Published:Updated:

தமிழகத்தில் வேலைக்கு வரும் பிற மாநில பெண்களின் முதல் 10 நாள்... எப்படி இருக்கிறது? #RealExperience

மெரினா போராட்டம் தொடங்கி, டெல்டா மீட்பு வரை தமிழக இளைஞர்கள் சமூக அக்கறையோடு சுழன்று கொண்டிருக்கும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டுக்கு வந்த வட மாநிலப் பெண் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சம்பவம், ஒரு சமூகமாய் நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். 

தமிழகத்தில் வேலைக்கு வரும் பிற மாநில பெண்களின் முதல் 10 நாள்... எப்படி இருக்கிறது? #RealExperience
தமிழகத்தில் வேலைக்கு வரும் பிற மாநில பெண்களின் முதல் 10 நாள்... எப்படி இருக்கிறது? #RealExperience

ன்றைய சமூகத்தின் உச்சபட்ச நாகரிக வளர்ச்சி, பண்பாடு கலாசாரம் ஆகியவற்றின் அளவீடு என்பது, அந்தச் சமூகம் ஒரு பெண்ணின் பயணத்தை எவ்வளவு பாதுகாப்பானதாக அமைத்துக்கொடுக்கிறது என்பதே.  

பயணத்தின் மீது காதல் கொண்டு, தயக்கம் உடைத்து, சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து, சுதந்திரமாகப் பயணித்துச் சாலைகளை அளக்கும் பெண்கள் இன்று அதிகரித்துவருகிறார்கள். ஆனால், நேர்காணல், ட்ரெயினிங், ஃபீல்ட்வொர்க் முதல் தினசரி அலுவலகம் வரை வேலை நிமித்தமாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய பெண்கள் பலருக்கு, அந்தப் பயணங்கள் விருப்பமானதாக இருப்பதில்லை. என்றாலும், வலுக்கட்டாயமாக மன உறுதியை வரவழைத்துக் கொண்டு, அப்பா, அண்ணன், கணவன் என எந்தத் துணையுமின்றி, பயத்துடன் தனித்துப் பயணிக்கும் பெண்கள் பலர். இவர்களுக்குத் தனித்துப் பயணிப்பதில் விருப்பம் இருப்பதில்லை என்றாலும் அது தங்களின் வேலை விதிக்கும் கட்டாயம் என்பதால் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களின் மனது பிரச்னைகளைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதில்லை. எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற பயமும், நடக்காது என்ற நம்பிக்கையும் மட்டுமே இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

இப்படித்தான், பணி நிமித்தமாக டெல்லியிலிருந்து கும்பகோணத்துக்கு வந்தார் அந்தத் தோழி. தன் பணிக்கான பயிற்சிக்காக அவர் மேற்கொண்ட அந்தப் பயணத்தை, தன் வேலைக்கான கடமையாகவும், அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனும், தன் மீதான நம்பிக்கை மற்றும் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் இந்தச் சமூகம் என்ற எதிர்பார்ப்புடனும்தான் அன்று அவர் கும்பகோணத்தில் வந்து இறங்கினார்.

ஆனால், அன்று நடந்தது என்ன? ஒருவர், இருவர் அல்ல... முதலில் சவாரி சென்ற ஆட்டோ டிரைவர் முதல், உதவிக்கு அழைத்த இளைஞன், உடன் வந்த அவன் நண்பர்கள் என ஒரே இரவில் ஐந்து பேர் அந்தத் தோழியின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப்போகச் செய்து, அவர் நம்பிக்கையை உடைத்து, அவரை மனதாலும் உடலாலும் சிதைத்திருக்கிறார்கள். 

மெரினா போராட்டம் தொடங்கி, டெல்டா மீட்பு வரை தமிழக இளைஞர்கள் சமூக அக்கறையோடு சுழன்று கொண்டிருக்கும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டுக்கு வந்த வட மாநிலப் பெண் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சம்பவம், ஒரு சமூகமாய் நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். 

