Published:Updated:

அயனாவரம் பாலியல் குற்ற வழக்கின் தற்போதைய நிலை என்ன..? #ShockToKnow #VikatanInfographics

அயனாவரம் பாலியல் குற்ற வழக்கின் தற்போதைய நிலை என்ன..? #ShockToKnow #VikatanInfographics
அயனாவரம் பாலியல் குற்ற வழக்கின் தற்போதைய நிலை என்ன..? #ShockToKnow #VikatanInfographics

அயனாவரம் பாலியல் குற்ற வழக்கின் தற்போதைய நிலை என்ன..? #ShockToKnow #VikatanInfographics

சென்னை அயனாவரம் பகுதியில் ஒரு சிறுமியை அவரது குடியிருப்பைச் சேர்ந்த 17 பேர் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த வழக்குத் தொடர்பான குற்றப்பத்திரிகையைக் காவல்துறை தாக்கல் செய்தது. வழக்கின் விசாரணை தற்போது சென்னைப் பெருநகர மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. 

விசாரணை குறித்துப் பேசும் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் பாடம் நாராயணன், ``அயனாவரம் சிறுமி வழக்கில் சாட்சியங்களின்

விசாரணை கடந்த ஜனவரி 18-ல் தொடங்கி இருபது நாள்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இரவு பகலாக விசாரணை நடந்துவந்தாலும் மொத்தம் 81 சாட்சியங்களில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள். மூடிய அறைக்குள் ஒரு நீதிபதி, ஒரு டைப்பிஸ்ட் மற்றும் ஒரு அரசு வழக்கறிஞர் சூழ, விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனால் இதர வழக்குகள் நூற்றுக்கும் மேல் விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. விசாரணை தாமதமாவதால் குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள், நீதி கேட்கும் பாதிக்கப்பட்டவர்கள், தாமதிக்கப்படும் நீதியால் எவ்வித மீள்வும் இல்லாமல் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழலை உணர்ந்து உயர் நீதிமன்றமும் அரசும் சென்னையில் மேலும் இரண்டு அல்லது மூன்று மகளிர் நீதிமன்றங்களைக் கொண்டு வரவேண்டும்" என்று கூறினார். கூடவே, தமிழகத்தில் 2013-ம் வருடம் தொடங்கி போக்ஸோ சட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புள்ளிவிவரங்களையும் அவர் பகிர்ந்தார். பதிவு செய்யப்பட்ட 6,289 வழக்குகளில் தீர்ப்பு கொடுக்கப்பட்டவை மிகச் சொற்பமே. தமிழகத்தில் மட்டும் மொத்தம் இத்தனை வழக்குகள் என்பது எளிதில் கடந்து போகக் கூடிய எண் இல்லை. இவை இழுபறியாவதற்குக் காரணம் என்ன?.

``ஒரு கோடி பேர் இருக்கும் மாநகரத்துக்கும் ஒரேயொரு மகளிர் நீதிமன்றம்தான், மிகச் சொற்பமான நபர்கள் இருக்கும் ஊருக்கும் ஒரேயொரு மகளிர் நீதிமன்றம்தான். ஆனால், வழக்குகள் இப்படித் தேங்கிக் கிடப்பதற்கு அதுமட்டுமே காரணமல்ல”என்கிறார், சிறுமி ஹாசினி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஹாசினி தரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் கண்ணதாசன். ``எனக்குத் தெரிந்து அண்மைக்காலமாக நடந்த பாலியல் குற்ற வழக்குகளில் விரைந்து நீதி வழங்கப்பட்டது ஹாசினிக்கு மட்டும்தான். அதுவுமே அந்த வழக்கில் போலீஸார் உட்பட அனைவருமே குற்றவாளிக்கு எதிராக ஒரே அலைவரிசையில் இருந்தார்கள். மற்ற வழக்குகளைப் பொறுத்தவரை, பெரும்பாலும் குற்றமாகப் பதிவு செய்யப்படாமலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தாலும் மக்களுக்கு அந்த விசாரணைச் சூழல் ஒத்துவருவதாக இருப்பதில்லை. சிலசமயங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் சாட்சியங்களும் ஒன்று போலவே நடத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு மிகக் காலதாமதமாக நடக்கும், அப்படி நடந்தாலும் நீதிமன்றங்கள் இப்படி நடத்தப்படுவதால் ஏற்படும் உளச்சிக்கல்கள் எனப் பலகாரணங்களால் பின்வாங்குகிறார்கள். அவர்களுக்கு தனி கவுன்சலிங் கொடுத்து... நீதி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை ஏற்படும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் ஆவன செய்ய வேண்டும்” என்றார். 

பொதுவாக போக்ஸோ வழக்குகளில் குற்ற விசாரணை ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். 2017-்ல் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நந்தினியின் வழக்கில் இதுவரை விசாரணை தொடங்கப்படவே இல்லை. வழக்கை காவல்துறை திசைதிருப்பிவிடக் கூடும் எனவும் சிபிசிஐடிக்கு மாற்றக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் காவல் விசாரணைக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. வழக்கின் தீவிரம் உணர்ந்து அதிவிரைவாக இந்த விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வழக்கு தொடர்பான சில கோப்புகளைச் சமர்ப்பிக்கிறோம் என்று காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் நேரம் கேட்டு இழுத்தடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள். அவர்கள் கூறுகையில், ``ஒருவேளை கோர்ட்டு சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றிவிட்டாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் மட்டுமே இதில் விரைந்து நீதி கிடைக்கும்” என்கிறார்கள். இதுபோன்ற பாலியல் குற்ற விவகாரங்களில் காவல்துறை உள்ளிட்ட அதிகாரத் தரப்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உடைந்தையாகச் செயல்படுவதும் வழக்குகள் நீர்த்துப் போவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. 

தன் உடல்மீது திணிக்கப்பட்ட வன்முறையால் இறந்தே போன நந்தினி, பாதிக்கப்பட்டவர் என்றாலும் குற்றவாளி போல மனதளவில் ஒடுங்கி தன் வாழ்வை மீட்டுக் கொண்டுவரப் போராடிக் கொண்டிருக்கும் அயனாவரம் சிறுமி. இவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட 6,289 பேர், இன்னும் இந்த எப்.ஐ.ஆர் கணக்குகளில் வராத எத்தனையோ சிறார்கள். இவர்களைக் கைவிடாமல் இனியேனும் விரைந்து பாதுகாக்குமா போக்ஸோ? 

அடுத்த கட்டுரைக்கு