Published:Updated:

``இந்தியா முழுவதும் நாங்கள் சந்தித்த பெண்கள்!”- ஓர் அரசியல் பயணியின் அனுபவம்!

பிள்ளைகளுக்குக் கல்வி போதிக்கும் வேலை முழுவதையும் பெண்களுக்கே கொடுக்க வேண்டும் - பெரியார்

``இந்தியா முழுவதும் நாங்கள் சந்தித்த பெண்கள்!”- ஓர் அரசியல் பயணியின் அனுபவம்!
``இந்தியா முழுவதும் நாங்கள் சந்தித்த பெண்கள்!”- ஓர் அரசியல் பயணியின் அனுபவம்!

ங்கும் எதிலும் ஆண்களுடைய தலையீடு அல்லது ஆணாதிக்கம் சூழ்ந்திருக்கும் சமூகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வன்முறைகள் மட்டுமே அதிகரித்திருக்கும் போது அத்தனை பொறுப்புகளுக்கும் பெண்கள் தலைமையேற்றால் எப்படி இருக்கும் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அப்படிக் குழுவாகச் சேர்ந்த பெண்கள் இந்தியா முழுவதும் அமைதியை விதைப்பதற்காக செப்டம்பர் 21 தொடங்கி அக்டோபர் 13 வரை பயணம் மேற்கொண்டிருந்தார்கள். முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே முன்னெடுத்து பெண்கள் மட்டுமே மேற்கொண்ட பயணம். அமைதிக்கான பயணம் என்றாலும் அத்தனை மாநிலங்களிலும் இருக்கும் பெண்களை அறிந்துகொள்ள எங்களுக்கு அது ஒரு வாய்ப்பாகவே அமைந்தது. உண்மையில் அத்தனை பெண்களுக்கும் பொறுப்புகளைக் கொடுப்பது சாத்தியமா? அவர்கள் வலிமையுடனும் தலைமைப் பண்பு பற்றிய புரிதலுடனும் இருக்கிறார்களா? என்பதை இந்தப் பயணங்களின் வழியாக எங்களால் அறிந்துகொள்ள முடிந்தது.

இந்திய மகளிர் சம்மேளனம் (NFIW) மற்றும் அன்ஹத் (ANHAD) என்ற அமைப்புகள் ஒன்றிணைந்து தோழர்கள் அன்னி (NFIW ) ஷப்னம் ஹாஷ்மி, (ANHAD) லீனா டேப்ரூ,போன்றவர்கள் கலந்து பேசி, டெல்லியில் இந்தப் பரப்புரை பயணம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. பெண்களின் ஒற்றுமைக்கான மிகப் பெரிய களமாக இந்தப் பயணம் உருவானது. இந்தியாவின் ஐந்து முனைகளிலிருந்து ஐந்து குழுக்களாகத் தனித்தனியே வெவ்வேறு பேருந்துகளில் தொடங்கிய இந்தப் பயணத்தில் சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டோம், எங்களால் எங்களது ஒற்றுமையின் வலிமையால் சுமார் 200 இடங்களில் 500 நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தோம். 

ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்பின் அறிமுகமில்லாத பெண்கள் இருந்தோம். நான் டெல்லியிலிருந்து கிளம்பி உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் வழியாக மீண்டும் டெல்லி சென்றடைந்த குழுவில் பயணித்தேன். இந்தக் குழு இந்தியாவின் மையப் பகுதியில் பயணித்ததால் பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளையும் மக்களையும் நாங்கள் கண்டோம். 

 நாங்கள் சந்தித்த பெண்கள் முக்காடு அணிந்திருந்தார்கள் அல்லது பர்தாவைக் கொண்டு மூடியிருந்தார்கள். அந்தப் பெண்களின் முக்காடுகளுக்குள் அவர்களின் முகவரிகளைத் தேடினோம். கைகளில் நிறைந்த வளையல்கள், கழுத்தில் கருகமணித் தாலி, நெற்றி வகிட்டிலிருந்து 4 இன்ச் நீளத்துக்கு நீண்டிருக்கும் குங்குமம், கால்களைச் சுற்றிலும் சிவப்பு நிறச் சாயம் இதுதான் அவர்களின் உடல் அடையாளம். மற்றபடி அவர்களது நிலம் சாதி மற்றும் மதம் சார்ந்து அவர்களது பண்புகள் மாறியிருக்கின்றன. தெருமுனையில் அமைதியாக உரையாடலாம் வாருங்கள் என்று அழைத்தால் ``வீட்டின் கேட்டைத் தாண்டி நாங்கள் செல்லக் கூடாது. இது எங்களின் கணவருக்கும் மாமனார்க்கும் பிடிக்காது“ என்று மறுக்கிறார்கள். இரவு 7 மணிபோல் நகரங்களில் உள்ள மார்க்கெட்களில் கூட பெண்களைக் காண முடிவதில்லை. குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் பர்தாக்கள் போர்த்தப்பட்டு வெளியே வரும்போது நிச்சயமாக ஆண் துணை இல்லாமல் வரக் கூடாது என்ற அவல நிலையும் உள்ளது. அப்படி ஆண் துணை இல்லாமல் அவர்கள் வெளியே எட்டிப்பார்ப்பது கூட மறுக்கப்படுகிறது.

