Published:Updated:

''சிந்து பழங்குடிகள் நலனுக்காகப் போராடி வெற்றி பெற்றோம்!'' - அபர்ணா

''சிந்து பழங்குடிகள் நலனுக்காகப் போராடி வெற்றி பெற்றோம்!'' - அபர்ணா
''சிந்து பழங்குடிகள் நலனுக்காகப் போராடி வெற்றி பெற்றோம்!'' - அபர்ணா

''சிந்து பழங்குடிகள் நலனுக்காகப் போராடி வெற்றி பெற்றோம்!'' - அபர்ணா

துரை வைகை ஆற்றின் கரையோரம்தான் அந்த மக்கள் வாழ்கிறார்கள். சிந்து பழங்குடிகள் என அடையாளப்படுத்தப்படும் அவர்களுக்கு அம்மிக் கொத்துவதும், பாய் விற்பதும் மட்டுமே பிரதான வேலை. தினம் தினம் ஓடி ஓடி உழைத்தாலும் அவர்களின் வாழ்வு இன்றளவும் வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கின்றது. வைகையின் கரையோரம் வாழ்ந்தாலும் குடிக்கும் தண்ணீருக்குக்கூடப் போராட்டம்தான். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச்சான்றிதழ் எனச் சாதாரண மனிதனின் உரிமையைப் பெறக்கூட திக்கற்று நிற்கும் அவர்களுக்குக் கரம் நீட்டி துயர் துடைக்கிறது பட்டாம்பூச்சி இளைஞர் மன்றம். பட்டாம்பூச்சி இளைஞர் மன்றம் பற்றி அறிந்ததும் அந்தக் குழுவிலுள்ளவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அனைவரும் கை நீட்டியது அபர்ணாவை நோக்கித்தான். 

``நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மதுரை பெத்தானியாபுரம்தான். சின்ன வயசிலிருந்தே பள்ளிகள் அளவில் நடக்கிற பேச்சுப் போட்டிகள்ல பங்கெடுத்துக்கிறது, பட்டிமன்றங்களில் பேசுறதுன்னு ஆர்வமா இருப்பேன். அப்போதான் இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா பற்றித் தெரிய வந்தது. அவங்க ஒவ்வொரு வருடமும் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து கருத்தரங்குகள், போட்டிகள் எல்லாம் நடத்துவாங்க. அந்தக் கருத்தரங்கம்தான் எனக்குள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினதுன்னு சொல்லலாம். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அந்த அமைப்பு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துட்டு வர்றாங்க. அதோடு கிராமப்புறங்கள்ல இருக்கிறவங்களுக்குத் தொழில்திறன் பயிற்சி கொடுக்கிறதா இருக்கிறோம். விருப்பம் உள்ளவங்க தன்னார்வத்தோடு கலந்துக்கலாம்னு அங்கிருந்து அறிவிப்பு வந்ததும் அதை நான் பயன்படுத்திக்க நினைச்சேன். 

முதல்கட்டமா, `பட்டாம்பூச்சி இளைஞர் மன்றம்' என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினேன். அதன்மூலம் அந்தத் தொழில்திறன் பயிற்சியில் என் அம்மாவோடு சேர்ந்து பானை ஓவியங்கள் மற்றும் க்ளாஸ் பெயின்டிங் வரைவதற்கும், பொம்மை தயாரிப்பதற்கும் பயிற்சி கொடுத்தோம். அதுதான் என்னுடைய முதல் முயற்சி. அப்போவே 300க்கும் மேற்பட்டவங்க அதில் கலந்துக்கிட்டாங்க. அடுத்ததா இலவச டியூஷன் நடத்துறது, தெருக்கூத்துகள் மூலமா விழிப்புஉணர்வு நாடகங்கள் நடத்துறது, பள்ளி செல்லாத பெண் குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் எடுக்கிறதுன்னு எங்களால முடிஞ்ச சில விஷயங்களைப் பண்ணிட்டு இருந்தோம். எங்க பட்டாம்பூச்சி இளைஞர் மன்றத்தோட ஒவ்வொரு மூமென்ட்டும் நேரு யுவகேந்திராவின் நேரடிப் பார்வையிலேயே இருக்கும்” என்கிறார் அபர்ணா. 

