Published:Updated:

``எங்க ஊர்ல பள்ளிக்கூடம் இருந்திருந்தா…!”- குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள்!

``எங்க ஊர்ல பள்ளிக்கூடம் இருந்திருந்தா…!”- குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள்!
``எங்க ஊர்ல பள்ளிக்கூடம் இருந்திருந்தா…!”- குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள்!

``ஒருவேளை எங்கள் கிராமத்துலேயே பள்ளிக்கூடம் இருந்திருந்தா எங்களுக்கு இப்படி ஆகியிருக்காது” என்று சிலர் அங்கலாய்த்ததாக ஆய்வுக் குழுவினர் பகிர்ந்துகொண்டனர். அந்தப் பெண்களுக்குத் திருமணம் முடிந்தபிறகும்கூட அந்தப் பகுதிகளில் பெரிதாக எதுவும் மாற்றம் வந்துவிடவில்லை.

து ஊர்ப்புறங்களில் புற்றீசல்களாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தோன்றிக்கொண்டிருந்த 90-களின் காலம். நான் படித்துக் கொண்டிருந்த மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து இந்தி மொழியும் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு இந்தி கற்பித்த ஆசிரியரின் பெயர் செல்லம்மா. சுருள் முடி, எப்போதும் தனிமைக்குப் பழகிப் போனதொரு முகம், இதுதான் அவர். எங்களுக்கு இந்தி கற்பித்ததைத் தவிர்த்து மற்ற ஆசிரியர்களைப்போலக் குழந்தைகளுடன் உரையாடுவதில் எல்லாம் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. அதனாலேயே எங்களுக்கு அவருடன் ஒட்டுதலும் இருந்ததில்லை. ஆனால், அவரின் அந்தத் தனிமைக்குப் பின்னணியில் பெரும் சோகம் ஒன்று இருந்ததென்று பின் நாள்களில் அறிந்துகொள்ள முடிந்தது.

செல்லம்மா டீச்சர், தனது பதினோராவது வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டவர். திருமணம் செய்துவைக்கப்பட்ட சில மாதங்களிலேயே அந்தக் கணவன் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிடச் சாபக்கேடுபிடித்த சடங்குகள் அவருக்கு விதவைப் பட்டம் வழங்கியிருந்தன. விதவையாக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வரக்கூடாது என்கிற விதியும் இருந்தது. இதனால், வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டிருந்த அவர்தான் எப்படியோ போராடி மீண்டும் பள்ளிக்குச் சென்று, கல்வி முடித்து வேலைவாய்ப்பாக நாங்கள் படித்த பள்ளியில் இந்தி கற்பித்துக் கொண்டிருந்தார். பெண்ணுரிமை பற்றியும் பெண்கல்வி பற்றியும் எங்கு, யார் சொல்லக் கேட்டாலும் எனக்கு செல்லம்மா டீச்சர் நினைவில் வந்துவிடுவார். ஒரு குழந்தைக்கு மறுக்கப்படும் கல்வியானது, எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு அவர் ஒரு நடமாடும் உதாரணம்.

இது நடந்தது 20 வருடங்களுக்கு முன்பு என்றாலும் 2019-லும் குழந்தைத் திருமணம் நடக்கிறதா என்கிற உங்கள் கேள்வி புரிகிறது. ஆனால், தேசியக் குடும்பநலக் கணக்கீட்டின்படி சமூக நல அலுவலகத்தால் கடந்த 3 ஆண்டுகளில் 1,458 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அண்மையில், சமகல்வி இயக்கம் என்னும் அமைப்பு தமிழகத்தில் நிகழும் குழந்தைத் திருமணம் குறித்து கண்டறியும் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் சுமார் 210 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல்களை அவர்கள் வெளியிட்டிருந்தனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே 19-லிருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள். தங்களது 11 வயதிலிருந்து 18 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலருக்கு, 15 வயது இருந்தபோது அவர்களது கணவர்களுக்கு வயது 31. ’இதில் 51 சதவிகிதம் பெண்கள் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள். 48 சதவிகிதம் பெண்கள் பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றவர்கள். மீதமுள்ளவர்கள் இடைநின்றவர்கள், அதனாலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள்’ என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.

இடைநிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் பல...! அவர்கள் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளிக்கான வாய்ப்புகள் இல்லை; பள்ளிகளுக்கு 1 முதல் 2 மணி நேரம் வரை நடந்தே செல்லவேண்டியிருந்தது; அப்படிச் செல்லும் வழியில் பாலியல் தொல்லைகள் அல்லது வன்முறைகளுக்கு ஆளாக நேர்ந்தது; ஏன், சிலர், சாதியப் பழக்கங்களும் வறுமையும் காரணம் என்றும் கூறியிருக்கின்றனர். ஆக, இடைவிலகலுக்குப் பிறகு வேறு வாய்ப்புகள் இல்லாததால், பிள்ளையைத் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

திருமணம் செய்துகொண்டபிறகாவது அவர்கள் வாழ்க்கை அமைதியாக இருக்கிறதா? இல்லை, அவர்களில் 17 சதவிகிதம் பெண்கள் தங்கள் கணவரை இழந்தவர்கள் அல்லது குடும்ப வன்முறையால் தனித்து விடப்பட்டவர்கள். பிரசவத்தின்போது சிக்கலுக்கு ஆளானவர்கள், அடிக்கடி கருக்கலைப்பு ஏற்பட்டவர்கள் எனக் காரணங்கள் நீளுகின்றன.

``ஒருவேளை எங்கள் கிராமத்துலேயே பள்ளிக்கூடம் இருந்திருந்தா எங்களுக்கு இப்படி ஆகியிருக்காது” என்று சிலர் அங்கலாய்த்ததாக ஆய்வுக் குழுவினர் பகிர்ந்துகொண்டனர். அந்தப் பெண்களுக்குத் திருமணம் முடிந்தபிறகும்கூட அந்தப் பகுதிகளில் பெரிதாக எதுவும் மாற்றம் வந்துவிடவில்லை. பள்ளிகள் இன்னும் வரவில்லை. அதனால், அதற்கு அடுத்த தலைமுறையிலும் குழந்தைத் திருமணம் என்பது தொடர்ச்சி.

இதற்கான முற்றுப்புள்ளியாகச் சில பரிந்துரைகளை ஆய்வுக் குழு முன்வைத்துள்ளது. அதன்படி, ``ஆண் பெண் இருபாலருக்குமான சட்டப்படி திருமண வயது ஒரே வயதாகத் திருத்தம் செய்யப்பட வேண்டும். 18 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கான சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். கல்வியை அடித்தட்டளவில், வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரப்படுத்தி, முழுமையான வளர்ச்சியை நோக்கிச் செலுத்தக் கூடிய வழிவகையாகக் கொள்ள வேண்டும். இதில், ஒவ்வொரு பள்ளியிலும் பெண் பிள்ளைகளுக்கான தனிக்கழிவறை வசதிகள் உட்பட ஒவ்வோர் ஊராட்சியிலும் இருக்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதும் அடங்கும். கல்வி ஆதாயமாக அல்லாமல் அடிப்படை உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்” என்கின்றனர்.

கனவுகள் என்னவென்றுகூடக் கேட்கப்படாமல், எவருக்கோ வாழ்நாள் அடிமையாகக் கழுத்தை நீட்டிக் குரல்வளை இறுகத் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டச் செல்லம்மாக்கள், உண்மையிலேயே செல்லம்மாக்களாக நேசிக்கப்பட்டு கல்வி பயிற்றுவிக்கப்படட்டுமே.

ஏனெனில், ஒரு பெண்பிள்ளைக்குத் தரப்படும் பூரணக் கல்வி, ஒரு தலைமுறைக்கான கல்வியைத் தருவதற்குச் சமம். 

அடுத்த கட்டுரைக்கு