Published:Updated:

"ட்ரம்ப்... மோடி... இடஒதுக்கீடு... துண்டுச்சதை!" - வலிகளுக்குத் தீர்வு சொல்லும் திருநங்கையின் புத்தகம்!

’ குடும்பத் தீண்டாமை, சமூகத் தீண்டாமை, அரசு தீண்டாமையினால் பிச்சை, பாலியல் தொழில்களில் தள்ளப்பட்டிருகும் என் திருநர் சமூகத்தினருக்கு சமர்ப்பணம்’ எனத் தொடங்குகிறது இந்த புத்தகம். தீண்டாமையின் ஆதிக்கம் எதுவரை என்பதை உணர்த்தும் குடும்பத் தீண்டாமை என்கிற சொல்லாடல் கனமேற்றுவதாக இருக்கிறது.

"ட்ரம்ப்... மோடி... இடஒதுக்கீடு... துண்டுச்சதை!" - வலிகளுக்குத் தீர்வு சொல்லும் திருநங்கையின் புத்தகம்!
"ட்ரம்ப்... மோடி... இடஒதுக்கீடு... துண்டுச்சதை!" - வலிகளுக்குத் தீர்வு சொல்லும் திருநங்கையின் புத்தகம்!

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருட சென்னை புத்தகக்காட்சி சற்று கூடுதலாகவே அரசியல் வாசனையுடன் உள்ளது. அந்த வரிசையில்  செயற்பாட்டாளரும் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியுமான கிரேஸ் பானு எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்பு ‘திருநங்கை கிரேஸ்பானுவின் சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் வெளியாகியுள்ளது.  இது திருநங்கை ஒருவர் எழுதி வெளியாகும் முதல் படைப்பு அல்ல. ஆனால், திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு தொடங்கி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைச் சிக்கல், ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் என சமூகத்தின் அத்தனை அரசியலையும் ஒரு திருநங்கையின் செறிவான பார்வையில் அலசுகிறது.

’குடும்பத் தீண்டாமை, சமூகத் தீண்டாமை, அரசு தீண்டாமையினால்  பிச்சை, பாலியல் தொழில்களில் தள்ளப்பட்டிருக்கும் என் திருநர் சமூகத்தினருக்கு சமர்ப்பணம்’ எனத் தொடங்குகிறது அந்தப் புத்தகம். தீண்டாமையின் ஆதிக்கம் எதுவரை என்பதை உணர்த்தும் குடும்பத் தீண்டாமை என்கிற சொல்லாடல் கனமேற்றுவதாக இருக்கிறது. எடுத்தததும் கவனத்தை ஈர்த்தது கவிதைகள் பகுதிதான்…

"ட்ரம்ப்... மோடி... இடஒதுக்கீடு... துண்டுச்சதை!" - வலிகளுக்குத் தீர்வு சொல்லும் திருநங்கையின் புத்தகம்!

துண்டு சதை…

துண்டுச் சதையை

குருதியோடு புதைத்தபோதுதான்

புரிந்தது அதன் அதிகாரப் பரப்பு..!

கவிதையும் பொருளும் கட்டுரைகளும் எளிதில் கடந்துவிடக் கூடிய சொல்லாடலில் அமைந்ததாக இல்லை. புத்தகத்தை வாசித்துவிட்டு அதுதொடர்பாக கிரேஸ் பானுவைத் தொடர்பு கொண்டு பேசினோம்…

"திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டு அரசியலை நீங்கள் தீவிரமாக எடுத்துச் செல்வது உங்கள் கட்டுரைகளில் தெரிகிறது. ஆனால் இடஒதுக்கீட்டு கோரிக்கையில் தனிநபர் திருநங்கைகளிடமே கருத்து முரண் இருக்கிறதே?".

"கருத்து முரண் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆண், பெண், திருநர் என்று மூன்று பிரிவுகளை அரசுப் பட்டியல்களில் கொடுக்கச் சொல்லிதான் நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம். அதில் நாங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது எங்கள் தனிநபர் உரிமை சார்ந்தது. அதுபோல அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகள், இராணுவ வீரர்கள் எனத் தனித்தனியே ஒதுக்கீடு இருப்பது போல மாற்றுப்பாலினத்தவர்கள் என்கிற ஒதுக்கீடும் தேவை என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைக்கிறோம்".

" ’ட்ரம்புக்கு சளி பிடித்தால் மோடிக்கு தும்மல் வரும்’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். திருநங்கைகளுக்கான சர்வதேச அரசியலுக்கும் இது பொருந்துமா?"