பட்டாம்பூச்சி இளைஞர் மன்றத்தில் தற்போது 20 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நலிவடைந்த மக்களிடையே பல்வேறு முயற்சிகளை எடுக்கும் அபர்ணா கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் முதல்வரிடமிருந்து சிறந்த மாநில இளைஞர் விருது பெற்றவர். அதோடு மதுரை மாவட்ட அளவிலும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். சிறந்த மாநில இளைஞர் விருது பெற்றதற்குப் பிறகு அபர்ணா தன் சமூக சேவையைக் கூடுதலாகவே முடுக்கி விட்டிருக்கிறார். 

``நேரு யுவகேந்திரா சார்பில் புனர்ஜாகரன் சிறப்புத் திட்ட பிரசாரத்திலும் நான் கலந்துகொண்டு வங்கிக் கணக்கு, தனி நபர் கழிப்பிடம், ரேஷன் கார்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொடுப்பது, தூய்மை இந்தியா பற்றிய விழிப்பு உணர்வை வீதி நாடகம் மூலமாக எடுத்துச் சொல்வது என அனைத்திலும் என்னை இணைத்துக்கொண்டேன். அப்போதுதான் வைகைக் கரையோரம் வாழும் சிந்து பழங்குடிகள் பற்றித் தெரிய வந்தது. அவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் என எதுவுமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பதும் இவை எதுவும் இல்லாததால் மதுரையில் எங்கு என்ன பிரச்னை நடந்தாலும் உடனடியாக இவர்கள் மீது வழக்குப் பதிவு போடுவதும் வாடிக்கையாக இருந்திருக்கிறது. அதோடு, பள்ளி செல்லும் பிள்ளைகள் சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் எட்டாம் வகுப்பு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமலும் இருக்கிறார்கள். 

இதுபற்றிக் கேள்விப்பட்டு மும்பையில் இயங்கி வரும் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் ஒர்க் மாணவி சராயு மேனன் இங்கு வர நானும் அவரும் இணைந்து அந்த மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காகக் கடந்த ஒரு வருடமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். முதல்கட்டமாக அவர்களின் பிள்ளைகளுடைய படிப்பை மேற்கொண்டு தொடர வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அதோடு, பெண் பிள்ளைகளுக்குக் கல்வி குறித்த விழிப்பு உணர்வையும் கைத்தொழிலையும் கற்றுக் கொடுக்கிறோம். அடுத்ததாக ஆண்கள் மற்றும் பெண்கள் மீதுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்வதற்காகப் போராடினோம். அதில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கிடைத்திருக்கிறது. தொடர்ந்து அவர்களின் உரிமைகளுக்காக அவர்களையே போராட வைத்தோம். அதன் தொடக்கம்தான் சமீபத்தில் அந்த மக்களைப் பழங்குடி இனத்தவர் பட்டியலில் இடம்பெறும் அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது” என்று சொல்லும்போது அபர்ணாவின் குரலில் ஒரு தெளிவு. அவரின் இந்தத் தெளிவுதான் சமூகத்திலுள்ள நெளிவு சுழிவுகளைச் சீராக்குகிறது. 

மேற்கொண்டு பட்டாம்பூச்சி இளைஞர் மன்றம் சார்பாக நீங்கள் என்ன செய்ய இருக்கிறீர்கள் என்று அபர்ணாவிடம் கேட்டபோது, ``எங்களுடைய பணியை இன்னும் அதிக வேகத்தோடு முடுக்கி விட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு எங்கள் பகுதியிலேயே பட்டாம்பூச்சி இளைஞர் மன்றத்திற்கெனச் சொந்தமாக ஒரு கட்டடத்தை எழுப்ப வேண்டும். அதில் நிரந்தரமாகப் பெண்களுக்குக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த பயிற்சியை வழங்க வேண்டும். இதுதான் என் தற்போதைய இலக்கு” என்கிறார். 

அபர்ணாவின் முயற்சிக்கு வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு