Published:Updated:

போலீஸ் போட்ட திட்டம் ... ரகசிய இடம்! - கனகதுர்காவின் சபரிமலை பிரவேசம் நடந்தது எப்படி?

போலீஸ் போட்ட திட்டம் ... ரகசிய இடம்! - கனகதுர்காவின் சபரிமலை பிரவேசம் நடந்தது எப்படி?
போலீஸ் போட்ட திட்டம் ... ரகசிய இடம்! - கனகதுர்காவின் சபரிமலை பிரவேசம் நடந்தது எப்படி?

பரிமலையில் சந்திதானம் வரை சென்று கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள் நேற்று வழிபட்டனர். நடை சாத்தப்பட்டிருந்த சமயத்தில் அதிகாலை 3.45 மணியளவில் இருவரும் சந்நிதானம் வரை சென்றுள்ளனர். டிசம்பர் 24- ம் தேதி  ஏற்கெனவே இவர்கள் இருவரும் சபரிமலை ஏற முயன்றனர். பக்தர்கள் போராட்டம் காரணமாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. `மீண்டும் சபரிமலை வருவோம் ' என்று கூறி அப்போது சென்றனர். ஆனால், கனகதுர்கா வீடு திரும்பவில்லை. இதனால், கணவர் போலீஸில் புகார் செய்தார். 

தற்போது பெண்கள் இருவரும் மலை ஏறியது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிமலையில் இவர்கள் இருவரையும் மலை ஏற வைக்க கேரள போலீஸ் 7 நாள்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளது. கோட்டயம் மாவட்ட எஸ்.பி. ஹரிசங்கரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்த நிலையில், இருவரும் கோட்டயம் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் பெண் போலீஸ் அதிகாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டனர். பெண் போலீஸ் அதிகாரிகள்தான் இவர்களைப் பல இடங்களில் ரகசியமாக மாற்றி மாற்றி தங்க வைத்துள்ளனர். வெளியாட்கள் யாருடனும் பேசவும் அனுமதிக்கவில்லை. புத்தாண்டையொட்டி இவர்களை சபரிமலை ஏறச் செய்ய வேண்டுமென்று போலீஸ் அதிகாரிகளுக்கு அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டது. 

கேரள புலனாய்வுத்துறை டி.ஐ.ஜி சுரேந்திரன், நிலக்கல், எருமேலி, வடசேரிக்கரா பகுதி பாதுகாப்பு அதிகாரியான கோழிக்கோடு மாவட்ட எஸ்.பி ஜெயதேவ், சபரிமலை சந்நிதானம் பகுதி பாதுகாப்பு அதிகாரி க்ரைம் பிராஞ்ச் எஸ்.பி ராஜிவ் ஆகியோருக்கும் பெண்கள் வருவது குறித்து முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுபோல் பம்பையில் உள்ள  கேரள அதிரடிப்படையின் கமாண்டர் கார்த்திகேயன் கோகுல்சந்திரனும் அலர்ட் செய்யப்பட்டார். 

பெண்களின் பாதுகாப்புக்கு 20 பேர் கொண்ட தனிப்படை தயார் செய்யப்பட்டது. வேறு யாருக்கும் இந்தத் தகவல் தெரியாது. இந்த டீம்தான் மப்டி உடையில் இரு பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்தது. நேற்று  அதிகாலை 1.30 மணிக்கு மலை ஏறத் தொடங்கிய பெண்கள் இருவரும் 3.45 மணிக்கு சந்நிதானம் சென்றடைந்தனர். சந்நிதானம் முன் 5 நிமிடங்கள் வரை இருவரும் பிரார்த்தனை செய்தனர். பின்னர், அதே வழியில் பம்பைக்கு தரையிறங்கினர். 

இதற்கிடையே, கனகதுர்காவின் கணவரும், குழந்தையும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அவரின் சகோதரர் பத்மபூஷன் தெரிவித்துள்ளார். பெண்கள் சபரிமலை சென்று வழிபட்டதால் கேரளாவில் வன்முறை வெடித்துள்ளது. மிகப்பெரிய வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாகக் கேரள அரசுக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.