Published:Updated:

இன்றும் நிகழும் பெண்ணுறுப்புச் சிதைவு வன்முறை..! என்ன செய்ய வேண்டும்? #EndFGM

இன்றும் நிகழும் பெண்ணுறுப்புச் சிதைவு வன்முறை..! என்ன செய்ய வேண்டும்? #EndFGM
இன்றும் நிகழும் பெண்ணுறுப்புச் சிதைவு வன்முறை..! என்ன செய்ய வேண்டும்? #EndFGM

ன்று (பிப்ரவரி 6) பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான சர்வதேச தினம். ஆசிய நாடுகளில் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்காத சொல்லாடல் இது. என்றாலும், இங்கே நிகழும் பாலியல் வன்புணர்வுகளுக்கு நிகராக ஆப்பிரிக்கப் பெண்களுக்கு சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வரும் கொடூரம். 8 அல்லது 10 வயதுச் சிறுமியை மிட்டாயோ அல்லது விருப்பமான ஏதோவொரு பொருளையோ கொடுப்பதாக ஆசைகாட்டி, ஓர் இருட்டு அறைக்குள் அழைத்துச் செல்கிறார்கள். அழைத்துச் செல்பவர் அந்தச் சிறுமி அதிகம் நம்பும் அவரின் அம்மா அல்லது பாட்டியாக இருப்பார். உள்ளே முன்பின் பரிச்சயம் இல்லாத ஒரு நபர் பிறப்புறுப்பின் சதைகளைக் கத்தி அல்லது பிளேடு கொண்டு அறுத்துவிட்டு, சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் சிறிய இடைவெளிவிட்டு இழுத்துத் தைத்து விடுவார்கள். அது, அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிகழும்வரை அவரின் தூய்மையைப் பாதுகாக்க ஆப்பிரிக்கர்களால் பின்பற்றப்பட்ட மூடச்சடங்கு. 

சிறுமிகளின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் அளவுக்கு வன்மம் நிறைந்த செயல் ஏன் நிகழ்கிறது? ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும் சுதந்திரம்கூடப் பறிக்கப்படும் அளவுக்கு அந்தப் பிஞ்சு உச்சகட்ட வலியை உணர வேண்டுமா? இதற்குக் காரணம் சடங்கும் சம்பிரதாயமும் மட்டும்தானா? இல்லை, சடங்கு என்ற பெயரால் வெறியாட்டமாடிய ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே.

``பிறப்புக்குரிய உறுப்பு வெட்டி எடுக்கப்படுவதை உணர்ந்தேன். மொன்னையான பிளேடு முன்னும், பின்னும் என் தசையினூடே சென்றுவரும் சத்தம் கேட்டபடியிருந்தது. யாரோ உங்கள் தொடையிலிருந்து தசையைத் துண்டாக அறுத்தெடுப்பதுபோல அல்லது உங்கள் கையை வெட்டியெடுப்பது போல இருந்தது அந்தவலி. தவிர, இது உங்கள் உடம்பில் மிக முக்கியமான உணர்ச்சிபூர்வமான பகுதி” 

சோமாலியாவில் பிறந்து வளர்ந்த நடிகையும் சமூகச் செயற்பாட்டாளருமான வாரிஸ் டைரி, தன் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்ட அனுபவத்தை மேற்கண்டவாறு விவரிக்கிறார். தன் 5 வயதிலேயே பிறப்புறுப்புச் சிதைப்பை அனுபவித்த அவர், 13 வயதில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பின்னர், வாழ்க்கையில் கடுமையான உழைப்புக்குப் பிறகு அவர் அடைந்த உயரங்கள், ஒவ்வொரு முறையும் தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக அவர் அளித்த பதிலடியாகும். வீட்டிலிருந்து வாரிஸ் வெளியேறினாலும் அவர் போன்ற எண்ணற்ற பெண்களுக்கு அத்தகைய விடுதலை கிடைக்கவில்லை. ஒருநாள் தனக்கு நடந்த அநீதியை உலகில் எல்லோருக்கும் அறிவித்தார். தன் வலியை எப்படியெல்லாம் விவரிக்க இயலுமோ அப்படியெல்லாம் விவரித்தார். பின்னர், தன் சுயசரிதை நூலான `Desert flower’ புத்தகத்திலும் அதுகுறித்து எழுதினார். இந்தப் புத்தகத்தை `பாலைவனப் பூ’ எனும் தலைப்பில் எழுத்தாளர் அர்ஷியா தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். 

