கள் தங்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கான தீர்வை, அதை எதிர்கொள்ளும் வழியைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சூழலுக்கு இப்போது இன்னும் மிக நெருக்கமாக வந்துவிட்டார்கள். ஒழுக்கம், புனிதம் என்ற சொற்களால் பெண்களை இனிமேல் இந்தச் சமூக ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.

அதன் ஆரம்பப் புள்ளிதான் இன்று நடந்துகொண்டிருக்கும் இந்த #Metoo அமைப்பும் அதன்வழி வெளிப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளும். இதன் விளைவுகள் அரசியலில் அமைச்சர் பதவி விலகுதல் முதல் கூகுள் நிறுவனத்தில் மிக முக்கியமான அதிகாரிகள்  வேலை இழப்பு, சினிமா படப்படிப்பு நிறுத்தம் வரை மிகத் தீவிரமாக இருக்கின்றன. 

`தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்ட்டன் தன்னைப் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு உள்ளாக்கினார்’ என்று ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோவா  #MeToo என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து பெண்கள் பலர் ஹார்வி வின்ஸ்ட்டன் மீது பாலியல் புகார்களைத் தெரிவிக்க, #MeToo-வை வைத்துக்கொண்டு ஹாலிவுட் சினிமாவில் பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைப் பதிவிட ஆரம்பித்தார்கள். அதன்பின் மிகத் தீவிரமாக இது எல்லாப் பகுதிகளுக்கும் பரவியது.

இந்தியாவிலும் அப்போது கல்வித்துறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் பேசினார்கள். இதுவெல்லாம் நடந்தது 2017-ல். பெரும்பாலோனோருக்கு #Metoo என்பதே அப்போதுதான் தொடங்கியதுபோல என்ற எண்ணம் இருக்கும்.  ஆனால், உண்மையில் #Metoo தோற்றம்பெற்றது அப்போதில்லை. அதற்குப் பத்துவருடத்திற்கு முன்பே தரானா புர்கே என்பவரால் இந்த #MeToo உருவாக்கப்பட்டுவிட்டது. 2006-ல் அவர் இந்தச் சொல்லை உருவாக்கியபோதே இதன் வலிமையை நன்கு உணர்ந்துதான் உருவாக்கியுள்ளார் போல.  

இப்போது 44 வயதாகும் புர்கே தன்வாழ்வில் 25 ஆண்டுகளைச் சமூக செயல்பாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறார். விளிம்புநிலை மக்களுக்கான பணிகளை, உதவிகளைத் தொடர்ந்து செய்கிறார். குறிப்பாகக் கறுப்பினப் பெண்களின் பிரச்னைகள் சார்ந்து தொடர்ந்து செயலாற்றிவருகிறார். அலபாமாவில் அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது அவர் ஹெவன் என்றொரு 13 வயதுச் சிறுமியைச் சந்திக்கிறார். பிரச்னைகள் நிறைந்த பெண் என்று எல்லாரும் அவளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால், பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாலேயே அவள் அப்படி நடந்துகொள்கிறாள் என்று தரானா புர்கே அறிந்துகொள்கின்றார்.

"என்னிடம் அவள் உதவிக்கு வந்தாள். ஆனால், அவளுக்கு எப்படி உதவி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. வேறு ஒருவரிடம் அவளை கவுன்சிலிங்க்கு அனுப்பினேன். ஆனால், அதன்பிறகு அவளுக்கு என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை. எனக்கும் இப்படி நடந்துள்ளது என்று அன்றே நான் சொல்லியிருக்க வேண்டும். அப்படி ஏன் எனக்குச் சொல்லத்தோன்றவில்லை என்று என்னையே நான் விடாமல் கேட்டுக்கொள்கிறேன். இன்றுவரை அது ஒரு குற்ற உணர்ச்சியாக எனக்குள் நிலைத்துவிட்டது. அதை அடிப்படையாக வைத்தே #MeToo-வை ஆரம்பித்தேன். நான் எப்படிப் பாதிக்கப்பட்டேன், நான் எப்படி இதிலிருந்து வெளிவந்தேன் என்பதைப் பகிர்ந்துகொண்டேன். அது மற்றவர்களுக்கும் உதவியது" என்று #MeToo தோற்றுவிக்கப்பட்டதன் பின்னணி பற்றிப் பகிர்ந்துள்ளார் புர்கே.

"பாலியல் வன்முறை எந்தளவு பரவியிருக்கிறது என்பதை, பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட யாரும் தனியாகப் போராடவில்லை என்கிற ஒற்றுமையை உணர்த்தப் பெண்கள் இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மிக நுட்பமாகப் புரிந்துகொள்ளப்படவேண்டியது இது. அதை #MeToo இயக்கத்தின் மூலம் அழகாகச் செய்தார்கள். எனக்கு அது நெகிழ்ச்சியாக இருந்தது. இது வெறும் ஹேஷ்டேக் அல்ல. இது ஒரு பெரிய உரையாடலின் தொடக்கம். ஒட்டுமொத்த சமுதாயமும் நலமடைவதற்கான இயக்கம்" என்று அதை எப்படிப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதைப் பற்றியும் கூறியுள்ளார்.

