Published:Updated:

2019-ல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அபாரமாக உயரும்..! வாவ் சர்வே

ஐடி நிறுவனங்களில் 64 சதவிகித நிறுவனங்கள், அடுத்த ஆண்டில் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான சாதகமான சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளன.

2019-ல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அபாரமாக உயரும்..! வாவ் சர்வே
2019-ல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அபாரமாக உயரும்..! வாவ் சர்வே

டி வேலை என்பது பத்தாண்டுகளுக்கு முன் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இளைஞர்களின் கனவு வேலை. ஆனால், 2008-க்குப் பின்னரான காலகட்டத்தில் அத்துறை ஊழியர்கள் கொத்து கொத்தாக வேலை இழந்து வெளியேற்றப்பட்டப் பின்னர், அந்த வேலை மீதான மோகம் குறைந்தது. இதனால், சமீப காலமாக பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்கள், ஐடி வேலை வாய்ப்புகளைச் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து, கலைக் கல்லூரிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இந்த நிலையில், 2019-ம் ஆண்டில் ஐடி துறையில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்றும், அத்துறை இழந்த மதிப்பை மீண்டும் பெறப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில், தகவல் தொழில் நுட்பம் (Information Technology) எனப்படும் ஐடி துறை வளர்ச்சி  2000 முதல் 2008-ம் ஆண்டுவரை உச்சத்தில் இருந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பொறியியல் பட்டதாரிகள் மட்டுமல்லாது, பிற பாடப்பிரிவுகளை எடுத்துப் பயின்ற பொறியியல் பட்டதாரிகள்கூட, இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். இதில், ஏராளமான முதல் தலைமுறை பட்டதாரிகளும் அடக்கம். பணிக்குச் சேர்ந்த ஓரிரு வருடங்களிலேயே இவர்கள் லட்சங்களில் வாங்கிய சம்பளத்தைப் பார்த்து, அந்த இளைஞர்களின் பெற்றோர்களே ஆச்சர்யமடைந்தனர். ஏனெனில், தங்கள் பணிக்காலத்தில் அவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கவே மாட்டார்கள் அல்லது கிட்டத்தட்ட ஓய்வுபெறுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர்தான் உயர் பதவிகளில் அந்தச் சம்பளத்தை எட்டியிருப்பர். இதனாலேயே கம்யூட்டர் பிரிவு பாடங்களோடு சேர்ந்து, இதர பொறியியல் பாடப்பிரிவுகளுக்கும் கிராக்கி ஏற்பட்டது. 

இளைஞர்களின் இந்த ஐடி வேலை மோகத்தை நன்கு தெரிந்துகொண்டு பல கல்வித்தந்தைகள் உருவாகினர். நகரம் அல்லது ஊரைவிட்டு வெளியே குறைந்தபட்ச கட்டமைப்புகள் கூட இல்லாமல் புற்றீசல் போல் ஏராளமான இன்ஜினீயரிங் கல்லூரிகள் உருவாகின. இளைஞர்களும் ஐடி வேலைக் கனவில் இந்தக் கல்லூரிகளில் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து பயின்று வெளியே வந்தபோது நிலைமை மாறத் தொடங்கி இருந்தது.

2000 முதல் 2008-ம் ஆண்டுவரை உச்சத்தில் இருந்த ஐடி துறை வளர்ச்சி , 2008-ல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் மாறத் தொடங்கியது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அவுட்சோர்ஸிங்காக பணிகளைச் செய்துகொடுத்து டாலர்களில் சம்பாதித்துக் கொண்டிருந்த இந்திய மென்பொருள் நிறுவனங்கள், அங்கிருந்து வரும் ஜாப் ஆர்டர்கள் குறைந்துபோனதால், ஏராளமான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. அப்போதிருந்தே  ஐடி வேலைக்கு இறங்குமுகம் ஆரம்பித்தது. எனினும்,  நிலைமை ஓரளவு சீரான பின்னர்  பழைய நிலை நீடித்தது. ஆனால், 2014 -க்குப் பின்னர்தான் ஐடி நிறுவனங்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. 

அனுபவங்கள் கூடக்கூடப் பொறுப்புகளும் பதவிகளும் கூடும். ஐடி துறையும் இதற்கு விதி விலக்கு அல்ல. இதனால் சீனியர்களுக்கு ஏன் லட்சங்களில் சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தில் நான்கைந்து புதிய பணியாளர்களை வேலைக்கு எடுத்து பயிற்சி கொடுத்து வைத்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில், உயர் பதவிகளில் இருக்கும் பலரை, ஆட்குறைப்பு (Lay off) அல்லது பெர்ஃபாமென்ஸ் (perfomance) சரியில்லை என்று பெயரில் கொத்துக் கொத்தாக வீட்டுக்கு அனுப்பத் தொடங்கின. 

