Published:Updated:

“கலாசாரம் என்ற பெயரில் இனியும் ஒடுக்குமுறை வேண்டாம்!” பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள்

"இங்க எல்லாருக்குமே ஒரு எண்ணம் இருக்கு. கிராமப்புற மக்கள்தான் பெண் விடுதலைக்கு எதிராகவும், சாதிக்குக் கலாசாரக் காவலர்களாகவும் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், நகர்ப்புற மக்களும் கிட்டத்தட்ட அத்தகைய மனநிலையில்தான் இருக்காங்க.''

“கலாசாரம் என்ற பெயரில் இனியும் ஒடுக்குமுறை வேண்டாம்!” பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள்
“கலாசாரம் என்ற பெயரில் இனியும் ஒடுக்குமுறை வேண்டாம்!” பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள்

``நம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன், 13 வயதுச் சிறுமி ராஜலட்சுமி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். மாதவிடாய் காரணமாகத் தனியாகத் தங்க வைக்கப்பட்டதால், கஜா புயலில் சிக்கிப் பலியானார் விஜயா என்ற சிறுமி. ஆணவக் கொலை செய்யப்பட்ட ஸ்வாதி - நந்தீஷ் தம்பதி, சபரிமலை விவகாரம் எனப் பல கொடுமைகள் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இளம் தலைமுறைகளுக்கு இது குறித்த விழிப்புஉணர்வு தேவை என்று கருதி, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்தும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கல்லூரி அளவில் பிரசாரம் நடந்த முடிவு செய்தோம்” - லயோலா கல்லூரி மாணவர்களின் குரல் இது.

லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் செம்மலர், `ஒடுக்குமுறைக் கலாசாரத்தை உடைத்தெறி (Break The Culture of Oppression)' என்ற பிரசாரத்தை சமீபத்தில் தொடங்கியுள்ளனர். கலாசாரம் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் நடக்கும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதே இதன் நோக்கம். 

இதுகுறித்து பேராசிரியர் செம்மலர் மேலும் கூறுகையில், ``கடந்த நவம்பர் 27ம் தேதி ஒரு கருத்தரங்கம் நடத்தி இந்தப்

பிரசாரத்தை தொடங்கினோம். இதில், டாக்டர்.தொல்.திருமாவளவன், டி .எம்.கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இதனையடுத்து, நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும், இது தொடர்பான பலகைகள், பேட்ஜ்கள் ஆகியவற்றை அளிக்கிறோம். சாதிய ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகள், ஆணவக் கொலை இவை அனைத்துக்கும் எதிரான ஒரு விழிப்புஉணர்வு முயற்சியாக எங்களின் பிரசாரம் இருக்க  வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்'' என்றார். 

லயோலா கல்லூரியின் எம்.எஸ்.டபிள்யூ இரண்டாம் ஆண்டு மாணவி ப்ரியதர்ஷினி நம்மிடம் பேசுகையில், ``ஆரம்பத்துல இதை  சமூகவலைதளப் பிரசாரமாகத்தான் பண்ண நினைச்சோம். ஆனா, நேரடிப் பிரசாரமாக நடத்தினால், இன்னும் நிறைய மக்களுக்கு இந்த விழிப்புஉணர்வு ஏற்படும்னு நினைச்சோம். முதல்

முயற்சியா, நாங்க எங்க கல்லூரி மாணவர்களுக்கிடையே  இதைப் பத்தி விவாதிக்கவும், பேசவும் தொடங்கியிருக்கோம். இதன் மூலம் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் இது தெரிஞ்சு, அவங்களும் இப்படியான பிரசாரம் செய்ய வாய்ப்பிருக்கு. மற்ற கல்லூரியில இருக்கிற எங்களோட நண்பர்களும் இதைப் பத்திப் பேச ஆரம்பிச்சிருக்காங்க. ரெண்டு நாள் முன்னாடி நாங்க, ஒடுக்குமுறைக்கு எதிராகப் பலகைகள், பேட்ஜ் கொண்டு ராலி நடத்தினோம்.

இங்க எல்லாருக்குமே ஒரு எண்ணம் இருக்கு. கிராமப்புற மக்கள்தான் பெண் விடுதலைக்கு எதிராகவும், சாதிக்குக் கலாசாரக் காவலர்களாகவும் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், நகர்ப்புற மக்களும் கிட்டத்தட்ட அத்தகைய மனநிலையில்தான் இருக்காங்க. நாம அதைப் பத்தி எல்லாம் பேசாம இருக்கிறதுனால, இத்தகைய ஒடுக்குமுறைகள் தொடர்ந்துகொண்டு இருக்கு. இந்த மெளனத்தைதான் கலைக்கணும்” என்று அழுத்தமாகக் கூறினார்.

``நாங்க இந்தப் பிரசாரத்தை கல்லூரியளவில் மட்டும் நிறுத்துக்கொள்ளப் போவதில்லை. நாங்க எங்கெல்லாம் போறோமோ, அங்கேயெல்லாம்

முடிஞ்ச அளவுக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்றோம். சமீபத்தில், மும்பை போனோம். அங்க இருக்கிற ஒரு பகுதி மக்களைச் சந்தித்துப் பேசும்போது, அவங்களுக்கு நாம என்ன சொல்றோம்னு புரிஞ்சது. இப்படி எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் பேசுறோம். சமூகவலைதளத்தில் ஒரு பக்கம் ஆரம்பித்து, அங்கும் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறோம்" என்கிறார் ரிச்சர்ட் என்ற மாணவர்.

ஒரு புறம் நாம் தொழில்நுட்பம், வளர்ச்சி என்று முன்னேற்றம் அடைந்துவந்தாலும், மறுபுறம் நாம் சிந்தனை ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்னோக்கிச் செல்கிறோம் என்பதைச் சமீபத்திய சம்பவங்களே ஆணித்தரமாகக் கூறுகின்றன. இவற்றையெல்லாம் எதிர்கொள்ள நாம் நம் சிந்தனையையும் சமூகப் பார்வையையும் விரிவுபடுத்துவதே முதல் படி என்று கூறுகிறது கல்லூரி மாணவர்களின் இந்தப் பிரசார முயற்சி!