வாரிஸ் டைரியின் கதை உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சடங்கின் பெயரால் இப்படியொரு வெறிச்செயல் நிகழ்த்தப்படுவதை உலகம் அறிந்துகொண்டது. அவருடைய சுயசரிதை திரைப்படமாகவும் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது.

இன்று #MeToo இயக்கத்திற்கு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் போன்று, வாரிஸ் கடும் விமர்சனங்களைச் சந்தித்தார். பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும்விதத்தில் `வாரிஸ் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பைத் தொடங்கினார். பின்னர் அது `டெசர்ட் ஃபவுண்டேஷன்’ ஆனது. இந்தப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸுக்குச் சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பை அளித்துக் கௌரவித்தது. 

வாரிஸ் டைரி என்ற ஒரு பெண்மணி, தன் வலியை வெளியே சொன்னதால், பெண்ணுறுப்பு சிதைவிலிருந்து பல சிறுமிகள் காப்பாற்றப்பட்டார்கள். இருந்தாலும், இந்த விவகாரத்தில் போதிய விழிப்புஉணர்வு, உலகளவில் இன்றும் இல்லை என்பதே நிதர்சனம். 
பிறப்புறுப்பு தைக்கப்பட்ட நிலையிலேயே வாழப் பழகிவிடும் பெண்களுக்குத் திருமணம் நடைபெறும்போதுதான், அந்தத் தையல் பிரிக்கப்படுகிறது. அதுவரை அந்தத் தையல் அந்தத் பெண்ணின் கற்பை அவளது புனிதத்தைப் பாதுகாப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதாவது, ஐந்து வயதுச் சிறுமியாக இருக்கும் காலகட்டத்திலிருந்தே பெண்ணின் மீது கற்பு என்னும் பிம்பம் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். 

இந்தத் தருணத்தில்தான் தந்தை பெரியாரின் சொற்கள் எவ்வளவு வலிமையானவை எனப் புரிந்துகொள்ள முடிகிறது. ``கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது. உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது ஏன் ஆண்களுக்கு இல்லை? ஏன் எந்த இலக்கிய புராணங்களும் ஆணின் கற்பைச் சோதிக்கவில்லை அல்லது கொண்டாடவில்லை?” என்று அவர் எழுப்பிய கேள்வி இன்றும் பதில் அளிக்கப்படாமலேயே தட்டிக்கழிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையில் பெண்ணுறுப்புச் சிதைவு நடந்தாலும்ஆசியாவிலும் ஆங்காங்கே அதுபோன்ற கொடூரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் இந்த வழக்கம் இருக்கிறது. இத்தனைக்கும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த இருபாலரும் நல்ல கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. `கல்வியறிவற்ற பழங்குடியின மக்களால் மட்டும் நடத்தப்படும் சடங்கு அல்ல' என்பதற்கு இது ஒரு சான்று. இந்தியாவில்கூட இப்படி ஒரு கொடுமையான சடங்கு பின்பற்றப்படுவதை, பத்திரிகையாளர் ஆரீஃபா ஜோஹாரி போன்றவர்களால் இந்த உலகம் அறிந்து கொண்டது. அவர்களால் அது சாத்தியமானது. இதையடுத்து, கடந்த வருடம் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிராக வலுவான கண்டனங்களைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பெண்ணுறுப்பைச் சிதைப்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையாகக் கருதப்படும் எனவும் அறிவித்தது. 

ஐக்கிய நாடுகள் சபை பெண் உறுப்புச் சிதைவை 2012-ம் ஆண்டு நவம்பர் 27-ல் தடை செய்த பிறகுதான், போஹ்ரா மக்களில் இந்த வன்செயல் கண்டறியப்பட்டது. உறுப்புச் சிதைவு கொடுஞ்செயல் என உணரப்படாமல் இன்னமும் நடைமுறையில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இது தெரியப்படுத்துகிறது. எந்தவொரு சட்டமும் நடைமுறையில் சாத்தியப்பட வேண்டுமெனில், அதுகுறித்த போதிய அளவு விழிப்புஉணர்வும் பிரசாரமும் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால் இதுபோன்ற கொடுமையிலிருந்து ஒரு பெண்ணையாவது காப்பாற்ற முடியும். என்றாலும், அதை மனித உரிமைகளை நம்பும் அனைவரும் முன் நின்று செய்யவேண்டியது அவசியம்.