"உலக வர்த்தக சபையுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது முதற்கொண்டே அமெரிக்காவுக்கு அடிபட்டால் இந்தியாவுக்கு வலிக்கும். அது ட்ரம்ப்-மோடி உறவிலும் தொடர்கிறது. அங்கே அமெரிக்காவில் கடற்படையில் திருநங்கைகளுக்கு இடமில்லை என்று சொல்லப்பட்ட அதே சமயம் இங்கே டெல்லியிலும் ஒரு திருநங்கை கடற்படையிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீண்டும் கடற்படையில் சேர்த்துக் கொள்ளும்படியும் ஆனால் வேறு வேலை தரும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நான் சொன்னதில் எள்ளளவும் மாற்றமில்லை".

"திருநங்கைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம் பற்றி நிறைய பேசியிருக்கிறீர்களே?".

"ஒடுக்கப்பட்ட எந்தச் சமூகத்துக்குமே கல்வி முக்கியம். இது பாபாசாகேப் அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் தொடங்கி அனைவருமே வலியுறுத்தியது. கல்விதான் தகுதியை வளர்க்கும் எங்களுக்கான வேலைவாய்ப்பையும் மரியாதைமிக்க வாழ்வையும் பெற்றுத் தரும். அதன் அடிப்படையிலேயே இதனைக் கட்டுரைகளில் வலியுறுத்தியிருக்கிறேன்"..

"மற்ற திருநங்கைகளுடைய படைப்புக்கும் உங்களது படைப்புக்குமான வித்தியாசம்?".

"மற்ற படைப்புகள் நிறைய வலிகளைப் பதிவு செய்கிறது. நான் அந்த வலிகளுக்கான தீர்வுகளையும் சேர்த்து அரசியல் பதிவாகப் பேசியிருக்கிறேன். எங்கள் மீது கருணை வேண்டாம், பாலாதிக்கவாதிகள் எங்களை மனிதர்களாகப் பார்த்தாலே போதுமானது என்கிறேன். கைதட்டுவது தவறில்லை. ஆனால் அதையே ஆயுதமாக்குவோம் நமக்கான குரலாக்குவோம் என்கிறேன்".

"திருநங்கைகள் அரசியல் சரி, நீட்…ஹைட்ரோ கார்பன் திட்டம்…தூத்துக்குடி ஸ்டெர்லைட் என தற்காலச் சமூக அரசியலையும் பதிவு செய்திருக்கிறீர்களே?".

"மார்க்ஸ் சொன்னது போல சூழல்தான் மனிதனை உருவாக்குகிறது. இங்கே தனிநபரைப் பாதிக்கும் எந்த விஷயமும் எங்களையும் பாதிக்கும். ஹைட்ரோ கார்பன் போராட்டத்தில் நான் களத்தில் இருந்தேன். அனிதா ஒடுக்கப்பட்டதுபோல நானும் கல்வி உரிமையில் ஒடுக்கப்பட்டேன். நீட் பிரச்னை எழுந்தபோது என் மகளுக்கு நான் எப்படி மருத்துவச் சீட்டு பெற்றுத் தருவேன் என்கிற கேள்வி இருந்தது. அதனால் குரல் கொடுத்தேன். நெறிக்கப்படும்போது யாராக இருந்தாலும் குரல்கொடுத்துதானே ஆகவேண்டும்".

"முதல் கட்டுரையே உங்களது அம்மாவுக்கான கடிதமாக இருந்தது. ‘என் குடும்பத்துடன் நான் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் அதற்காக நான் அரசியல் பேசுகிறேன்’  எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களைக் கைவிட்ட இந்தச் சமூகத்தில் உங்கள் பாலினத் தேர்வு முடிவு தவறானது என்று நீங்கள் யோசித்தது உண்டா?"

"இல்லை. என் அம்மா அப்பாவால் என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அவர்களுடைய தவறில்லை. அவர்களை இந்தச் சமூகம் அப்படிதான் பழக்கியிருக்கிறது. அதற்கு நான் இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டும். அதற்காகக் கேள்வி எழுப்ப வேண்டும் என்கிற பக்குவம் எனக்கு இருக்கிறது. அதைச் செய்தாலே எனது அம்மா அப்பா என்னை ஏற்றுக் கொள்வார்கள். இதுபோன்று ஒவ்வொரு திருநருக்கும் வாழ்வும் வாய்ப்பும் அமைய வேண்டும். ஒருவருடத்துக்கு முன்பு என் குடும்பம் என்னை அழைத்து ஏற்றுக் கொண்டார்கள். ஒன்றாகச் சாப்பிட்டோம்.எனது தம்பி என்னை ‘அக்கா’ என்றுஅழைத்தான்".

இன்னும் இன்னுமாய் அரசியல் நடைபழக வாழ்த்துகள் பானு...