Published:Updated:

``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு!''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்

``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு!''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்
``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு!''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்

மாணவர்களுக்காக சொந்த நகைகளை அடகு வைத்து ரூ.1.75 லட்சம் திரட்டி, ஐரோப்பிய நாட்டு வகுப்பறைபோல மாற்றி, கல்வி அளித்து வரும் ஆசிரியை அன்னபூர்ணா மோகனுக்கு `இப்படியெல்லாம் செய்யக் கூடாது' என்று சக ஆசிரியர்கள் நெருக்கடி கொடுத்ததால், அவர் பணியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், கந்தாடு அரசுப் பள்ளியில் பணிபுரிபவர் ஆசிரியை அன்னபூர்ணா. ஆசியர்களுக்கு மத்தியில் அன்னபூர்ணா சற்று வித்தியாசமானவர். குழந்தைகளின் கல்வியில் உண்மையான அக்கறை கொண்டவர். வெறும் ஏ பி சி டி மட்டும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று கருதுபவர். கந்தாடு அரசுப் பள்ளியில் அழுக்கான சட்டைகளோடும் மூக்கொழுக வந்துகொண்டிருந்த குழந்தைகளைச் சுத்தத்தின் அருமையை எடுத்துக் கூறி பள்ளிக்குச் சுத்தமாக வரச் செய்தவர். `ஏனோ தானோ...!  என்று எந்த விஷயத்தையும் அன்னபூர்ணா செய்வது இல்லை. 

குழந்தைகளுக்காகத் தன்னையும் அன்னபூர்ணா மேம்படுத்திக் கொண்டே இருந்தார். சுமார் ரூ.2,50 லட்சம் செலவழித்து, அபாகஸ் படித்தார். மாணவ- மாணவிகளுக்கு தன் சொந்த செலவிலேயே அபாகஸ் உபகரணங்களையும் வாங்கினார். ஆசிரியை அன்னபூர்ணாவிடம் கல்வி கற்ற மாணவர்கள் 100 கணக்குகளை 5 நிமிடத்தில் போட்டு முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு தன் மாணவர்களைத் திறமை மிக்கவர்களாக மாற்றினார். மாணவர்களுக்காகத் தங்கள் சொந்த பணத்தைச் செலவு செய்யும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறோம். அன்னபூர்ணாவோ ஒரு படி மேலே போய் தன் நகைகளை அடகு வைத்து ரூ.1.75 லட்சம் திரட்டினார். எதற்காகத் தெரியுமா.. தன் வகுப்பறையை நவீனமாக மாற்றத்தான். மாணவ - மாணவிகள் அமர நல்ல இருக்கைகள், மேஜைகள் வாங்கினார். ஆசிரியை அன்னபூர்ணா வகுப்பறை ஐரோப்பிய நாட்டுப் பள்ளி வகுப்பறை போல மாறியது. இந்த விஷயம் ஊடகங்களில் வெளிவர, ஆசிரியை அன்னபூர்ணாவுக்கு `தன்னலமற்றவர்' என்ற விருதை அரசு வழங்கிக் கௌரவித்தது.

இதற்குப் பிறகுதான் ஆசிரியை அன்னபூர்ணாவுக்குப் பிரச்னை ஏற்பட்டது. பொதுவாகவே பள்ளியில் ஓர் ஆசிரியை துணிந்து ஏதாவது செய்து விட்டால் அவருக்குத் தொல்லை கொடுக்கும் உள்ளடி வேலைகளை மற்றவர்கள் செய்வது உண்டு. பல ஆசிரியர்கள் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டுதான், மாணவ- மாணவிகளுக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர் என்று சொல்வார்கள். ஆசிரியை அன்னபூர்ணா விஷயத்தில் அது உண்மையாகி உள்ளது. மனம் உள்ளவர்கள் மாணவர்களுக்கு முடிந்ததைச் செய்கிறார்கள். மற்றவர்கள் குறைந்தபட்சம் உபத்திரவம் கொடுக்காமலாவது இருக்க வேண்டும். ஆனால், அன்னபூர்ணாவுக்கு நெருக்கடி  கொடுத்து அவரை பணியிலிருந்து ராஜினாமா செய்யும் மனநிலையை உருவாக்கியிருக்கிறார்கள். 

இது குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆசிரியை அன்னபூர்ணா இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில், ``தலைமை ஆசிரியரின் தூண்டுதலால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் தனலட்சுமி கணவர் என்னிடம் சொன்னது, ``எங்கள் பள்ளிக்கு நீ எதுவும் செய்யக் கூடாது. அரசு தேவையானதை செய்யும். வந்தியா... மற்றவர்களைப் போல நீயும் 4.10 மணிக்கு போய்க் கொண்டே இரு. அதை மீறி செய்யணும்னா  எனக்கு கமிஷன் கொடு. ஒரு பக்கம் அரசு தன்னலமற்றவர் என்று விருது கொடுக்கிறது. மறுபக்கம் அதே கட்சியைச் சேர்ந்தவர் என்னை மிரட்டுகிறார். பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலை இதுதான். இவரைப் போன்றவர்களால் என் மாணவர்களுக்கு இடைஞ்சல் வந்து விடக் கூடாது என்பதால் அமைதியாக இருக்கிறேன். அரசுப் பள்ளியில் நடக்கும் விஷயங்களைச் சமூகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்தப் பதிவை வெளியிடுகிறேன். இந்தப் பிரச்னைக்கு எனக்கு முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். தலைமை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். இல்லையென்றால் தினம் தினம் தலைவலிதான்'' என்று பதிவிட்டுள்ளார். 

மற்றொரு பதிவில், `தானும் செய்ய மாட்டார்கள்... மற்றவர்களையும் செய்யவிட மாட்டார்கள். மீறி செய்தால் உன்னைத் தனிமைப்படுத்துவோம்'' என்று ஆசிரியை அன்னபூர்ணா கூறியுள்ளார். ஆசிரியை அன்னபூர்ணா சந்திக்கும் பிரச்னைகளுக்குச் சுயநலம் பிடித்த ஆசிரியர்கள் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்!