Published:Updated:

``ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றனர்!” போராடும் மாணவர்களுக்கு ராதிகா வெமூலா ஆதரவு

போராடும் டாடா மாணவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்பதுடன், அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிக்குக்கூட நிர்வாகம் எந்த வசதியும் செய்து தரவில்லை.

``ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றனர்!” போராடும் மாணவர்களுக்கு ராதிகா வெமூலா ஆதரவு
``ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றனர்!” போராடும் மாணவர்களுக்கு ராதிகா வெமூலா ஆதரவு

ஹைதராபாத்திலுள்ள டாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் கல்வி நிர்வாகம் எடுத்த சில முடிவுகளின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணாநாத் என்ற மாணவரிடம் பேசினேன். ``எங்களின் டாடா பல்கலைக்கழகம், மும்பையிலுள்ள பல்கலைக்கழகத்தைத் தலைமையாகக் கொண்டு இயங்குகிறது. கடந்த அக்டோபர் மாதம், எங்கள் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், பி.ஏ சமூக அறிவியல் (B.A Social Science) படிப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது. மேலும், பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டல் வசதி இனி இல்லை என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்புகள் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தன. இந்த முடிவைப் பரிசீலிக்குமாறு, நாங்கள் நிர்வாகத்திடம்  முறையிட்டோம். ஆனால், எங்களின் தரப்பைக் கேட்கக்கூட அவர்கள் மறுத்தனர். நாங்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, நிர்வாகப் பணிகள் நடப்பதைத் தடைசெய்தோம். அப்போது அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்படியும்கூட, அவர்கள் எங்களைப் பேசவிடவே இல்லை; தங்களின் முடிவை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தனர். அதனால், நாங்கள் 10ம் தேதி காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினோம். இதில், 17ம் தேதி முதல் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்” என்கிறார்.

இந்தப் போராட்டத்தில், கடந்த 2015-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் அம்மா ராதிகா வெமுலா மற்றும் அவரின் மகன் ராஜா வெமுலா கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, ``ரோஹித்தைப் படிக்கவைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அவனை மேற்படிப்பு படிக்கவைக்கும் என்னுடைய  கனவு ஒரு கிரிமினலால் சிதைக்கப்பட்டது. அவர் இன்னும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில்தான் இருக்கிறார். இப்படியான மனிதர்கள் ஒவ்வொரு கல்வி நிர்வாகத்திலும் பரவியிருக்கிறார்கள். இது, தலித் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் செயல்" என்றார் வேதனையுடன்.

மாணவர்களின் போராட்டம்  தீவிரமடைந்திருக்கும் நிலையில், முன்னாள் மாணவி அயிலா பாந்தாகியிடம் பேசினேன். ``கல்வி என்பது எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அதனால்தான் இதற்காகப் போராடுகிறோம். ஏற்கெனவே இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தனியாக விடுதிகள் எதுவும் இல்லை. தனியார் விடுதிகளைக் குத்தகைக்கு எடுத்துதான் விடுதிகள் நடத்திவந்தனர். இது பல மாணவர்களுக்கும் பெரும் உதவியாக இருந்தது. பெரும்பாலானவர்கள் அப்படித் தங்கிப் படிக்கும் மாணவர்களாக இருக்கும்பட்சத்தில், இப்படித் திடீரென தங்கும் வசதியை ரத்து செய்வது சரியான முடிவல்ல. இதனால் பல மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.

பி.ஏ., சமூக அறிவியல் படிப்பைப் பொறுத்தவரையில், நிர்வாகத் தரப்பிலிருந்து, `நாங்கள் எதிர்காலத்தில் அந்தப் படிப்பை மீண்டும் கொண்டு வருவோம்' என்கின்றனர். ஆனால், எப்போது என்பது பற்றியெல்லாம் அவர்கள் கூறவில்லை. இது காலப்போக்கில் அப்படியே மறைந்துவிடும். அதனால்தான் இப்போதே நாங்கள் போராடுகிறோம்” என்று கூறினார் அயிலா. 

போராடும் மாணவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்பதுடன், அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிக்குக்கூட நிர்வாகம் எந்த வசதியும் செய்து தரவில்லை. ``நாங்கள் 17ம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, எங்களின் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் வசதியோ, உணவோ கல்வி நிர்வாகம் செய்துதரவில்லை. அவர்களின் நிர்வாகத்தில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பின் மீது இவ்வளவுதான் அக்கறையா என்று தெரியவில்லை. டாடா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஷாலினி பரத் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். எங்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கவேண்டும். அதுவரை, எங்களின் போராட்டம் தொடரும்” என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் கிருஷ்ணாநாத்!