Published:Updated:

வறுமையிலிருந்து திமிறி எழுந்த கல்வி அதிகாரி தங்கமணியின் கதை! - வீழ்வேனென நினைத்தாயோ - 5

வறுமையிலிருந்து திமிறி எழுந்த கல்வி அதிகாரி தங்கமணியின் கதை!  - வீழ்வேனென நினைத்தாயோ - 5
வறுமையிலிருந்து திமிறி எழுந்த கல்வி அதிகாரி தங்கமணியின் கதை! - வீழ்வேனென நினைத்தாயோ - 5

காலேஜ் முடிச்சு வீடு சேர்ந்ததும், கோரைக்காட்டுக்கு கூலி வேலைக்குப் போய்டுவாங்க. இடையில கம்மியான சம்பளத்துக்கு வேலை வந்தது. ஆனா அவங்களுக்கு அரசுப்பணியில உயர் அதிகாரி ஆகுறதுதான் விருப்பம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முந்தைய பாகங்கள்:

5-ம் வகுப்புக்கும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவைப் பற்றிய விவாதம். ``14 வயது வரை இலவசக் கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துவதே, குறைஞ்சது பசங்க எட்டாம் வகுப்பு வரைக்குமாவது படிச்சிருக்கணும். எட்டாம் வகுப்பு வரைக்கும் அவனுக்கு கல்விமுறை பற்றிய பயம் இருக்கக் கூடாதுங்கிறதுதான்’’ என்று பேசிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்தியவர்தான் தங்கமணி. 

புற்றுநோய் பாதிப்பை அறிந்துகொண்ட ஒரு மாதத்துக்குள், தங்கமணிக்கு முடிவுரை எழுதிவிட்டது வாழ்க்கை. ``நான் பள்ளி மாணவனா இருக்கும்போதே அந்தப் புள்ளைய நல்லா தெரியும். தலையைக்கூட நல்லா வாராம கிழிந்த உடுப்போடு பள்ளிக்கூடத்துக்கு வந்த பொண்ணு. வறுமையில இருந்த குடும்பத்துலதான் தம்பியையும் கூட்டிக்கிட்டு ஸ்கூலுக்குப் போகும். ஒருநாள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் கொஞ்சமும் மனசுவிடாம, கூலிக்குப் போய், குடும்பத்துக்கு உதவி செஞ்சுக்கிட்டே படிச்ச பொண்ணு. அதே தன்னம்பிக்கையோடு இளநிலை கல்லூரிப் படிப்பையும் பி.எட் பட்டயப் படிப்பையும் முடிச்ச அவளை, ஊரே வாய்பிளந்து பார்த்துச்சு” என்று நண்பர் பேசிய வார்த்தைகள்தான், தலைமுறைக் கனவைச் சாத்தியமாக்கிய தங்கமணியின் குடும்பத்தினரிடம் பேசவைத்தது. 

பத்து நாள்களுக்கு முன்பு, தங்கள் கிராமத்தின் தேவதையை இழந்திருக்கிறார்கள் அந்த மக்கள். தங்கமணியின் உறவினரும் அவரையே தன்னுடைய ரோல்மாடலாகவும் நினைக்கும் துரைசாமி பேசினார். ``காலேஜ் முடிச்சு வீடு சேர்ந்ததும், கோரைக்காட்டுக்குக் கூலிவேலைக்குப் போயிடுவாங்க. இடையில கம்மியான சம்பளத்துக்கு வேலை வந்தது. ஆனா, அவங்களுக்கு அரசுப்பணியில உயர் அதிகாரி ஆகுறதுதான் விருப்பம். தொடர்ந்து கூலிவேலை பார்த்துக்கிட்டே, குரூப் தேர்வுகளுக்குப் படிச்சாங்க. கிராமத்துல சிலபேரு திமிருன்னு திட்டினாங்க. தன்னை அவங்க எதுக்காகவும் சமரசம் பண்ணிக்கலை. இந்த வேடிச்சிபாளையம் கிராமத்துல இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பின்புலத்தோட, தன் உடம்பை உருக்கி படிச்சு உயர் அதிகாரியான முதல் பெண் அவங்கதான். மூலனூர் ஒன்றியத்தோட AEEO (உதவி தொடக்கக் கல்வி அலுவலர்)” என்றார். இனி இந்தக் கிராமத்தின் பெண் பிள்ளைகளுக்கெல்லாம் வறுமை உடைக்கும் வழியை விதைத்துப்போயிருக்கும் முன்னத்தி ஏரின் பெருமை சொல்லும்போதே உடைந்து அழுகிறார். 

ஊர் போற்றும் மகளை, அன்பு மனைவியை இழந்து நிற்கிறார் குமார். இரு குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடம் பதில்கள் ஏதுமில்லை. ``என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது. சமாதானம் ஆனதா என்னால நடிக்கவும் முடியாது. குழந்தைகள நினைச்சா இன்னும் விரக்தியா இருக்கு. என் குலசாமி போயிடுச்சு. சின்ன குடிசையில வளர்ந்த தெய்வம். அவ்வளவு எளிமையா இருப்பாப்ல. என் சாமி” என்றவரின் வார்த்தைகள் உடைகின்றன. இலவசக் கல்விக்கு எதிராக, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, எளியவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்கு எதிராக... கணினிக்கு முன்னால் அமர்ந்துகொண்டு கருத்துச் சொல்பவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாட்டில், தெருவிளக்கில் படிக்கும் குழந்தைகளை அதிகமாக வைத்துக்கொண்டு, புதிய கல்விக் கொள்கைக்கு விளக்கமளிக்கும் பலருக்கு பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் தங்கமணி. 

`பாழும் கதவு எனைக்கண்டு வழி மூட
மீறி நுழைந்தேன் நான் அந்த ஒளிபோல
குடிசை விளக்கில் வளரும் நானொரு ஞானசூரியன்.. எனை ஆளும் தேசமே!’

- ஆளும் அரசுகளை நோக்கிய கவிஞர் உமா தேவியின் வரிகள் நமக்கு தங்கமணிகளின் கதைகளைச் சொல்லும்.

உறங்கச் சென்றுவிட்டார் தங்கமணி, தலைமுறைக் கனவுகளை தன் கிராமத்து மகள்களின் கைகளுக்கு மாற்றிவிட்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு