Published:Updated:

பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter

இந்தியாவில் பெண்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள், அப்படித் துன்புறும் பெண்களுக்கு உதவிக் கரம் நீட்ட அரசு தோற்றுவித்த அமைப்பே பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (one stop center).

பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter
பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter

இந்தியாவில் பெண்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள். வீட்டில், அலுவலகத்தில், வெளியில், எனப் பெண்களின் பாதுகாப்பு எல்லா இடங்களிலும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகள், கற்பழிப்பு, ஆணவக் கொலைகள், ஆசிட் வீச்சு, கடத்தல், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள், குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை எனப் பல பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள் பெண்கள். பல நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உடனிருந்து பிரச்னைக்குத் தீர்வு காண்கிறார்கள், சில நேரங்களில் என்ன செய்வது, எங்குச் செல்வது, தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது, யாரிடம் உதவி கோருவது என வழி தெரியாது தவித்துப் போகிறார்கள். அப்படித் துன்புறும் பெண்களுக்கு உதவிக் கரம் நீட்ட அரசு தோற்றுவித்த அமைப்பே பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (one stop center).

பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சகம், தேசிய அளவில், எல்லா மாநிலங்களிலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைப்பதற்கான நிதியை ``நிர்பயா நிதியிலிருந்து" ஒதுக்கியுள்ளது. இதற்கான `சகி' எனும் திட்டம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டுக்குள் 718 மாவட்டங்களில் இந்தப் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. 

இதற்கான நிதி மத்திய அரசிடமிருந்து வந்தாலும், இதன் செயல்பாடுகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னையில் ஓராண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. மேற்கொண்டு சமீபத்தில், சேலம், மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், கோவை ஆகிய இடங்களிலும் இந்த சேவை மையங்கள் இயங்க ஆரம்பித்திருக்கின்றன.

பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் எனப்படும் OSC -ன் செயல்பாடுகளை அறிந்துகொள்ள அங்கு நேரடியாகவே ஒரு விசிட் அடித்தேன். தாம்பரத்தில், ஒரு அரசு பெண்கள் காப்பகக் கட்டடத்தில் ஒரு சிறிய அறையில் இயங்கிக்கொண்டிருந்தது அந்த சேவை மையம். ஒரு நிர்வாகி, ஒரு களப் பணியாளர், ஒரு உதவியாளர் என 3 பேர் அங்குப் பணி புரிகிறார்கள். 12 மணிக்குப் பேசுவதற்காக நேரம் வாங்கி இருந்தேன், அங்குச் சென்ற போது பரபரப்பாகக் காணப்பட்டது சேவை மையம். வயதான ஒரு தம்பதியர் வெளியே அழுதபடி நின்று கொண்டிருந்தனர், உள்ளே சேவை மைய நிர்வாகி கிறிஸ்டினா ஒரு இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் இல்லை, கோபமும், வலியும் மட்டுமே இருந்தது. அவர் கையில் ஒரு பிஞ்சுக் குழந்தை, நான் பார்த்துக்கொண்டே நிற்பதைப் பார்த்ததும், ``பிறந்து நாலு நாள் தாங்க ஆச்சு " என்றார் உதவியாளர் நந்தினி. காதலனால் ஏமாற்றப்பட்ட அந்தப் பெண் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார். அவரது பெற்றோர், தங்கள் மகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தாலும், அந்தக் குழந்தையை ஏற்கத் தயாராக இல்லை, குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க உதவி நாடியுள்ளனர். கிறிஸ்டினா, ஒரு புறம் குழந்தையை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்ப்பதற்கான பணிகளைச் செய்து கொண்டே மறுபுறம் குழந்தைக்குத் தாய்ப் பாலாவது கொடுக்கச் சொல்லி அந்தப் பெண்ணிடம் போராடிக்கொண்டிருந்தார்.

பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter

மணி 1 , சுமுகமான தீர்வு எதுவும் கிட்டவில்லை, அந்தத் தாயும் சரி, அவரது பெற்றோரும் சரி, குழந்தையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, பரபரப்பாக வெளியே வந்தார் கிறிஸ்டினா ``சாரிங்க, கொஞ்சம் சென்சிடிவ் பிரச்னை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றார். சமூக நலத் துறை அதிகாரிகளிடம் அடுத்துப் பேசினார், ஆதரவற்றோர் இல்லத்திற்குப் பேசி குழந்தையைத் தத்துக் கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தார், குழந்தையின் தாயை ஏமாற்றியதாகச் சொல்லப்படுபவருக்கு அலைபேசியில் பேசி கவுன்சலிங்கிற்கு வருமாறு அழைத்தார், உதவியாளர் அதற்குள்ளாக எனக்கு காபியும், குழந்தைக்குக் காய்ச்சிய பாலும் கொண்டு வந்து கொடுத்தார்.

மணி 2 அங்கிருப்பவர்கள் பணிகள் தொடர்ந்துகொண்டே இருந்தது, ஏதோ யோசித்தவராய் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் கிறிஸ்டினா, ``குழந்தைக்கு ஒரு நல்ல டிரஸ் கூட இல்லை, பக்கத்துல போய் வாங்கிட்டு வந்திடுறேன்" என்று அருகில் யாரிடமோ கடனாய் ஐந்நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு கிளம்பியவரை, நான் வண்டியில் அழைத்துச் செல்கிறேன் எனச் சொல்லி நானும் உடன் கிளம்பினேன், அருகிலிருக்கும் துணி கடைக்குச் சென்றவர், குழந்தைக்கு இரண்டு செட்டு கவுன், துடைப்பதற்கான துண்டுகள் என வாங்கி விட்டு, அருகிலிருக்கும் மருந்துக் கடையில், குழந்தைக்கு டயப்பர், பவுடர் எனப் பார்த்துப் பார்த்து வாங்கினார்.

மணி 3 மீண்டும் சேவை மையத்துக்கு வந்தோம், நேராகக் குழந்தையிடம் சென்றவர், குழந்தையைத் தூக்கி, உடலைத் துடைத்து, கழிவுகளைச் சுத்தம் செய்து, உடை மாற்றி, குழந்தைக்குக் கொஞ்சிக் கொஞ்சி ஸ்பூனில் பால் ஊட்டிவிட்டு, குழந்தை தூங்கியதும் தான் நிமிர்ந்தே பார்த்தார். குழந்தையையும் தாயையும் சேர்த்து வைக்க கிறிஸ்டினா எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தொட்டுக்கொண்டிருந்தது என்றாலும் அப்போது மட்டும் குழந்தையைப் பெற்ற தாயின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. ``சாரிங்க, ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டேன்" என கிறிஸ்டினா வந்தமர்ந்த போது மணி 3.30, ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையம் எப்படி இயங்குகிறது எனப் பார்த்தே தெரிந்துகொண்டேன், இருந்தாலும் எஞ்சியிருந்த சில கேள்விகளை நான் தொடுக்க, படபடவென அவர் பதிலளிக்கத் தொடங்கினார்.

பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், என்ன மாதிரியான உதவிகளை எல்லாம் செய்கிறது?

வெளியிலோ, வீட்டிலோ வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவசரக் கால உதவி, மீட்பு நடவடிக்கைகள், மருத்துவ சேவைகள், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவது போன்ற காவல்துறை சார்ந்த உதவிகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சலிங் உதவிகள், சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்காலிகத் தங்கும் வசதிகள், நீண்ட கால தங்கும் விடுதிகளைக் கண்டறிவது போன்ற அனைத்து விதமான உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். 

சேவை மையத்தை யாரெல்லாம், எப்படித் தொடர்பு கொள்வது?

வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும், 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகள் அனைவரும் இந்த மையத்தின் சேவையைப் பெறலாம். பெண்கள் நேரடியாகவோ, நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவோ, தொண்டு நிறுவனங்கள், சமூக நலத்துறை அலுவலகங்கள், காவல் நிலையம், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக எங்களை அணுகலாம். மிக முக்கியமாகப் பெண்களுக்கான பிரத்யேக உதவி மையம், 181 சேவை எண் மூலமாக எங்களைத் தொடர்பு கொள்ள முடியும். 24 மணி நேரம் இயங்கும் இந்த சேவை மையம் எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பெண்களுக்கு உதவிக் கரம் நீட்டும்.

பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter

கடந்த ஓராண்டு காலமாக இந்தச் சென்னை சேவை மையத்தின் செயல்பாடுகள் என்னென்ன ?

தமிழகத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களின் முன்னோட்டமாக இந்தத் தாம்பரம் மையம்தான் தொடங்கப்பட்டது, கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 க்கும் அதிகமான கேஸ் வந்திருக்கிறது, நிறைய குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் வருகின்றது, சில குழந்தை திருமணங்களைச் சமூக நலத்துறை, போலீஸார் உதவியோடு சென்று தடுத்திருக்கிறோம், வரதட்சணை கொடுமை குறித்து புகார்களுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம், பாலியல் வன்முறை குறித்த புகார்கள் இதுவரை வந்ததில்லை. இப்போது 181 எண் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, நிறைய புகார்கள் வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு மாதத்திற்கென முன்னெல்லாம் பத்துப் புகார்கள் வரும், இப்போது கடந்த 10  நாள்களில் மட்டுமே இருபது புகார்களுக்கு மேல் வந்திருக்கிறது.

நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன ?

