Published:Updated:

"என்னை ஒதுக்குன பெற்றோர்கள் இப்போ என்னை ஏத்துக்கிட்டாங்க!" திருநங்கை சத்யா

" `நீ இப்படி மாறி பிச்சை எடுக்கப் போற, இல்லைன்னா பாலியல் தொழில் செய்யப் போற.. அதுக்கு எங்க மானத்தை ஏன் வாங்குற'னு சொன்னாங்க. அப்பவே, `உங்க முன்னாடியே நல்லா வாழ்ந்து காட்டுறேன்.. சத்யாவுடைய அம்மாவா நீங்கனு எல்லோரும் கேட்குற மாதிரி நடந்துப்பேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன்!"

"என்னை ஒதுக்குன பெற்றோர்கள் இப்போ என்னை ஏத்துக்கிட்டாங்க!" திருநங்கை சத்யா
"என்னை ஒதுக்குன பெற்றோர்கள் இப்போ என்னை ஏத்துக்கிட்டாங்க!" திருநங்கை சத்யா

ன்றைய காலகட்டத்தில் திருநங்கைகள் படிப்படியாக முன்னேறி தங்களுடைய உரிமைக்காகப் போராடி, அவற்றில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். எந்த வேலையைக் கொடுத்தாலும் உழைக்கத் தயாராக இருக்கிறோம்; வாய்ப்பினைக் கொடுக்காமல் ஒதுக்குவது எவ்வகையில் நியாயம் என்று பல திருநங்கைகள் இந்தச் சமூகத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலியல் ரீதியாகவும், கடை ஏறுதலும் மட்டுமே திருநங்கைகளின் அடையாளமாக இருந்து வந்த நிலையில் அதை உடைக்கப் பலரும் முயன்று வருகிறார்கள். அந்த வகையில் தஞ்சை பெரிய கோயிலில் பாலிதீன் பைகளைக் கொண்டு வரும் பக்தர்களிடம் துணிப்பைகளைக் கொடுத்து அதைப் பயன்படுத்த விழிப்பு உணர்வு அளிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார், திருநங்கை சத்யா. அவரிடம் பேசினோம்.

``என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமம். என்னுடைய முந்தைய பெயர் மணிகண்டன். எனக்கு ரெண்டு அக்கா, ஒரு அண்ணன். சின்ன வயசுல இருந்தே என் உடம்புல மாற்றம் இருந்துச்சு. பெண் பிள்ளைங்க மாதிரியே நடந்துக்க ஆரம்பிச்சேன். எங்க வீட்டுல என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்துட்டு எல்லோரும் கண்டிக்க ஆரம்பிச்சாங்க. பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் மாற்றத்தை வெளிக்காட்டாம இருக்க முடியல. அதனால, வேற வழியே இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதாகப் போச்சு" என்றவர் சிறிதுநேர மெளனத்துக்குப் பின் தொடர்ந்தார்.

``வீட்டை விட்டு வெளியேறினதும் எங்க ஆளுங்க கூட சேர்ந்து பெங்களூருக்குப் போனேன். அங்கே என்னை மாதிரியான திருநங்கைகள் கூட கடை ஏறினேன். அங்கே கிடைச்ச பணத்தை வைச்சு ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். ஆபரேஷன் முடிஞ்சு 41 நாள் கழிச்சு எங்க அம்மா, அப்பாவைப் பார்க்குறதுக்காக ஊருக்கு வந்தேன். அங்கே என்னைப் பொண்ணா பார்த்ததும் அம்மா கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. எங்க வீட்டுல உள்ளவங்க என்னை ஒதுக்கிட்டாங்க. என் கூடப் பொறந்தவங்க எல்லோரும், `நீ இப்படி மாறி பிச்சை எடுக்கப் போற, இல்லைன்னா பாலியல் தொழில் செய்யப் போற.. அதுக்கு எங்க மானத்தை ஏன் வாங்குற'னு சொன்னாங்க. அப்பவே, `உங்க முன்னாடியே நல்லா வாழ்ந்து காட்டுறேன்.. சத்யாவுடைய அம்மாவா நீங்கனு எல்லோரும் கேட்குற மாதிரி நடந்துப்பேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன்" என்றவர் அதற்கடுத்து அனுபவித்த வலிகளை வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாது.

``கையில இருந்த காசை வைச்சு ஆடு, மாடு வாங்கிப் பொழப்பு நடத்திட்டு இருந்தேன். அந்தச் சமயம் தொழிற்பயிற்சி மையத்துல இலவசமா ஆட்டோ ஓட்ட கத்துக் கொடுக்குறாங்கன்னு கேள்விபட்டேன். அங்கே போய் ஆட்டோ ஓட்ட கத்துக்கிட்டேன். அப்புறம், அரசாங்கம் மூலமா இலவசமா கிடைச்ச ஆட்டோவை ஓட்டிட்டு இருந்தேன். திருநங்கையா ஆட்டோ ஓட்டும்போது இரண்டு விதமான பிரச்னைகளை சந்திச்சேன். முதலாவது, நான் திருநங்கைன்னு தெரிஞ்சு என் ஆட்டோவில் யாரும் ஏற மாட்டாங்க. சில பெண்களே என்னைப் பார்த்து ஒதுங்கியிருக்காங்க. இரண்டாவது, பாலியல் ரீதியான சீண்டல்களை அதிகமா சந்திக்க வேண்டியதா இருந்துச்சு. அதனால வேற வழி இல்லாம ஆட்டோ ஓட்டுறதை நிறுத்த வேண்டியதாச்சு.

நிறைய இன்டர்வியூவுக்குப் போனேன். ஆனா, எங்கேயுமே வேலை கிடைக்கல. இதுக்கிடையில டிப்ளோமா ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சேன். துப்புரவு வேலை பண்ணாலும், அரசு சார்ந்த ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடணும்னு ஆசை. அதுக்காகப் பல முயற்சிகளில் ஈடுபட்டேன். கலெக்டரைச் சந்திச்சு என் பிரச்னைகளைச் சொல்லி அழுதேன். திவாஸ் ரோட்டரி கிளப்பில் நிச்சயம் உங்களுக்கு உதவி பண்றோம்னு சொல்லியிருந்தாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அவங்க சொன்ன மாதிரியே எனக்கு ஒரு வேலை கொடுத்தாங்க. அது என்ன வேலைன்னா, தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகிற பக்தர்கள் கையில் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வந்தாங்கன்னா அந்த பிளாஸ்டிக் பையை வாங்கிட்டு அதுக்குப் பதிலா, நாங்க தைச்சு வெச்சிருக்கிற துணிப்பைகளைக் கொடுத்து பொதுமக்களுக்கு துணிப்பை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவோம். இதை கலெக்டர்தான் ஓப்பன் பண்ணி வைச்சாங்க. திவாஸ் ரோட்டரி கிளப் மூலமா எனக்குச் சம்பளம் கொடுக்குறாங்க. நிம்மதியா வேலை பார்க்குறேன். ஆனா, இது நிரந்தரமான வேலை கிடையாது இல்லையா? அதுக்குத்தான் அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இப்போ எங்க வீட்டுல உள்ள எல்லோரும் என்னை முழுமையா ஏத்துக்கிட்டாங்க. ஆனாலும், அவங்களை விட்டு விலகிதான் இருக்கேன்.

திருநங்கைன்னா கை ஏந்துவாங்க இல்லை பாலியல் தொழிலுக்குப் போவாங்கன்னு சொல்றதை மாத்தணும். எல்லோருக்கும் முன்மாதிரியா இருக்கணும்" என நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார், சத்யா.