Published:Updated:

திருநெல்வேலி டு கலிபோர்னியா! - `வாவ்' சொல்லவைக்கும் அஷ்விதாவின் சேவை

திருநெல்வேலி  டு கலிபோர்னியா! - `வாவ்' சொல்லவைக்கும் அஷ்விதாவின் சேவை
திருநெல்வேலி டு கலிபோர்னியா! - `வாவ்' சொல்லவைக்கும் அஷ்விதாவின் சேவை

திருநெல்வேலி டு கலிபோர்னியா! - `வாவ்' சொல்லவைக்கும் அஷ்விதாவின் சேவை

திருநெல்வேலியைச் சுற்றியுள்ளவர்களுக்கு அஷ்விதா என்பவரும் 'போதி ட்ரீ' என்கிற அமைப்பும் நன்கு பரிட்சயம். கிராமப்புறத்திலுள்ள மாணவர்களும் பெண்களும் தங்களின் வாழ்க்கையைத் தாங்களே சிறப்பாக வடிவமைத்துக்கொள்வது, செல்ஃப் மோட்டிவேஷனை வளர்த்துக்கொள்வது, தங்களிடம் உள்ள திறமைகளை எப்படி வெளிப்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கான பயிற்சிகளைப் போதி ட்ரீ அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதுவரை  10000-க்கும் அதிகமான கிராமப்புற பெண்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுத்திருக்கும் போதி ட்ரீ அமைப்பு, இப்போது ஐந்தாம் ஆண்டை எட்டியிருக்கிறது.

“இப்போ நினைச்சுப் பாத்தாலும் பிரமிப்பாவே இருக்குதுங்க. என்னோட சொந்த ஊரு முக்கூடல்தான். காலேஜ் முடிச்சிட்டு அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகிட்டு இருந்த சமயம், 'யங் இந்தியா ஃபெல்லோஷிப்' மூலமா டெல்லி அசோகா யுனிவர்சிட்டியில் ஓராண்டு முதுநிலை படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதை சரியா பயன்படுத்திக்கிட்டேன். அப்பறம், தஞ்சாவூர்ல சுகவாழ்வியல் கேர் ஆரோக்கிய நிலையம் வழியா சோஷியல் ஆக்ட்டிவிட்டீஸ்ல ஈடுபட்டேன். அங்கிருந்து திரும்பவும் முக்கூடல் வந்த பிறகுதான், போதி ட்ரீ அமைப்பை ஏற்படுத்தினேன். பீடி சுத்துற பெண்கள்கிட்ட மாற்றத்தை ஏற்படுத்தணும்ங்கிற நோக்கத்தோடு, பல்வேறு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துறது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு அவங்க படிப்பு தொடர்பான உதவிகள், மேற்படிப்புக்குத் தேவையான ஆலோசனைகள்  மாதிரியான தேவைகளைச் செய்துகொடுக்கிறதுன்னு தொடர்ந்து கல்வி சம்பந்தமா இயங்கிட்டு இருக்கிறோம்” என்கிறார் அஷ்விதா. கிராமப்புற பெண்களுக்காகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளிக் கல்லூரி மாணவிகளுக்காகவும் தொடர்ந்து பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் அஷ்விதா, கடந்த சுதந்திர தினத்தன்று முதல்வர் கையால் மாநில இளைஞருக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“ மாநில இளைஞர் விருது வாங்கியது ரொம்பப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கு. அதேபோல, சமீபத்தில் கலிபோர்னியா சென்று, கல்வி என் வாழ்க்கைப் பாதையை மாற்றுவதற்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என்கிற தலைப்பில் பேசினேன். அது TED Talk ல் வெளிவந்திருக்கிறது. உலகளாவிய பெண் சாதனையாளர்கள் கலந்துகொண்டு பேசும் TED Talkல் என்னுடைய வாழ்க்கைப் பதிவும் வந்திருப்பதுகுறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுகொடுத்த ஊக்கம், தொடர்ந்து எங்களை இன்னும் வேகமாகச் செயல்படத் தூண்டியிருக்கிறது. கடந்த  10 நாள்களுக்கு முன்புகூட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தினோம். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள 15 கல்லூரிகளைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் 30 பேரை அழைத்து, மூன்று நாள்கள் பயிற்சி கொடுத்திருக்கிறோம். பல்வேறு தடைகளை மீறி கல்லூரிக்குள் வந்திருக்கும் மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு முன்பாக உள்ள சவால்கள், அவர்களின் அடுத்தகட்ட நகர்வை எப்படித் தீர்மானிக்க இருக்கிறார்கள், பொதுவெளியில் எப்படி அவர்கள் தங்களைத் திறமை மிக்கவர்களாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது போன்றவற்றைக் கலந்துரையாடல்கள், பயிற்சி வகுப்புகள் மூலமாகக் கொண்டுசென்றோம்” என்றவர் தொடர்ந்து, 

“இந்த நான்கு ஆண்டுகளில், பெண்களுக்கான தளத்தில் எங்களால் முடிந்த பல வேலைகளைச் செய்திருக்கிறோம். இதோ எங்களுடைய அடுத்த ஆண்டில் இன்னும் சமூகத்துக்கான பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்யவேண்டியிருக்கிறது. அதற்கு, மக்களுடைய ஆதரவும் பெரிதாய் தேவையிருக்கிறது. நிச்சயமாக பெண்கள் மட்டுமில்லாமல் அவர்களின் முன்னேற்றத்தில் துணை நிற்கும் ஆண்களும் எங்களுக்கு உதவுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது” புன்முறுவலோடு முடிக்கிறார் அஷ்விதா. 

அடுத்த கட்டுரைக்கு