அரசாங்கம் எல்லா விதமான நிதி உதவிகளையும் செய்கிறது, மூன்றே மாதங்களில் சுமார் 45 லட்சம் செலவில், புதிய கட்டடம் கட்டப்பட்டு சமீபத்தில் திறப்பு விழாவும் செய்யப்பட்டது, இந்த சேவை மையத்தைப் பற்றி விழிப்புஉணர்வு கருத்தரங்கு சமீபத்தில் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது, அதன் விளைவாகக் காவல் துறையின் ஒத்துழைப்பு இப்போது கிடைக்கிறது, அரசு மருத்துவமனையும் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறது. பெரும் சவாலாக நாங்கள் பார்ப்பது, எந்தவிதச் சிறு தேவைக்கும் நாங்கள் சமூக நலத்துறையைத்தான் சார்ந்திருக்கிறோம், அது சற்று அவசரக் காலங்களில் முடிவெடுப்பதில் சவாலாக இருக்கிறது. மையத்தின் தினசரி செலவுக்காக இருப்புத் தொகையாக 20,000 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், மாநிலச் சமூக நலத் துறை அலுவலகம் வரை சென்று அதை நான் பெற்று வர வேண்டும், நாங்கள் இங்கு மூவர்தான் தற்போது பணியில் இருக்கிறோம் என்பதால், அதற்கும் நேரம் இல்லை, இன்று கூட ஒருவரிடம் கடன் வாங்கித்தான் செலவு செய்தேன். இப்படிச் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் பற்றிய விழிப்புஉணர்வு மக்களிடத்தில் இருக்கிறதா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால், இது குறித்துக் கல்லூரிகளில், பள்ளிகளில், நிறைய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே இருக்கிறோம். 181 எண் குறித்த விழிப்புஉணர்வு அதிகமாக இருப்பதால் தற்போது அது உதவியாக இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தொடர் முயற்சிகள் எடுத்துக்கொண்டே இருக்கும் வேளையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தினம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் அப்படிப் பாதிக்கப்படும் பெண்களுக்கான மிகப்பெரிய சவால் அதை எதிர்கொள்வது. அனைத்து விதமான பிரச்னைகளுக்கும், வழிகாட்டுவதற்குத் தேவையான இந்தப் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் மிகவும் அவசியமான, பாராட்டுதலுக்குரிய அமைப்பு ஆகும். 

இந்நிலையில் இந்த சேவை மையம் சிறப்பாகப் பணி செய்ய சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
1. இந்த மையம் குறித்து பரவலான விழிப்புஉணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.
2. அவசரக் கால உதவியாகச் செயல்படும் இந்த மையங்கள் சார்ந்த அலுவல் நடைமுறையில் தாமதங்கள் குறைக்கப்பட வேண்டும்.
3. இந்த சேவை மையத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை கூட்டப்பட வேண்டும், பணி காலியிடங்கள் உடனடியாக நிரப்பப் பட வேண்டும்.
4. காவல் துறை, நீதித் துறை, மருத்துவ துறை, சமூக நலத்துறை போன்ற சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் இந்த மையம் குறித்த விரிவான புரிதல் ஏற்படுத்த வேண்டும்.
5. இந்த மையத்தின் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் தேர்வில் மிகுந்த கவனமுடன் செயல் பட வேண்டும்.

இப்படிப் பல்வேறு நிலைகளில் அரசாங்கம், தொய்வின்றி இந்த சேவை மையத்தின் செயல்பாட்டை உறுதி செய்யுமானால், உண்மையிலேயே ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த மையத்தினால் மிகச் சிறப்பாக உதவி செய்ய முடியும். 

தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய எண்கள் :

பெண்கள் தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது? யாரிடம் உதவி கோருவது? #OneStopCenter

சென்னை : 044- 22233355
சேலம் : 0427- 22260267 
மதுரை : 0452 - 2580181
திருச்சி : 0431- 2413796
காஞ்சிபுரம் : 044 - 27433471
கோவை : 0422- 2555126

பி.கு : இரு தினங்களுக்குப் பிறகு அந்தக் குழந்தையின் நிலை அறிய அலைபேசினேன், கனத்த குரலோடு பேசியவர், குழந்தை இறந்துவிட்டது எனத் தழுதழுத்தார். ``கொடூரமானதுங்க நம்ம சமூகம், அந்தப் பெண்ணை அவர் காதலனோடு சேர்த்துவைக்க முயற்சிகள் செய்தோம் தோல்வியிலதான் முடிஞ்சது, ஆதரவற்றோர் இல்லத்துக்குக் குழந்தையைக் கூட்டிட்டுப் போகத் தயாரானபோது, திடீர்னு குழந்தைக்கு விக்கல் எடுக்க ஆரம்பிச்சது, மருத்துவமனைக்குக் கொண்டு போறதுக்குள்ள கொஞ்ச நேரத்துல எல்லாம் முடிஞ்சிருச்சு" என்றார். குழந்தைதானே அதற்கு என்ன புரியும் என்று நினைக்கிறோம், கருவிலேயே குழந்தைக்குப் பேசுவதெல்லாம் கேட்கும், புரியும் என அறிவியல் சொல்கிறது. ஒருவேளை தன்னை ஒரு பிழையாக எண்ணிப் பெற்றவர்கள் நிராகரிப்பது அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கும் புரிந்திருக்குமோ ? எனப் பதைத்துக்கொண்டே இருக்கிறது மனம்.