Published:Updated:

``பீடி சுத்துறதுதான் பொழுதுபோக்கு’’ - குரூப்-1 தேர்வில் வென்ற தியேட்டர் ஊழியரின் மகள் சரோஜா

``பீடி சுத்துறதுதான் பொழுதுபோக்கு’’ - குரூப்-1 தேர்வில் வென்ற தியேட்டர் ஊழியரின் மகள் சரோஜா
``பீடி சுத்துறதுதான் பொழுதுபோக்கு’’ - குரூப்-1 தேர்வில் வென்ற தியேட்டர் ஊழியரின் மகள் சரோஜா

``சார்... எங்க வீட்டுல உள்ளவங்க எல்லோரும் சேர்ந்து இதுவரைக்கும் ஒரு புகைப்படம்கூட எடுத்ததில்ல. நீங்கதான் எங்க குடும்பத்தை முதலில் படம் எடுத்திருக்கீங்க. அதைக் கொஞ்சம் காட்டுங்களேன். பார்த்துக்குறேன்...’’ எனக் கேட்டார். பெற்றோர் சகோதரருடன் இருக்கும் புகைப்படத்தை அவரிடம் காட்டியதும் முகம் அத்தனை பிரகாசம்.

நெல்லையில் உள்ள தியேட்டரில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகள் குரூப்-1 தேர்வு எழுதியதில் வெற்றி பெற்று டி.எஸ்.பி பணி வாய்ப்பைப் பெற்றுள்ளார். தமிழ் வழியில் தேர்வு எழுதிய அவர் முதல் முயற்சியிலேயே வென்று தேர்வாகியிருக்கிறார். 

சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் அதற்கான முயற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் எட்டிப் பிடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் நெல்லையைச் சேர்ந்த சரோஜா. ஏழ்மையான குடும்பம். சரோஜாவின் தந்தை முருகானந்தம் நெல்லைச் சந்திப்பு பகுதியில் உள்ள திரையரங்கில் சீட்டு கிழிக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். தாய் பால்தாய் பீடி சுற்றும் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய சகோதரர் விஜயகுமார் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். 

நெல்லைச் சந்திப்பு பகுதியில் உள்ள சன்னாசி கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார். குடும்ப வறுமையால் அவரைப் பள்ளியிலிருந்து பாதியிலேயே நிறுத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாகப் பெற்றோரிடம் பேசி தொடர்ந்து படித்திருக்கிறார். படிப்பில் சுமார் என்றாலும் பாஸாகி விடுவதால் தொடர்ந்து படிக்க அனுமதித்திருக்கிறார்கள் பெற்றோர்கள். 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 350 மதிப்பெண்களும் ப்ளஸ் டூ-வில் 719 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருக்கிறார். அதற்கு மேல் படிக்க வைக்க முடியாததால், மாண்டிசோரி கோர்ஸ் படித்திருக்கிறார். பிறகு, தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் பணியில் சேர்ந்த சரோஜா, அதில் கிடைத்த சொற்ப வருவாயைக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி வழியாக பி.ஏ தமிழ் படித்திருக்கிறார். அதன் பின்னர் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டே தமிழ்ப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்நிலையில் குரூப்-1 தேர்வு எழுதியதிலும் வெற்றி பெற்று டி.எஸ்.பி ஆகியிருக்கிறார் சரோஜா. அவரின் விடாமுயற்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றியால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

குரூப்-1 தேர்வு கனவு கைகூடிய சந்தோஷத்தில் இருந்த சரோஜாவை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். சரோஜாவை சந்தித்துப் பேசினேன். ``எனக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம். ஆனாலும் எங்க வீட்டில் படிப்பு வாசனை யாருக்குமே கிடையாது. அதனால என்னால என்ன முடிஞ்சதோ அதை வைச்சு படிச்சேன். ஓய்வு நேரத்துல அம்மாகூட உட்கார்ந்து பீடி சுற்றுவேன். அப்பலாம் அம்மாகிட்ட ‘நான் நெறைய படிக்கணும்மா... அரசாங்க வேலைக்குப் போகணும். நம்ம குடும்பத்தைக் கரை ஏத்தணும்’’னு சொல்லிட்டு இருப்பேன். அம்மா நான் சொல்றதை எல்லாம் ரொம்ப ஆர்வமா கேட்பாங்க. அவங்கதான் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இப்ப எனக்கு 27 வயசாகுது. இதுவரைக்கும் எங்கம்மாவை பார்க்கிற சொந்தக்காரங்க எல்லாம் `பெண்ணுக்கு கல்யாணத்தைப் பண்ணி வைக்காம... படிக்க வைச்சுட்டிருக்கியே... வயசாகுதுல்ல'னு சொல்லிட்டே இருப்பாங்க. அவங்களைக் குறை சொல்லவும் ஆரம்பிச்சாங்க.

