Published:Updated:

பெரு நகர மகளிருக்கு நிர்பயா நிதி... பிற பெண்களுக்கு நிர்க்கதி!

பெரு நகர மகளிருக்கு நிர்பயா நிதி... பிற பெண்களுக்கு நிர்க்கதி!
பெரு நகர மகளிருக்கு நிர்பயா நிதி... பிற பெண்களுக்கு நிர்க்கதி!

ல்லோருக்கும் இந்த மண்ணில் பிறந்த பின்புதான், தேடித்தேடிப் பெயர் வைப்பார்கள். ஆனால், உலகிலேயே முதல் முறையாக, ஒரு பெண்ணுக்கு அவள் இறந்த பின்பு, ஒரு பெயர் வைக்கப்பட்டது. அந்தப் பெயர்... நிர்பயா. அதாவது, அச்சமற்றவள்.

அந்த மாணவி வந்த பேருந்தின் ஓட்டுநர் உட்பட ஆறு நபர்களால் சிதைக்கப்பட்டு, 17 நாள்களுக்குப் பின், சிங்கப்பூரில் இறந்துபோனாள் அவள். அந்தப் பெண்ணுக்கு, ‘அச்சமற்றவள்’ என்று புனைபெயர் சூட்டிவிட்டு, அச்சத்தில் ஆழ்ந்தது தேசம். நாடு முழுவதும், எங்கெங்கு காணினும் பாலியல் வன்முறைகள் தொடர்ந்துகொண்டிருந்தாலும், அந்த நிகழ்வுதான், மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘நிர்பயா’வின் பெயரில், நாடு முழுவதும் விழிப்பு உணர்வு நிகழ்வுகள், போராட்டங்கள், பெண் உரிமை, பாதுகாப்புக்கான கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. மத்திய அரசும், பெண்களின் பாதுகாப்புக்காக ‘நிர்பயா’ நிதி என்ற ஒரு நிதியை உருவாக்கியது. இந்தியப் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிதி, பெரு நகரத்துப் பெண்களுக்கு பாதுகாப்பையும் பிற பெண்களுக்கு பாரபட்சத்தையும் பரிசாகத் தந்துள்ளது.

நிர்பயா நிதி உருவாக்கப்பட்ட பின்பு, 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,000 கோடி, அடுத்த ஆண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய எட்டு நகரங்களில், பெண்கள் பாதுகாப்புக்கான செயல் திட்டங்களுக்காக மட்டுமே, இந்த நிதி ஒதுக்கப்பட்டது. இது, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் 60 சதவிகித நிதிப் பங்களிப்புக்கான ஒதுக்கீடு. மீதமுள்ள 40 சதவிகிதத் தொகையை, மாநில அரசு வழங்க வேண்டும். இதில், சென்னைக்கு, 2018 - 2019, 2019 - 2020 மற்றும் 2020 - 2021 ஆகிய மூன்று நிதியாண்டுகளுக்கு 425 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகரக் காவல்துறைக்கு ரூ.150.54 கோடி, மாநகராட்சிக்கு ரூ.199.50 கோடி, மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.75.02 கோடி பிரித்துத் தரப்படவுள்ளது.

முதற்கட்டமாக, நடப்பு நிதியாண்டில், இத்திட்டங்களுக்காக 169.37 கோடி ரூபாயும், மாநில அரசு 112.91 கோடி ரூபாயும் நிதியை ஒதுக்கியுள்ளன. இந்தத் நிதியைக் கொண்டு, பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டுமென்பது, இதில் மிக முக்கியமான அறிவுறுத்தல்.

ஜி.ஐ.எஸ் உதவியுடன் க்ரைம் மேப்பிங், சைபர் கிரைம்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை, இது தொடர்பாகப் பெண்களுக்கு சட்ட உதவி வழங்குவது, கவுன்சலிங், பெண்களுக்கான கழிப்பிட வசதிகள், பெண் போலீஸ் சிறப்பு ரோந்துப்படை அமைப்பது எனப் பல விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளது, மத்திய அரசு. பேருந்து போன்ற மக்கள் போக்குவரத்து வாகனங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வேண்டுமென்பது, இதில் முக்கியமான உத்தரவு. இதற்காகவே, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு 75 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள் விவகாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையே, இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து, தலைமைச் செயலர் தலைமையில், பல்வேறு துறைச் செயலர்கள், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் போன்றோரைக் கொண்டு உயர் மட்டக்குழுவையும் அமைத்து கண்காணித்தும் வருகிறது. 