ராஜஸ்தானிலிருந்து வந்த தோழியின் இந்தப் போராட்டம் பற்றி பலரிடம் பேசினேன். ஒருவர், `ஐயோ பாவம் அந்தப் பொண்ணு, ஆனா ஏன் இவ்ளோ தூரம் தனியா வரணும்? அவங்க அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு இல்ல வந்திருக்கணும்' என்கிறார். மெத்தப் படித்த, அரசு உயர் பதவியில் இருக்கும் பெண் ஒருவர், `நான் எல்லாம் எண்பதுகள்ல கல்லூரியில் படிக்கும்போது, ரயிலில் தனியா போவேன். ஆனா ரயில் சீக்கிரமே வந்தாலும், விடியுற வரைக்கும் ஸ்டேஷனுக்கு உள்ளேதான் இருப்பேன். இந்தப் பொண்ணு கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்' என்கிறார். இப்படிப் பலரும் நடந்த சம்பவத்தை, அந்தப் பெண் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறிவிட்ட பொறுப்பின்மையாகத்தான் பார்க்கிறார்களே தவிர, அந்தப் பெண்ணையும், நமது நாட்டின் பல ஆயிரம் பெண்களையும் பாதுகாக்கத்  தவறிவிட்ட மன வக்கிரத்தைப் பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை. இந்தச் சம்பவம் எந்த மாதிரியான விமர்சனங்களை, எண்ண ஓட்டங்களை மக்களிடையே விதைத்திருக்கிறது என அறிகையில் வெட்கமாய் இருக்கிறது. இப்படியா ஒரு மனநிலை கொண்டிருக்கிறது என் சமூகம் என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கும்பகோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வங்கி ஊழியர் மட்டுமல்ல, இப்படித் தினம் தினம் பல்வேறு வாழ்க்கைத் தரங்களில் உள்ள பல்வேறு பெண்கள், மொழி அறியாது, திசை அறியாது நம் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

ஐஏஎஸ் அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், ஐடி ஊழியர்கள், ஹோட்டல் சர்வர்கள், அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவிகள் எனத் தமிழகத்தில் வேற்று மாநிலப் பெண்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்துக்காகத் தஞ்சமடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதோவொரு காரணத்துக்காக அப்படித் தனியாக இங்கு வரும் பெண்களை தமிழ்நாடு எப்படி வரவேற்கிறது? உண்மையில் அப்படி வேலை நிமித்தமாகப் பயணிக்கும் பெண்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? தமிழகத்தில் இந்த ஊர் பழகாத, அறியாத அவர்களின் முதல் 10 நாள்கள் எப்படி இருந்தன? சில பெண்களிடம் பேசினேன். 

பிரயாதி ஷர்மா IRS, அசிஸ்டன்ட் கமிஷனர், வருமான வரித் துறை. பூர்வீகம்: ஜம்மு & காஷ்மீர்

`இங்கு வரும்வரை தமிழகத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தது எல்லாம் ரஜினிகாந்த், கன்னியாகுமரி, இங்கு நிறைய கோயில்கள் இருக்கும் என்பவை மட்டுமே. என் அலுவலக வேலைகள் மத்திய அரசு சார்ந்த  பணிகள் என்பதால் ஆங்கிலம் உதவியாக இருந்தது. ஆனால், இங்கு உள்ள பணியாளர்களிடம்  பேசுவதற்குத்தான் மிகவும் சிரமப்பட்டேன். அரசாங்கம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, என் கணவர் உடன் இருந்ததால் இங்கு என் முதல் 10 நாள்களைப் பாதுகாப்பாகத்தான் உணர்ந்தேன். ஆனாலும்கூட மொழி, உணவு, வெயில் இவையெல்லாம் சற்றுக் கடினமாக உணரவைத்தன. ஒருவேளை தனியாக இருந்திருந்தால் மிகவும் சிரமமாக இருந்திருக்கும். தமிழகத்தில் நான் பாதுகாப்பாகத்தான் உணர்கிறேன். அதற்கு முக்கியக் காரணம், இங்கு எல்லா இடங்களிலும் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள், பெண்கள் எல்லா வேலைகளும் செய்கிறார்கள். அதுவே பெரும் பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது.''

ரிஹான்னா ராம்சந்தானி, சீனியர் மேனேஜர், கோடக் மஹிந்திரா பேங்க். பூர்வீகம்: மகாராஷ்டிரா

``புனேவிலிருந்து சென்னை வருவதற்கு எனக்குப் பிடிக்கவே இல்லை. வேலை, திருமணம் என்ற கட்டாயத்தில்தான் இங்கு வந்தேன். ஆரம்பத்தில் மொழி தெரியாது, இந்தக் கலாசாரம் தெரியாது. மிகவும் கடினமாகத்தான் இருந்தது. என் உடையிலிருந்து, என் பழக்கவழக்கம் வரை என்னைப் பற்றிய எல்லாமே, என்னை என் சக ஊழியர்களிடத்தில் வித்தியாசப்படுத்திக் காட்டியது. வேற்று மாநிலத்தவர் என்று அறிந்த உடனே, சற்று எல்லை மீறிப் பழக முயன்றவர்களைக் கண்டிருக்கிறேன். தமிழகத்தில் என் முதல் 10 தினங்களைப் பயத்துடன் கழித்ததாகத்தான் நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் நான் இங்கு பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. என்னை என் சக ஊழியர்கள் அவர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ள சிறிது காலம் ஆனது. அதன் பின்னர் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை''.

சுமிதா ஹசாரிக்கா, மாடல், எக்ஸிக்யூட்டிவ் அட்மின், ராயல் சுந்தரம். பூர்வீகம்: அசாம்

``முதன்முதலில் அப்போலோ மருத்துவமனையில் வேலைக்காக நான் சென்னைக்கு வந்தேன். அப்போது, எனக்கு இங்கு யாரையும் தெரியாது, நண்பர்கள் கிடையாது. நிர்வாகம் நான் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்ததால் மட்டுமே சற்று நிம்மதியாக உணர்ந்தேன். கொஞ்சம் பழகியதும், நண்பர்கள் கிடைத்ததும் இங்கு பாதுகாப்பாகத்தான் உணர்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் அப்படி இல்லை. மொழி, வழி எதுவும் அறியாமல் தவிப்பாக இருக்கும். எனினும் பயத்தைத் தாண்டி இங்கு என் முதல் 10 நாள்கள் பாதுகாப்பாகத்தான் உணர்ந்தேன். அதற்கு என் உடன் பணியாற்றியவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.''

நிஹாரிகா பாரைக், மூன்றாம் ஆண்டு மாணவி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி. பூர்வீகம்: ஜார்கண்ட்

``நான் என்னுடைய மருத்துவப் படிப்பை தமிழகத்தில் படிக்க வேண்டும் என்றே விரும்பினேன். நினைத்தது போலவே இங்கு இடம் கிடைத்தது. மற்ற எல்லா இடங்களை விடவும் தமிழகம் பாதுகாப்பான இடம் என்ற கருத்து என் பெற்றோர், உறவினர் எல்லோரிடமும் இருந்தது. அது நிஜமும்கூட. கல்லூரி விடுதியில்தான் தங்கி இருக்கிறேன். மொழியைத் தவிர வேறு எந்தக் கஷ்டமும் எனக்கு இல்லை. நண்பர்கள் நிறைய ஒத்துழைப்பு  தருகிறார்கள். இங்கு அனைவரும் மிகுந்த அன்போடு இருக்கிறார்கள். என் முதல் 10 நாள்கள் நான் வீட்டை நினைத்து அழுது கொண்டிருந்தாலும், நண்பர்களால் சந்தோஷமாகத்தான் இருந்தேன்.'' 

ப்ரணிதா டாக்கா, ஹேர் ஸ்டைலிஸ்ட், சலோன் ப்ளோ. பூர்வீகம்: மேற்கு வங்காளம்

``நான் 17 வயதில் வேலை நிமித்தமாகச் சென்னைக்கு வந்தபோது, தமிழகம் பாதுகாப்பானது என்ற ஒரே நம்பிக்கையில்தான் என் பெற்றோர் என்னை இவ்வளவு தூரம் அனுப்பி வைத்தார்கள். மொழியும், என் உடையும் இங்கு ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்தன. ஒரு முறை நானும் என் தோழியும் இரவு ஏழு மணிக்கு ஆட்டோவில் பயணித்தபோது ஆட்டோவை பாதி வழியில் நிறுத்திய ஆட்டோ டிரைவர், போன் செய்து அவரது நண்பரை வரவழைத்தார். அவர்களிருவரும் எங்களை ஆட்டோவிலிருந்து இறங்கச் சொல்லி வேடிக்கை பார்த்தனர். எங்களைப் பார்ப்பதற்காகவே அந்த டிரைவர் வேறு ஒருவரை வரவழைத்திருக்கிறார் என்று புரிந்ததும், மிகவும் பயமாக இருந்தது. அப்போது, அறிந்தவர்களுக்கு போன் செய்து ஆட்டோ நம்பரைச் சொன்னோம். அதைக் கேட்டதும் அவர் மீண்டும் எங்களை ஆட்டோவில் ஏற்றி உரிய இடத்தில் விட்டுவிட்டுச் சென்று விட்டார். என்றாலும், இதே தமிழ்நாட்டில்தான், நான் வசிக்கும் வீட்டு ஓனர் அம்மா, பணி காரணமாக நான் வரத் தாமதமானால் தெரிந்தவர்கள் யாரையாவது அனுப்பி என்னைப் பாதுகாப்பாக அழைத்து வரச் சொல்வார். அவர்கள் குடும்ப உறுப்பினர்போல பார்த்துக்கொள்வார். ஒரு சிலர் இங்கு தவறாக இருக்கிறார்கள். என்றாலும் பலரால் இங்கு பாதுகாப்பாகத்தான் உணர்கிறேன்.'' . 

நான் பேசிய பெண்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக மற்ற மாநிலங்களைவிடத் தமிழகம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்கிறார்கள். தனியாகவோ துணையுடனோ தேவையின் அடிப்படையில் ஓர் இடத்துக்குப் பயணிக்கும் பெண்களின் மனநிலை பயத்துடனேயே இருக்கிறது என்பதே உண்மை. ஆனால், அவர்களின் வாழ்வைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் மாற்றியது அவர்களைச் சுற்றி இருந்த மக்களே. அவர்கள் தமிழகத்தை நம்புவதற்கு, அரசாங்கமோ, அலுவலகமோ, அதிகாரமோ அல்ல காரணம். நம் மண்ணின் மக்கள் மீதுள்ள நம்பிக்கையே காரணம் என்கிறார்கள். ஆனால், முன்னரே சொன்னதுபோல, சில சமயங்களில்  பெண்கள் பாதுகாப்பை அவளுடைய  பொறுப்பாக மட்டும் பார்க்கும் மனநிலையே இங்கு இடைஞ்சலாக இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு என்பது சாத்தியப்பட வேண்டுமானால் நாம் அனைவருமே கூடுதல் பொறுப்புள்ளவர்களாக மாற வேண்டியிருக்கிறது என்பதே உண்மை.

வந்ததைச் சமாளிப்பதைக் காட்டிலும், வரும் முன் காப்பதே சிறந்தது எனும் அடிப்படையில், இப்படித் தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பலரின் கருத்து சரியானதே. ஆனால் அது முதல் கட்டம் மட்டுமே.

அன்று இரவு, பணிக்காகத் தொலைதூரத்திலிருந்து வந்த தன் பெண் ஊழியரை அழைத்து வர அந்த நிறுவனம் ஓர் ஆள் அனுப்பியிருக்கலாம். அந்தத் தோழி ஆட்டோவில் ஏறியதும், அந்த ஆட்டோ டிரைவர் பணத்துக்காக அதிக தூரம் சுற்றாமல், நேரம் கருதியாவது அவரை உரிய இடத்தில் விரைந்து சேர்த்திருக்கலாம். இரவு தனியாக வந்த அந்தப் பெண்ணைப் பார்த்த சக பயணிகள், `உதவி வேண்டுமா?' எனக் கேட்டிருக்கலாம். ஒருவேளை அவர் ஆட்டோவில் ஏறுவதை அங்கு காவலில் இருந்த போலீஸார் பார்த்திருந்தால், பத்திரமாக அவரைக் கொண்டுசேர்க்கும்படி ஆட்டோ டிரைவருக்கு ஓர் எச்சரிக்கை செய்திருக்கலாம். பைக்கில் வந்த அந்த இளைஞன் ஒரு நிமிடம் அவன் வீட்டுப் பெண்கள் பற்றி நினைத்திருக்கலாம். இப்படி ஆயிரம் வழிகளில் எவரோ ஒருவர் அந்தப் பெண்ணின் பயணத்தைப் பாதுகாப்பாக மாற்றியிருக்க முடியும். 

நான் பேசிய அத்தனை வேற்று மாநிலப் பெண்களின் பாதுகாப்பையும், அப்படிச் சுற்றி இருக்கும் மக்கள்தான் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.

பெண்கள் பாதுகாப்புக்கென பிரத்யேக மகளிர் மட்டும் ஆட்டோகளும், பேருந்துகளும், ரயிலில் தனி கோச்களும் இன்றைய காலத்தின் கட்டாயமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இதையும் தாண்டி ஆண்கள் நிறைந்த சமூகத்தில், எந்த ஆட்டோவில் பயணித்தாலும் பெண் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு, பெண்களின் பாதுகாப்பை ஆண்களின் கடமையாக மாற்றுவது அவசியம்.

இனி வரும் சந்ததியினருக்காவது தன்னைப் பார்த்துக்கொள்வது போலவே இந்தச் சமூகத்தையும் சேர்த்துப் பாதுகாப்பது என்பதைக் கடமையாகச் சொல்லிக் கொடுப்போம். அதன் விளைவாக சில நூறாண்டுகளுக்குப் பின்னராவது பெண் என்ற பாலினக் காரணத்துக்காகவே அவளுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் அவலம் அழித்தொழிக்கப்படுமானால், அன்று சொல்லலாம் மனிதன் முழுவதும் நாகரிக வளர்ச்சியடைந்துவிட்டான் என்று.