"புராஜெக்ட்கள்  குறைந்து விட்டதால் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுதான் ஆட்குறைப்புக்குக் காரணம்" என்று ஐ.டி நிறுவனங்கள் சொன்னாலும், அவற்றின் பேலன்ஸ்டு ஷீட்டுகள் வருவாய் வளர்ச்சியைத்தான் காட்டின. அப்புறம் ஏன் ஆட்குறைப்பு என்று கேட்டால், ஐடி நிறுவனங்கள் நீண்ட நாள்கள் திட்டமிட்டு வந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை அமல்படுத்தியதுதான் என்று அத்துறையின் உயர் பதவிகளில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற காரணங்களால்தான் ஐடி வேலை என்றாலே சமீபகாலமாக இளைஞர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில்தான், 4 ஆண்டு கால இடைவெளிக்குப் பின், வரும் 2019-ம் ஆண்டில் ஐடி துறையில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று சமீபத்தில் வெளியான மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட 'இந்தியா ஸ்கில்' (India Skills) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஐடி நிறுவனங்களில் 64 சதவிகித நிறுவனங்கள், அடுத்த ஆண்டில் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான சாதகமான சூழல் உள்ளதாகத் தெரிவித்துள்ளன. 2018-ல் எத்தனை பணியாளர்கள் புதிதாக எடுக்கப்பட்டனரோ, அதே எண்ணிக்கையிலான பணியாளர்கள் 2019-லும் பணி அமர்த்தப்படுவர் என 20 சதவிகித நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மிகக் குறைந்த சதவிகித நிறுவனங்களே, புதிதாக வேலைக்கு எடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளன. 

2017-ல் 7 சதவிகித அளவுக்கே புதிய பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில், 2019-ல் அது இருமடங்குக்கும் அதிகமாக, அதாவது 15 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிகிறது. 2010-11-ம் ஆண்டு அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, கடந்த 2-3 மூன்று ஆண்டுகளாகவே நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து, பீப்பிள் ஸ்ட்ராங் என்ற ஹெச்ஆர் சொல்யூஷன்ஸ் நிறுவனமும், குளோபல் டேலன்ட் அசெஸ்மென்ட் ஃபர்ம் வீபாக்ஸ் என்ற ஹெச்ஆர் டெக்னாலஜி நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில் சாஃப்ட்வேர் வேலை வாய்ப்புகளுடன், தொழில்நுட்பத் துறை பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளன. குறிப்பாக  அனலிட்டிக்ஸ் (analytics) மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) பிரிவு வேலைகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அத்துடன் இன்ஜினீயரிங், ஆட்டோமேட்டிவ், டிராவல் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி போன்ற துறைகளிலும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். 

பாலின அடிப்படையில் பார்த்தால், 2018-ம் ஆண்டில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் காணப்பட்ட 38 சதவிகிதத்திலிருந்து 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று ஆண் பணியாளர்களின் எண்ணிக்கையும் 47 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டில் புதிதாக வேலைக்குச் சேரும் பணியாளர்களில் 15 -20 சதவிகிதம் வரை பெண்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், வேலைவாய்ப்புத் திறன் அதிகம் கொண்ட மாநிலங்களில் ஆந்திரா, மேற்குவங்கம் மற்றும் டெல்லி ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. வேலைவாய்ப்புத் திறன் அதிகம் கொண்டவர்களில் இன்ஜினீயர்கள் முதலிடத்தில் உள்ளனர். குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (ECE) மற்றும் தகவல் தொழில் நுட்ப ( IT) பணியாளர்கள் அதிக வேலைவாய்ப்புத் திறன் கொண்டவர்களாகத் திகழ்வதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இதனால், ஐடி துறை வேலைவாய்ப்பு அடிப்படையில் ஓரளவுக்கு முன்னர் இருந்த பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக்கொண்டாலும், 2008-க்கு முன் இருந்த அளவுக்கு அதிக ஊதியம் உள்ளிட்ட அதே சூழல் மீண்டும் திரும்பும் எனச் சொல்வதற்கில்லை. ஏனெனில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் ஐடி நிறுவனங்கள் இனி ரொம்பவே உஷாராக இருக்கும் என்பதால், பழைய வசந்த காலத்தை எதிர்பார்க்க முடியாது என்பதே ஹெச்ஆர் நிறுவனங்களின் கருத்தாக உள்ளது.