Published:Updated:

நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!

நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!
பிரீமியம் ஸ்டோரி
நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!

நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!

நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!

நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!

Published:Updated:
நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!
பிரீமியம் ஸ்டோரி
நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!

மீண்டும் ஒருமுறை தமிழகம் கொந்தளித்துக் கிடக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருக்கிற கொடூரம் தன் மகளுக்கே நடந்ததைப்போலப் பதறிப்போயிருக்கிறது பொதுச் சமூகம்.

நடந்ததை வெறும் சைபர் குற்றமாக, தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்விளைவாக மட்டும் குறுக்க முடியாது. இது முழுக்க முழுக்க அதிகார ஆண்திமிர் படைத்தவர்கள் செய்திருக்கும் பாலியல் வன்கொடுமை. இன்னும் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இன்னும்  நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருக்கின்றன, அதிகார பலமிக்க பெரிய நெட்வொர்க் ஏழு ஆண்டுகளாக திட்டமிட்டு வலைவிரித்து அக்கிரமங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பவற்றையெல்லாம் கேட்டு அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் மக்கள். ‘`அண்ணா விட்ருங்கண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா’’ என்னும் அந்தக்குரல் கோடிக்கணக்கானோர் உறக்கத்தைக் கலைத்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கது.

ஒன்று, மக்கள் எல்லோருமே ஒருமித்த குரலில் இந்தக் குற்றவாளிகளை விசாரணை ஏதுமின்றி உடனடியாகத் தூக்கில் போடவேண்டும் என்று துடிக்கிறார்கள். அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளுக்கு எதிராகப் புகார் தரத்  தயங்குகிறார்கள்.

நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!

இந்தத் தயக்கத்திற்கும் துடிப்புக்கும் காரணம் நம்முடைய நீதி விசாரணை  அமைப்புகளின்பால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற கடும் அவநம்பிக்கை, எப்போதும் நடக்கிற அதே கண்துடைப்பான விசாரணைகள்தான் இந்த முறையும் நடக்கும், நீண்ண்ண்ண்ண்ட விசாரணைகளுக்குப் பிறகு... தண்டனைகள் இன்றி நழுவிச்சென்றுவிடும் என்பதும் மக்களின் உறுதியான எண்ணம். அதிலும் பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சி ஆதரவு நேரடியாக இருப்பதாகச் சொல்லப் படும்போது... மக்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தலித் சிறுமி நந்தினி இறந்து போய் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சாதிப் பிரச்னையால் நந்தினியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலைசெய்தது நான்கு பேர் கொண்ட ஆதிக்க சாதி கும்பல், இதில் காதலனும் உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. யார் செய்தார்கள் என்பது தெரியும்; எதற்காகச் செய்தார்கள் என்பது தெரியும்; குற்றம் நிகழ்ந்த பின்னணி தெரியும்; இருந்தும், இன்னும் இந்த வழக்கின் விசாரணைகூட முறையாகத் தொடங்கப்படவில்லை.

நந்தினி இறந்தபோது சமூகவலைதளங்கள் தொடங்கி தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரை துடியாய்த் துடித்தார்கள். `குற்ற வாளிகளைத் தண்டிக்கும்வரை கூடவே இருப்போம்’ என்றார்கள். அந்த நேரத்துப் பரபரப்பு எல்லாம் அடங்கியபின், எல்லோருமே அதை மறந்து விட்டனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி மணிகண்டன் உட்பட நான்குபேர் கைது செய்யப் பட்டனர். அதிலும் இருவர் மீதுதான் போஸ்கோ (Posco) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறை மிகுந்த மெத்தனமாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொள்வதாகக் கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் காவல்துறை விசாரணைக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.

