Published:Updated:

`வீட்டில் நல்ல காரியம் நடக்கப் போகுது!' - விபரீதத்தை உணர்ந்த நண்பன்; தாயைக் கொன்று உயிரை மாய்த்த மகன்

`வீட்டில் நல்ல காரியம் நடக்கப் போகுது!' - விபரீதத்தை உணர்ந்த நண்பன்; தாயைக் கொன்று உயிரை மாய்த்த மகன்
`வீட்டில் நல்ல காரியம் நடக்கப் போகுது!' - விபரீதத்தை உணர்ந்த நண்பன்; தாயைக் கொன்று உயிரை மாய்த்த மகன்

சென்னையில் மனநலம் பாதித்த தாயைக் கொன்று விட்டு மகன் தற்கொலை செய்துகொண்டார். இறுதிச் சடங்கு செலவுக்காக நண்பருக்குப் பணம் அனுப்பிய பரிதாபமும் நடந்துள்ளது. 

தேனாம்பேட்டை குடிசை மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுந்தரவல்லி. இந்தத் தம்பதிக்கு விக்னேஷ்வரன் (22) என்ற மகன் உண்டு. சுந்தரவல்லி மனநிலை பாதிக்கப்பட்டவர். தாயின் நிலை கண்டு விக்னேஷ்வரன் வருத்தத்தில் இருந்தார். டீ சப்ளை செய்யும் வேலை செய்து வந்த விக்னேஷ்வரன், தன் நண்பர் அருண்குமார் என்பவருக்கு திடீரென்று ரூ.6,500 பணம் அனுப்பி வைத்தார். 'எங்கள் வீட்டில் நல்ல காரியம் நடக்கப் போகிறது. எனவே, இந்தப் பணத்தைச் செலவுக்காக வைத்துக்கொள்' என்று செல்போனில் குறுந்தகவலும் அருண்குமாருக்கு அனுப்பி வைத்தார். விக்னேஷ்வரன் பணம் அனுப்பியதால் அருண்குமார் குழம்பிப் போனார். ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக உணர்ந்த அருண்குமார், விக்னேஷ்வரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்று பார்த்தார். 

வீட்டினுள் விக்னேஷ்வரன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதையும் அவரின் தாயார் சுந்தரவல்லி தரையில் இறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அருண்குமார், தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் விசாரணையில், விக்னேஷ்வரன் தாயார் சுந்தரவல்லியைத் தலையை அழுத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், 'எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

மனைவியும் மகனும் இறந்தது குறித்து பணியில் இருந்த நடேசனுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடல் கூறு ஆய்வுக்குப் பிறகு இருவரின் சடலமும் நடேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயைக் கொன்று மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.