Published:Updated:

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!- மதுரையில் பதுங்கியிருந்த இமாம் கைது

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!- மதுரையில் பதுங்கியிருந்த இமாம் கைது
கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!- மதுரையில் பதுங்கியிருந்த இமாம் கைது

கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பிய முன்னாள் இமாம் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு பகுதியில் உள்ள மசூதியில் இமாமாக இருந்தவர் சஃபீக் அல் குவாஸ்மி. கடந்த பிப்ரவரி மாதத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வனப்பகுதி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 15 வயது சிறுமியை அல் குவாஸ்மி தன் காரில் கடத்தினார். திருவனந்தபுரம் அருகே விதுரா என்ற இடத்தில் வனப்பகுதியில் காரில் வைத்து சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். 

வனப்பகுதியில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர்,  காட்டுக்குள் அநாதையாக கார் நிற்பதைப் கண்டு எட்டிப் பார்த்துள்ளார்.  உள்ளே இமாமுடன் அந்தச் சிறுமி இருந்துள்ளார். `யார் இந்தச் சிறுமி ' என்று அந்தப் பெண் கேட்டதற்கு, `தன் மனைவி' என்று  இமாம் பதில் அளித்துள்ளார். ஆனால், சந்தேகமடைந்த பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது உறுதியானது. இதனால், மசூதியில் இமாம் பணியிலிருந்து அல் குவாஸ்மி நீக்கப்பட்டார். 

தொடர்ந்து இமாம் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்ததும் அவர் தலைமறைவானார். நெடுமங்காடு போலீஸ்  துணை டி.எஸ்.பி அசோகன் தலைமையில் 5 தனிப் படையினர் அல் குவாஸ்மியைத் தேடிவந்தனர். இந்த நிலையில், சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு,  மதுரையில் லாட்ஜ் ஒன்றில் பதுங்கியிருந்த அல் குவாஸ்மியை கேரள போலீஸார் கைது செய்தனர். முன்னதாக இமாம் மீது புகார் அளிக்கப்பட்டதும் அல்குவாஸ்மியை கைது செய்ய நெடுமங்காடு போலீஸார் அவரின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, காரை மூடப் பயன்படுத்தும் கவரை பயன்படுத்தி தன் சகோதரரைக் காப்பாற்றிய அல்குவாஸ்மின் சகோதரர் அல் அமீனும் கைது செய்யப்பட்டுள்ளார்.