அத்தனை பெண்களின் கதவுகளைத் தட்டிக் கைப்பிடித்து வெளியே அழைத்து வந்து கூட்டம் கூட்டி நமது உதடுகள் சத்தமாகப் பேச வேண்டிய உரிமைகள் குறித்து அமைதியாக உரையாடினோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் ஷரத்து 19 (1) (a) பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை குறித்து அவர்களுக்குப் புரியவைத்தோம். உண்மையில் பெண்களின் நிலை என்பது கடந்த பல வருடங்களைக் காட்டிலும் தற்போது மிகவும் அச்சுறுத்துவதாய் உள்ளது. பாலியல் வன்முறை தன்னுடைய கோரமுகத்தைச் சின்னஞ்சிறு குழந்தைகளிடம் கூடக் காட்டும் கொடூரம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மத்திய இந்தியப் பகுதிகளில் இப்படியான குற்றங்கள் அதிகரித்து இருப்பதால ``பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக“ அண்மையில் சில தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பியதைப் பற்றி அந்தப் பெண்களிடம் பேச வேண்டியது அவசியமாக இருந்தது. நமக்கான உரிமைகள் பற்றிய விழிப்புஉணர்வையும், அன்பையும், ஃபாசிசம் எதில் இருந்தாலும் அதனை எதிர்க்கும் உணர்வையும் அவர்களிடம் விதைத்தோம். 

பெண்கள் அடிமைகளாகவும், சமையல் அறைக்கான... பிள்ளைப் பெறுவதற்கான... இயந்திரங்களாகவும் நடத்தப்படுவதற்கான சாட்சியமாக  நாங்கள் பயணித்த மத்திய இந்தியாவின் ஊர்ப் பகுதிகள் இருந்தன. முக்காடு போட்டுக்கொண்டு சமையலறையில் சப்பாத்திச் சுடத் தெரிந்திருப்பது மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரமாக இருக்கிறது. மிகைப்படுத்தவில்லை...ஆனால், தென்னிந்தியப் பெண்களிடம் உள்ள உரிமைக்கான விழிப்புஉணர்வும், சுயமாக வேலைக்குச் சென்று சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்புகளும் அந்தப் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது. பெரியாருக்குத் தென்னாட்டுப் பெண்களின் நன்றி! 

நிலம் சார்ந்த வேலைகளில் ஈடுபடும் பெண்கள் அதிக அளவில் சுரண்டப்படுகிறார்கள். நடுத்தர வர்க்க மற்றும் இடைநிலைச் சாதியக் கட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மற்றபடி அங்கிருக்கும் உழைக்கும் வர்க்கத்து அல்லது பழங்குடியினப் பெண்கள் பார்க்க திடமாக இருக்கிறார்கள். நிமிர்ந்த நடைபோட்டு வயல் வேலைகள், விறகு பிளத்தல், பீடித் தொழில் போன்ற தினக்கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் பொருளாதாரச் சார்புநிலையற்ற தைரியம் நிறைந்தவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களின் அரசியல் புரிதல் தங்களின் வறுமையும் உணவுத் தேவையோடு மட்டுமே குறுகியிருக்கிறது. அவர்களின் மாநிலத்தில் என்ன பிரச்னை இருக்கிறது எனக் கேட்டால் கூட, வறுமையைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை, ரேஷன் கார்டு இல்லை, கழிப்பறை இல்லை, விலைவாசி உயர்வு என வாழ்வியல் சிக்கல்களை சொல்கிறார்கள். அந்தப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக தைரியமாகப் பேசுகிறார்கள். ஆனால் அதைக் கடந்த பிரச்னைகள் அவர்களுக்குப் புலப்படுபவதில்லை. ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் இளவயது திருமணங்களும், இளவயதில் குழந்தை பெறுவதும் அதிக அளவில் உள்ளது. பள்ளி செல்லும் வயதில் உள்ள பெண்கள் எல்லாம் கையில் குழந்தையுடன் நிற்பது பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெரிய குற்றமாகக் கருதப்படாத போக்கு அதிகமாக உள்ளது. மற்றொரு பக்கம் பெண்கள் சுகாதாரம் மிகமோசமாக உள்ளது. சுவச் பாரத் திட்டம் கழிப்பறை அடைந்துகிடக்கும் வீணான பொருள்களுடன் அடைந்து போயிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக கிராமப் பகுதியில் வசிக்கும் பெண்கள் பெரும்பாலும் திறந்தவெளி கழிப்பிடங்களையே நாடுகிறார்கள். இதனால் நோய் தொற்று அதிகரிக்கிறது. மாதவிடாய் சுகாதாரமும் அவர்களிடம் ஆரோக்கியமானதாக இல்லை. சானிடரி நாப்கின்கள் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் உபயோகிக்கும் துணிகளிலும் இருக்கும் துர்நாற்றங்கள் அந்தப் பெண்களின் முகங்களை நாம் மறக்கமுடியாமல் செய்துவிடுகிறது.    

துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை அனைத்து மாநிலங்களில் இருப்பது போல அங்கும் மோசமாகவே இருக்கிறது. அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படுவது இல்லை. மத்திய பிரதேசத்திலுள்ள ஓர் ஊரில் பலரும் வந்து போகும் ஓர் இடத்தில் ஒரு பெண் குழாயடியில் அமர்ந்துகொண்டு அப்படியே ஆடையோடு தலைக்கு மட்டும் ஷாம்பூ போட்டுக் குளித்துக்கொண்டிருந்தார். விசாரித்ததில் அவர் ஒரு துப்புறவுத் தொழிலாளர் (பெயர் குறிப்பிட மறுத்துவிட்டார்) என்பதையும் தங்கள் வீட்டுப் பகுதியில் 6 மணிக்கு மேல் தண்ணீர் வராது என்பதால் அவர் அங்கே குழாயடியில் குளிப்பதாகவும் சொன்னார். அதோடு அவருக்கு நகராட்சியின் சார்பில் வருடத்துக்கு ஒரு புடவையும் துப்புரவுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கிக் கொள்ள கொஞ்சம் பணமும் கொடுப்பார்கள் என்றார். அந்த உபகரணங்கள் பழுதடைந்தால் மீண்டும் வாங்க முடியாமல் வெறும் கைகளாலேயே துப்புரவு செய்யவேண்டும்.

அரசியல் ஈடுபாடுள்ள சில பெண்களையும் பயணங்களில் சந்தித்தோம். அவர்களில் சில இஸ்லாமியப் பெண்கள் ``பொட்டு" வைத்துக்கொள்கிறார்கள். சில இந்துப் பெண்கள் ஓதும் போது தலையை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குப் பிடித்ததைச் செய்வதாகவும் கடவுள் எல்லாருக்கும் ஒருவரே என அவர்கள் நம்புவதாகவும் கூறினார்கள். மதவாத அரசியல் இவர்களை எவ்வகையிலும் பிளவுபடுத்திவிடமுடியாத அளவுக்குத் தெளிவான பார்வை இவர்களிடம் இருக்கிறது.

எங்களது ஐந்து குழுக்களின் பயணமும் டெல்லியின் நாடாளுமன்றச் சாலையில் வந்தடைந்தது. அரசியல் புரிதல் உள்ள பெண்கள் என்றாலே ஆணாதிக்கத்துக்கு எதிராக மட்டுமே குரல்கொடுப்பவர்கள் என்கிற பிம்பத்தை உடைத்தோம். ஒட்டுமொத்த மக்களுக்கான நீதிக்காக அன்பால் இணைந்து பேசாத உதடுகளைப் பேசத் தூண்டிய வரலாற்றை நாங்கள் பதிவு செய்தோம். வலிமையான பெண் தன் அருகில் இருப்பவளை வலிமையாக்குவதில்தானே பெண்ணியத்தின் வெற்றி இருக்கிறது.