இது இன்று நேற்றல்ல, பலகாலமாகவே இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிற ஒன்றுதான். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி 42 ஆண்டுகள் கோமாவில் கிடந்த மும்பை அருணா ஷான்பக் வழக்கு நினைவிருக்கிறதா... சங்கிலியால் கழுத்தை நெரித்து மிருகத்தனமாக வன்புணர்வு செய்து அந்தப்பெண்ணை மொத்தமாக சீரழித்ததோடு கிட்டத்தட்ட பிணமாக்கிய குற்றவாளி ஷோகன்லாலுக்கு என்ன தண்டனை கிடைத்தது? வெறும் ஏழு ஆண்டுகள் சிறை. சிறைவாசத்தை முடித்துவிட்டு அவன் ஹாயாகத் தன் பூர்வீக ஊருக்குச் சென்று குடும்பம் குட்டியென நிம்மதியாக இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன சேலம் வினுப்ரியாவைப் பலருக்கும் மறந்து போயிருக்கும். ஒருதலைக்காதலால் சுரேஷ் என்பவன் வினுப்ரியாவின் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி இணையதளங்களில் வெளியிட்டான். தன் அப்பாவோடு புகார் அளிக்க சைபர் க்ரைமை நாடினார் வினுப்ரியா. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புதிதாக ஒரு செல்போன் வாங்கிக்கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். அதை வாங்கிக்கொடுத்த பின்னும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என மனம் நொந்து கடைசியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் வினுப்ரியா. இப்படித்தான் இருக்கிறது நம்முடைய காவல் அமைப்புகளின் லட்சணம்.

சிறுமி நந்தினி வழக்கில் அவருடைய குடும்பம் நடத்தப்பட்ட விதம் அத்தனை மோசமானது, நந்தினியின் தாய் ராஜக்கிளி ஒவ்வொரு முறை விசாரணைக்குச் செல்லும்போதும் ‘பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியாதா’ என்கிற கேள்வியைக் காவலர்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதோ இப்போதும் பொள்ளாச்சி விஷயத்தில் நடந்தது என்ன... புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை எல்லாம் வெளியிட்டது காவல்துறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி!

ஒருபக்கம் பாதிக்கப்பட்டவர் புகார் தந்தால் அவருக்கான பாதுகாப்பு, அவருடைய அடையாளத்தை ரகசியமாக வைத்திருத்தல், உடனடி நடவடிக்கை  என்பதெல்லாம் இன்னுமே பேச்சளவில்தான் இருக்கின்றன. இன்னொரு பக்கம் அப்படியே புகார் செய்ய முன்வந்தாலும், அந்த வழக்கு நீதி விசாரணை எல்லாம் முடிந்து உரியவருக்கு சரியான தண்டனை வழங்குவதற்குப் பத்து பதினைந்து ஆண்டுகள் தாண்டிவிடுகின்றன. இத்தனையும் தாண்டி வருகிற தீர்ப்பும் பாதிக்கப்பட்டவருக்கான நீதியாக இருக்குமா என்பதும் உத்தரவாதம் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நீதி அமைப்புகளின் மீது நம்பிக்கை வரும். என்கவுன்டர்தான் ஒரே தீர்வு என மக்கள் நம்புவதில் ஆச்சர்யமில்லைதானே.

விசாரணையின்றி என்கவுன்டரில் போட்டுத்தள்ள வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான்போலத் தெரிந்தாலும், அது முறையான தீர்வல்ல. இதன்மூலம் நமக்கெல்லாம் அப்போதைக்கு சாந்தியும் சமாதானமும் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் உண்மை எது... குற்றவாளி யார்... பின்னணியில் வேறு காரணம் அல்லது நபர் இருந்தார்களா என்கிற எந்த விவரமும் தெரியாமலேயே போகக்கூடும்.  உண்மையாகவே கைது செய்யப்பட்டவர்தான் குற்றவாளியா என்பதை அறியமுடியாமலேயே போகக்கூடும். நம் நாட்டில் குற்றஞ்சாட்டப்படுகிற கைது செய்யப்பட்டுகிற எல்லோருமே குற்றவாளிகளாக மட்டுமே இருப்பதில்லை.

அதிலும் போலி என்கவுன்டர்களுக்குப் பேர் போனது நம் நாட்டுக் காவல்துறை. 2016-ல் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட ஒரு தகவல் முக்கியமானது. 1993 தொடங்கி 2016 வரை நாடு முழுக்க நடைபெற்ற 2560 காவல்துறை என் கவுன்டர்களில் பாதிக்கு மேல் போலியானவை, இதில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளே அல்லர் என்கிறது அந்த அறிக்கை. சுவாதி கொலை வழக்கு நினைவிருக்கிறதா? ராம்குமார் என்கிற இளைஞன் சிறையிலேயே தற்கொலை (?) செய்து கொண்டானே! இப்போது பேராசிரியை நிர்மலா தேவியைப் பேசவிடாமல் காவல்துறையே வாயை மூடுகிறது.

ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட டெல்லி நிர்பயா வழக்கிற்குப் பிறகு தேசிய அளவில் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பரவலான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. பெண்கள் பாதுகாப்புக்காக ஆண்ட்ராய்டு செயலிகள் தொடங்கி இவ்வகை பாலியல் குற்ற வழக்குகளை உடனடியாக விசாரித்துத் தீர்ப்பு சொல்லும் விரைவு நீதிமன்றங்கள் வரை பல்வேறு ஜிகினாக்கள் காட்டப்பட்டன. சென்ற தேர்தலின் போது நிர்பயா வழக்கை காங்கிரஸுக்கு எதிரான பரப்புரைக்கும்கூடப் பயன்படுத்திக்கொண்டது பா.ஜ.க. ஆனால் என்ன நடந்தது?

2018-ல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2013-க்குப் பிறகு அதிகளவில் பாலியல் குற்றங்கள் பற்றிய புகார்கள் வந்து குவிந்திருக்கின்றன. 26% அளவுக்கு இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அதிலும் நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு மிகவும் பின்தங்கிய மாநிலங்களாகக் கருதப்படும் ராஜஸ்தான், டெல்லி, உபி எனப் பல மாநிலப் பெண்களும் முன்வந்து புகார்கள் அளித்தனர். ஆனால் இதில் வெறும் 19% வழக்குகளுக்குத்தான் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.  ­தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி 2017ஆம் ஆண்டு வரை 1,33,813 வழக்குகள் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன என்கிறார்கள் என்றால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

தமிழ்நாட்டில்கூட குழந்தைகள்மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 2013 தொடங்கி 2018 வரை 6,289 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில் மிகமிகக் குறைவான அளவே தீர்ப்பு கொடுக்கப்பட்டவை. பெரும்பான்மை வழக்குகள் இன்னமும் நிலுவையில்தான் இருக்கின்றன.

ஏன் இவ்வகை வழக்குகள் விசாரிக்கவும் தீர்ப்பு வழங்கவும் இவ்வளவு தாமதமாகின்றன. முதலாவது, மகளிர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை. சென்னை மாதிரி பெரிய நகரத்திற்கே ஒரேயொரு மகளிர் நீதிமன்றம்தான் இருக்கிறது. அடுத்து இவ்வகை வழக்குகளில் பெரும்பாலான நேரங்களில் நீதிமன்றங்களுக்கு வெளியேவே பேசி முடிக்கிற வேலைகளில்தான் காவல்துறையும் இறங்குகின்றன. அது வருமானத்திற்கான வழியாகவும் மாறிவிடுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி வழக்கு விசாரணைக்கு வந்தாலும் இந்த விசாரணைச் சூழல் என்பது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.
 
நம் வீடுகளும் நிறையவே மாறவேண்டி யிருக்கிறது. ஒரு பெண் தான் மிரட்டப்படுகிறோம், அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானோம் என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கான, உரையாடுவதற்கான சுதந்திரமான சூழலே கிடையாது. காரணம் நம்முடைய சாதி-மதப் பெருமைகள், குடும்ப மானம், எதிர்காலம் என அனைத்தையும் பெண்ணின் கற்பில்தான் அடைத்து வைத்திருக்கிறோம்.  குடும்பங்களின் இந்த பலவீனம்தான் குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் மிரட்டி தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ளவும் தூண்டுகிறது. மாற்றத்தை நாம் வீட்டிலிருந்துதான் தொடங்கவேண்டும். என்ன நடந்தாலும் நாங்கள் இருப்போம் என்கிற நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

இனி வரும்காலங்களிலாவது பாதிக்கப்பட்ட பெண்கள் நம் காவல் அமைப்புகளால் முறையாக நடத்தப்பட வேண்டும். மகளிர் நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் அவர்களுக்கான சரியான நீதியை விரைந்து பெற்றுத்தரவேண்டும். அதுதான் இனி ஒருமுறை இத்தகைய குற்றங்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டவர்களைக் காவல்நிலையங்களை நோக்கி வரச்செய்யும். நீதிமன்றங்களின் மீது நம்பிக்கையை விதைக்கும். அதைச் செய்யத் தவறும்போது இவ்வகைக் குற்றவாளிகள் இணையப்புரட்சி காலத்தில் இன்னும் பல மடங்கு அதிகரிப்பார்கள்.

- அதிஷா, ஓவியங்கள்: பிரேம் டாவின்சி