நிர்பயா, இந்த மண்ணைவிட்டு மறைந்து, டிசம்பர் 29-ம் தேதியுடன் 6 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த ஆறு ஆண்டுகளில், தேசத்தில் பெண்களின் பாதுகாப்பு, எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதை ஆய்வு செய்தால், அதிர்ச்சியும் வேதனையும் ஒன்றையொன்று விஞ்சும். அந்த அளவுக்கு பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் வன்கொடுமை கலாசாரமும் பல மடங்கு பெருகியுள்ளது. சம்பவங்களை, சாதாரண செய்தியாக, ஊடகங்களும் எளிதில் கடந்துபோகின்றன. நடக்கின்ற வக்கிரங்களில் பெரும்பாலானவை, பெரு நகரங்களில் மட்டுமே நிகழ்வதில்லை. எட்டு வயது ஆசிபா, சிதைக்கப்பட்டது ஒரு மலை முகட்டிலுள்ள புல்வெளியில். பணி தொடர்பான பயிற்சிக்காக, இரவில் ரயிலில் வந்து இறங்கிய 23 வயது ராஜஸ்தான் பெண்ணை, ஐந்து மிருகங்கள் வேட்டையாடியது, மயிலாடுதுறை என்ற சிறு நகரத்தில்.

திருப்பூர் போயம்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியபோது, எந்த ரோந்துப்படையும் அவர்களைப் பிடிக்கவில்லை. விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி, தண்ணீர் குடிக்கத் தனியாகப் போனபோது, கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள்.

தாய், தந்தைக்கு நடுவே துாங்கிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி ஹரிணி, கடந்த அக்டோபரில் தொலைந்துபோனது, காஞ்சிபுரம் மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலையம் அருகில். அந்தக் காவல் நிலையத்திலேயே கண்காணிப்புக் கேமரா இல்லை. ஹரிணி கிடைக்கவேயில்லை; இது தமிழகத்தின் சில நிகழ்வுகள் மட்டுமே. தேசமெங்கும் இந்தப் பாலியல் அத்துமீறல்கள் அனாவசியமாக அன்றாடம் நடந்துகொண்டே இருக்கின்றன. இதையெல்லாம் தடுப்பதற்கு உதவாது நிர்பயா நிதி.

தலைநகரில் நிகழ்ந்ததால், நாடு முழுவதும் ஊடகங்களில் கடும் விவாதத்தைக் கிளப்பி, விளைவுகளைக் கிளப்பியது, நிர்பயாவின் மரணம். அதேபோல, இரண்டாம் நிலை நகரங்களில், வளரும் நகரங்களில், வளராத கிராமங்களில் என நாடெங்கும் தினமும் ஏராளமான அசம்பாவிதங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆனால், பெரு நகரத்துப் பெண்கள் பாதுகாப்புக்கு நிர்பயா நிதி, பிற நகரப் பெண்களுக்கு நிர்க்கதி என்பது பகிரங்கமான பாரபட்சமாகத் தெரிகிறது. எட்டு பெரு நகரங்களிலும் உள்ள சில கோடி பெண்களுக்கு 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் மைய அரசு, பிற பகுதிகளில் உள்ள பல கோடிப் பெண்களின் பாதுகாப்புக்கு, எந்த நிதியையும் ஒதுக்காமல், வேடிக்கை பார்ப்பது, விநோத முரணாகத் தெரிகிறது. தலைநகருக்கு 425 கோடி ரூபாய் ஒதுக்கினால், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அதே அளவு தொகையாவது ஒதுக்க வேண்டும்.

நிர்பயா நிதியில் இத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது, பாராட்டுக்குரிய விஷயம்தான்; அதையும் தாண்டி, அனைத்துப் பெண்களுக்குமான பாதுகாப்புக்கு, இந்த அரசு செய்ய வேண்டிய விஷயங்கள், ஏராளமாய் இருக்கின்றன. பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, ஆபாச இணையங்களுக்கு தொழில்நுட்ப கடிவாளம் போடுவது, சட்டத்தைக் கடுமையாக்குவது, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெருக்குவது என அரசு ஆலோசிக்க வேண்டியதும், ஆய்வு செய்ய வேண்டியதும் நிறையவே உள்ளன. எல்லாவற்றையும் செய்வதற்கு முன்பாக, ஒரு விஷயத்தில் அரசுகள் தெளிவாய் இருப்பது அவசியம். அது, பெரு நகர மக்களையும், பிற மக்களையும் பிரித்துப் பார்க்கிற நவீன நிற பேதம் என்கிற மனநிலையிலிருந்து, சட்டம் போடுவோரும், திட்டம் தீட்டுவோரும் விலகி வர வேண்டும். எங்கே இருந்தாலும் பெண், பெண்தான்.