ஆனால், இப்படி ஒன்று உருவாக்கப்பட்ட உடனேயே அது தீயாகப் பரவி எல்லோரும் தங்களுக்கான பிரச்னைகளைப் பேசிவிடவில்லை. #MeToo-வைப் பெரிய அளவில் எடுத்துச் செல்லப்படும்முன் `மை ஸ்பேஸ்’ என்ற பக்கத்தில் 2006-ல் எழுதத் தொடக்கினார். அதன்பின்னர்தான் அது பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வெளியே தெரிய ஆரம்பித்தது. ஏனெனில், ட்விட்டரில் பெரிய அளவில் அவருக்குப் பின்தொடர்பவர்கள் அப்போது இருந்திருக்கவில்லை. அதனால் அவருடைய பக்கம் தவிர #MTtoo  பற்றிய செய்திகள் பெரிதாக வெளியே வந்திருக்கவில்லை. அப்போது இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட அவரது நண்பர்களே தங்கள் பக்கங்களில் #MeToo பற்றிப் பதிவிட்டுள்ளனர். அதன் பின்னரே இது பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.

பின்னர், இதுவொரு மந்திரத்தைப்போலப் பரவுவதை உணர்ந்துகொண்ட தரானா புர்கே “#Metoo  என்பது ஒரு ஹேஷ்டேக் அல்ல. ஓர் இயக்கம். ஓர் ஆயுதம். இது வைரலானதன்மூலம்  பாதிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் ஒரு பெரிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்த நம்பிக்கை தேவைதான். ஆனால், அந்த நம்பிக்கையைத் தக்கவைக்கத் தொடர்ந்த பணிகளால் மட்டுமே முடியும். தங்களுக்கு நடந்த வன்கொடுமைகளைப் பொதுவெளியில் சொல்வது மட்டுமல்ல, அப்படிச் சொன்ன பிறகு நடக்கப்போவதையும் அவர்களால் எதிர்கொள்ளமுடியுமா என்பதும் பெரிய கேள்விதான். என்னைக் கேட்டால் நான் இதற்கு எல்லாத் தரப்பிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கப்பெற வேண்டும் என்பேன். அதற்காக,  நீங்கள் உங்கள் குற்றச்சாட்டுகளைப் பகிர வேண்டும் என்று கட்டாய்மில்லை. வெறும் #MeToo பதிவுதானே போட்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்லக் கூடாது. அவர்களுக்கும் ஆதரவு வேண்டும்" என்கிறார். அப்போது மட்டுமல்ல இப்போதும் இதைப்பற்றிப் பேசும் பெண்கள், பேசியபின் பல்வேறு சிக்கல்களுக்குள்ளாவதைப் பார்க்க முடிகிறது இல்லையா?

பல ஆயிரம் குற்றச்சாட்டுகள் வந்ததால்தான் #Metoo இயக்கம் பெண்கள் மத்தியில் ஓர் ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது. ஆனால், தனிப்பட்டமுறையில் பெண்கள் இது சார்ந்து என்ன உணர்கிறார்கள்? பெண்களிடம் பேசினால் மேம்பாட்டுக்கான நம்பிக்கை, சலிப்புணர்வு, ஒற்றுமை, மன அழுத்தம் என்று இது சார்ந்து எழும் பல உணர்வுகளைப் பகிர்வார்கள். இதற்கு தரானா ஒரு வழி சொல்கிறார்: "நீங்கள் பாதிக்கப்பட்டவரா? ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா? பல அமைப்புகள் இருக்கின்றன. அவற்றோடு இணைந்து செயலாற்றுங்கள். #MeToo கதைகளிலேயே மூழ்கி மனம் பாதிக்கப்படுகிறதா? அவற்றைப் படிக்க வேண்டாம். படிக்காமல் இருக்கிறோமே என்று குற்ற உணர்வும் வேண்டாம். பொறுமையாக உங்கள் சமூகச் செயல்பாட்டை நிகழ்த்தலாம். ஆறு மாதம் கழித்து நீங்கள் #MeToo சொல்ல விரும்பினாலும் இந்த இயக்கம் இருக்கும். இது அழியாது" என்கிறார்.

இந்த அமைப்பு முதன்முதலில் கறுப்பினப் பெண்களால்தான் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவிலும் தலித் பெண்கள்தான் கையில் எடுத்தார்கள். மாற்றங்களுக்கான மாற்றங்கள் தேவை என்று நினைக்கும் ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து வந்த குரல் என்பதாலேயே இதன் விளைவுகள் சமூகத்தில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து செய்திகள் கிடைக்கும் இன்றைய சூழலில் #MeToo போன்ற இயக்கங்கள் பெரிய அளவில் சமூகத்தைத் தட்டிக்கேட்கின்றன. ஒருவருக்கு எதிரான தனிப்பட்ட குற்றச்சாட்டு என்பதிலிருந்து இது பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய இயக்கமாக மாறியது. எளிதில் கடந்துசென்றுவிடக்கூடிய விஷயம் அல்ல என்று பொதுமக்களுக்குத் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு!