Published:Updated:

உள்ளாடை விதியை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்!

உள்ளாடை விதியை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உள்ளாடை விதியை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்!

தேவை அதிக கவனம்ரமணா

யனாவரம் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை போன்ற அதிர்ச்சியான பின்னணியில்தான் நாம் நம் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக் கிறோம். குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ பார்த்துப் பார்த்துச் செய்கிற நாம், அவர்களின் பால்யம் தொலைந்துவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். விரும்பத்தகாத நிகழ்வுகள் அல்லது பிரச்னைகளை ஒரு குழந்தை எப்படி கையாள வேண்டும் என அறிவுறுத்துவது பெற்றோரின் கடமையே. கூட்டுக்குடும்ப முறையிலிருந்து விலகி, குட்டித்தீவுகளாக வாழ்ந்துவரும் இச்சூழலில், குழந்தை வளர்ப்பில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியமாகியிருக்கிறது. எந்த விஷயத்தையும் நம் அம்மா அப்பாவிடம் தைரிய மாகச் சொல்லலாம் என்கிற நம்பிக்கையை நம் குழந்தைகளுக்கு அளிப்பதே அபாயங்களைத் தவிர்க்கும் முதல்படி. நம் பெற்றோரால் மட்டுமே நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணமும் குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டும். 

அன்றாடப் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள், நண்பர்கள், பள்ளிச்சூழல் என்று தங்கள் குழந்தை சம்பந்தப்பட்ட அனைத் தையும் பெற்றோர் அறிந்து வைத்திருப்பது முக்கியம். குழந்தையின் நடத்தையில் ஏதேனும் மாறுதல் தெரிந்தால், உடனடியாக உஷாராக வேண்டியது அவசியம். ஆரம்ப கட்டத்திலேயே குழந்தையிடம் என்ன பிரச்னை என்பதைப் பக்குவமாகக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

உள்ளாடை விதியை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்!

உடல்ரீதியான துன்புறுத்தல்களை அறிவது எப்படி?

* பள்ளியிலோ, குடியிருப்பு வளாகத்திலோ, வெளியிடங்களிலோ குழந்தைகள் ஏதேனும் வன்முறைக்கு ஆளாகியிருப்பின், குழந்தையின் உடலில் சில பகுதிகள் சிவந்து காணப்படக்கூடும். நகம் பதிந்த அறிகுறிகள் அல்லது அடித்ததற்கான அடையாளங்கள் வெளிப்படையாகவே தெரியும். காயங்கள், சூட்டுக் காயங்கள், தழும்புகளும் இருக்கக்கூடும்.

குறிப்பிட்ட ஓர் இடம் அல்லது நபர் குறித்து  குழந்தை அதிக ஆர்வம், அதீத பயம், கோபம், எரிச்சலை வெளிப்படுத்தினால், அது பற்றி மென்மையாக  விசாரிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இடத்துக்குப் போக மறுத்தல், அது பற்றிய பேச்சை எடுத்தாலே கோபம், முரட்டுத்தனமான சுபாவம் போன்றவையும் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளே.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அறிவது எப்படி?

சந்தேகப்படும்படியான ரத்தக் கீறல்கள், காயங்கள், தொண்டையில் அடிக்கடி நோய்த்தொற்று, சிறுநீர்த்தொற்று போன்ற பிரச்னைகள் இருத்தல்...

அடிக்கடி வயிற்றுப் பகுதியில் வலி, பிறப்புறுப்புகளில் வலி, எரிச்சல் போன்றவை... ஏதேனும் வித்தியாசமான அறிகுறிகள், நடக்க, உட்கார சிரமம்... இவற்றில் ஒன்றோ, பலவோ இருப்பின் கூடுதல் கவனம் தேவை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குழந்தையின் நடத்தைகளில் மாற்றமா?

திடீரென உடை விஷயத்தில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளாடை அணிய மறுத்தல் அல்லது அதிக உள்ளாடைகளை அணிதல், பாலியல் வார்த்தைகளைத் தயக்கமின்றிச் சொல்லுதல், உடலுறவு பற்றித் தேவையில்லாமல் பேசுதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், விரல் சூப்புதல், தனிமைக்கும் இருட்டுக்கும் பயப்படுதல், விருப்பங்கள் குறைதல், எதிலும் நாட்டமின்றி இருத்தல், அதிக எரிச்சல், கோபம், சத்தமிடுதல் போன்றவையும் உடனடியாகக் கவனத்தில்கொள்ள வேண்டிய அறிகுறிகள்.

உள்ளாடை விதியை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்!

உணர்வு ரீதியான துன்புறுத்தலா?

குழந்தை உணர்வு ரீதியிலான பாதிப்பு களுக்கு ஆளாகியிருந்தால், பொதுவாக அவர்களின் உணவுப் பழக்கம் மாறுபடும். அதிக அளவு சாப்பிடுவார்கள். அல்லது சாப்பிடவே மாட்டார்கள். தூக்கம் தொலைப்
பது, கனவு கண்டு அலறுவது, உளறுவது, படுக்கையை நனைப்பது போன்ற பிரச்னைகள் இரவில் ஏற்படும். கவனமின்மை, பதற்றம், கோபம், கூச்சலிடுவது போன்றவையும் காணப்படலாம். அடிக்கடி ஏதோ ஒரு வலி இருப்ப தாகவும் கூறுவார்கள். மற்ற குழந்தைகளையோ, தன்னையோ துன்புறுத்துவார்கள். தனிமை யில் இருப்பார்கள்.

குழந்தைகளின் நடத்தையை அன்றாடம் கவனித்து, அவர்களின் உலகில் எளிதாக நுழைந்து, அரவணைத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

PANTS பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்!

சர்வதேச அளவில் PANTS என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருள் கொடுக்கப்பட்டு `உள்ளாடை விதி' (அண்டர்வேர் ரூல்) என்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டியது அவசியம்.

Privates are private:
உள்ளாடைகளால் மூடப்பட்டிருக்கும் தங்களின்  பிரைவேட் பகுதிகளை யாரும் தொட அனுமதிக்கக் கூடாது (சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் மருத்துவர்களைத் தவிர).

Always remember your body belongs to you: உன் உடல் உன் உரிமை... இதைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

No means No: குழந்தைகள் விரும்பாத ஒரு செயலை அறிந்தவரோ, அறியாதவரோ செய்ய முற்பட்டால், தைரியமாக ‘நோ’ சொல்ல வேண்டும்.  குடும்ப உறுப்பினர்கள் தொடும்போதுகூட, குழந்தை விரும்பாவிட்டால் `நோ' சொல்ல அதற்கு உரிமை உண்டு. குடும்பத்திலேயே இதைப் பழகிவிட்டால் வெளிநபர்களிடம் பயமோ, தயக்கமோ இல்லாமல் சொல்ல முடியும்.

Talk about secrets that upset you:
ரகசியம் பற்றிய தெளிவான புரிதல் குழந்தைக்கு அவசியம். நல்ல ரகசியம் எது? தவறான ரகசியம் எது? இதுபற்றி குழந்தைகளுக்கு உதாரணங்களோடு விளக்கிவிட வேண்டும். திடீரெனப் பரிசு வழங்குவதோ... சர்ப்ரைஸாக ஃபேமிலி டின்னர் ஏற்பாடு செய்வதோ, நல்ல ரகசியம். யாரேனும் துன்புறுத்துவதோ... விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடச் செய்வதோ, தவறான ரகசியம். இதுபோன்ற விஷயங்களை மறைக்காமல் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும்  தைரியத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

Speak up, someone can help: எந்தப் பிரச்னை என்றாலும் பயப்படாமல் சொல்லப் பழக்குவது முக்கியம். பெற்றோரிடம் சொல்லத் தயங்கினால், அவர்களுக்கு விருப்பமான தாத்தா, பாட்டி, அக்கா, அண்ணன், ஆசிரியர் என நம்பிக்கையான ஒருவரிடம் சொல்லலாம். அப்படி அவர்கள் பகிரும்போது, நடந்த விஷயத்தில் அவர்களின் தவறு எதுவுமில்லை என்கிற நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
இதுபோன்ற விஷயங்களைக் குழந்தைகள் ரிலாக்ஸாக இருக்கும்போது மெள்ள மெள்ள கற்பித்துவிடுங்கள். அப்போது கதை பேசுவது போல அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம். அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டிய `குட் டச் பேட் டச்' போன்ற விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

இன்றைய சூழலில், நமக்கு நம் குழந்தைகளிடத்தில் தேவை மிக அதிக கவனம்!