சொந்தக்காரங்க கேட்குறப்ப எல்லாம் எங்கம்மா சொல்ற ஒரே பதில்...`எம்மக ஒருநாளைக்கு பெரிய ஆபீஸரா வருவா. அதுவரைக்கும் அவ படிச்சுக்கிட்டே இருக்கட்டும்’ங்கிறதுதான். அம்மா மாதிரிதான் அப்பாவும் என் அண்ணனும். இதுவரைக்கும் போதும் படிச்சதுனு ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை. கடுமையான வறுமையிலும் குரூப்-1 தேர்வு எழுதுறதுக்காகத் தனியாகப் பயிற்சி மையத்தில் சேரணும்னு நான் சொன்னப்ப `நீ படி... நாங்க சமாளிக்கிறோம்’னு சொல்லி சேர்த்துவிட்டாங்க’’ என்றவர் சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

’’நான் இன்னிக்கு இந்த நிலைக்கு வந்திருக்கேனா அதுக்கு முக்கிய காரணம் எங்க ஸ்கூல் ஹெச்.எம் ஈஸ்வரி. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே எனக்கு நிறைய ஆலோசனைகளைச் சொல்வாங்க. ’எப்படியாவது கஷ்டப்பட்டுப் படிச்சு பாஸாகிடு. அப்பத்தான் உங்க வீட்டுல மேற்படிப்பு படிக்க வைப்பாங்க’னு சொல்லி உற்சாகப்படுத்துவாங்க. பீஸ் கட்டுறதுக்கு லேட்டானா... உடனே அவங்க கை காசை போட்டு கட்டுவாங்க. என்னை தன் பொண்ணு மாதிரி நினைச்சு ஊக்கப்படுத்தினாங்க. முதல் முறையா போலீஸ் தேர்வுல பாஸாகி, செலக்‌ஷனுக்குப் போயிருந்தேன். ஆனா எதிர்பாராத விதமா, நீளம் தாண்டுதல்ல தோல்வியைத் தழுவிட்டேன். என்னடா இவளோ கஷ்டப்பட்டு வந்து இதுல தோத்துட்டோமேனு பயங்கர மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்ப ஹெச்.எம் மேடமும், அவங்க சாரும்தான் என்னை தேற்றினாங்க. தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆலோசனைகள் சொல்லி என்னை அடுத்த தேர்வுக்குத் தயார்ப்படுத்தினாங்க. அவங்க இல்லைனா நான் இந்த இடத்தை எட்டியிருக்கவே முடியாது’’ என்று நெகிழ்ந்தவர் நேர்முகத் தேர்வு பற்றிச் சொன்னார்.

``நேர்முகத் தேர்வுக்கு என்னை மாதிரி நிறைய பேர் வந்திருந்தாங்க. உள்ள போனவங்க எல்லாருக்கு பலமணி நேரம் கேள்விகள் கேட்கப்பட்டுச்சுனு சொன்னாங்க. ஆனா எனக்கு 17 நிமிஷத்துல நேர்முகத் தேர்வு முடிஞ்சது. பல கேள்விகளைக் கேட்டவங்க, உங்களோட பொழுதுபோக்கு என்னனு கேட்டாங்க. ``எனக்கு பொழுதுபோக்குனு ஒண்ணு இல்ல சார். நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் அம்மாவுக்குப் பீடி சுத்தி கொடுப்பேன். இல்லாட்டி பீடிக்கான இலையை வெட்டிக் கொடுப்பேன்’னு சொன்னேன்’’ என்றவரின் பதிலைக் கேட்டு நெகிழ்ந்து போய்விட்டார்களாம் நேர்முகத் தேர்வுக்கான உயர் அதிகாரிகள்.

மகள் சரோஜா பேசுவதைப் பெருமையோட கேட்டுக்கொண்டிருந்த தாயார் பால்தாய், ``என் மவ இந்தளவுக்கு எங்களுக்குப் பெருமையை வாங்கித் தருவானு நினைக்கலீங்க சார். கலெக்டர் என் மகளுக்குச் சால்வை போர்த்தி வாழ்த்தினதும் மனசெல்லாம் குளிர்ந்து போச்சு. என் மக கைக்குழந்தையா இருந்தப்ப எங்க ஊர்ல வெள்ளம் வந்துச்சு. அவளை கையில வைச்சுகிட்டு தாமிரபரணி வெள்ளத்துல மிதந்து தப்பிச்சேன். அப்படிக் காப்பாத்தின பொண்ணு இந்தப் பேர் வாங்கிதரணும்னு இருக்குது’’ என்று கண் கலங்கினார்.

குரூப்-1 தேர்வில் வென்ற அவருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். நாமும் அவரிடம் பேசிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு வெளியே வந்தோம். புறப்படுவதற்குத் தயாரானபோது வேகமாக வீட்டிலிருந்து வெளியே வந்த சரோஜா, நமது புகைப்படக் கலைஞரைப் பார்த்து, ``சார்... எங்க வீட்டுல உள்ளவங்க எல்லோரும் சேர்ந்து இதுவரைக்கும் ஒரு புகைப்படம்கூட எடுத்ததில்ல. நீங்கதான் எங்க குடும்பத்தை முதலில் படம் எடுத்திருக்கீங்க. அதைக் கொஞ்சம் காட்டுங்களேன். பார்த்துக்குறேன்...’’ எனக் கேட்டார். பெற்றோர் சகோதரருடன் இருக்கும் புகைப்படத்தை அவரிடம் காட்டியதும் முகம் அத்தனை பிரகாசம்.

பின் செல்ல