Published:Updated:

பொள்ளாச்சி சம்பவமும்... நிர்பயா சட்டமும்...! - அரசு அலட்சியத்தின் அத்தாட்சிகள் #PollachiSexualAbuse

மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதனிடம் பேசியபோது, ``இந்த விவகாரத்தில் சம்பந்தமுடைய நபர்கள் பற்றி பொதுவுக்குத் தெரியும் என்பதால் இதுகுறித்துத் தற்போது எதுவும் பேசமுடியாது, நாங்கள் முடிந்தவரை இதில் நடவடிக்கை எடுக்கப் பார்க்கிறோம்’ என்கிற உறுதிப்பாடற்ற பதிலையே கொடுக்கிறார். சமூகவலைதளங்களில் இந்த விவகாரம் பற்றி எரிந்தாலும் தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக எவ்வித விவரமும் தெரியவரவில்லை என்பதை அவரிடம் பேசியதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது. 

பொள்ளாச்சி சம்பவமும்... நிர்பயா சட்டமும்...! - அரசு அலட்சியத்தின் அத்தாட்சிகள்  #PollachiSexualAbuse
பொள்ளாச்சி சம்பவமும்... நிர்பயா சட்டமும்...! - அரசு அலட்சியத்தின் அத்தாட்சிகள் #PollachiSexualAbuse

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரம், நிர்பயா சம்பவத்தைப் போன்று மொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் உணர்வுகளைக் கொட்டி வருகிறார்கள். வெறும் நான்கைந்து ஆண்கள், இத்தனை பெண்களையும் மிரட்டிக் கிட்டத்தட்ட 7 ஆண்டுக்காலமாக வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்றால் இந்தச் சமூகம் ஆண்கள் மனநிலையை எவ்வளவு திமிருடனும் பெண்கள் மனதை எவ்வளவு பலவீனமாகவும் கட்டமைத்துள்ளது என்கிற கேள்வி எழுகிறது.

2012-ம் ஆண்டில் டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நிர்பயாவுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைபோல தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நிர்பயாக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சில பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்பயா விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது என்கிற மேலோட்டமான அடிப்படையிலேயே இந்தக் கருத்து வெளிப்படுகிறது. ஆனால், நிர்பயா சம்பவம் நாடெங்கிலும் ஏற்படுத்திய அதிர்வலையினால் அமைக்கப்பட்ட நீதிமன்ற ஆணையம் மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முன்வைத்த எந்த மாற்றங்களையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் அதன் மறுபக்கம் இருக்கும் உண்மை. 

நிர்பயா வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான மூவர் ஆணையம் கீழ்க்காணும் சில முடிவுகளை முன்வைத்தது..

- பாலியல் வன்முறைக்கு எதிரான தனி விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டதும் வழக்குத் தொடர்பாக அந்த விசாரணைக் குழுவுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த விசாரணைக்குழு சட்ட ஆலோசனைகளை வழங்கவேண்டும். 

- விசாரணை அறை உட்பட காவல் நிலையங்களின் உள்ளேயும் வெளியேயும் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். 

- பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த வகையிலும் உதவும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் செயல்படவேண்டும். 

- பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ முன்வரும் தனிநபர்களைக் குற்றவாளிகளைப் போல அணுகக் கூடாது.

-  பாலியல் குற்ற விவகாரங்களை எப்படி அணுகவேண்டும் என்பதற்குக் காவல்துறைக்குச் சரியான பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

- காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறையால் பயிற்சி கொடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் பாலியல் வன்முறைக்கு எதிரான கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும். 

- பாலியல் வன்முறையில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்கள் தேர்தலில் நிற்பதற்குத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். 

- குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டியது அவசியம். அதனை இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது.   

நிர்பயாவின் இரண்டாம் வருட நினைவேந்தலில் பேசிய அவரது தந்தை, வர்மா ஆணையத்தின் ஒரு பரிந்துரைகூட நிறைவேற்றப்படவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

பணமதிப்பு நீக்கமும் பத்து சதவிகித இடஒதுக்கீடும் அரசால் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட அதே வேகத்தில் வர்மா கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றையாவது நிறைவேற்றியிருந்தால்கூட இன்று  பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்பயாக்கள் ஏதோ ஒருவகையில் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். வர்மா ஆணையம் பரிந்துரைத்த மற்றொரு முக்கிய முடிவு நிர்வாகச் சீர்திருத்தம். நிர்வாகச் சீர்திருத்தம் மட்டுமே நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க உதவும். இல்லையென்றால் பாலியல் குற்ற வழக்குகள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் நீதிமன்றத்தில் தேக்கமடைந்தே கிடக்கும் என்று ஆணையம் சொன்னது. ஆனால், நிர்வாகச் சீர்திருத்தம் செய்வது அரசின் அடிமடியிலேயே கைவைக்கும் சூழல் என்பதால் மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் பொள்ளாச்சி சம்பவத்தில் அரசியல்வாதிகள் தொடர்பும் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தகுந்த நீதி கிடைப்பதும் சந்தேகமே. சி.பி.ஐ-க்கு இந்த வழக்கு தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக உடனிருந்து உதவ வேண்டிய மாவட்டச் சட்டப்பணிகள் ஆணையமும் எவ்வித விழிப்புணர்வற்ற பதிலையே தருகிறது.

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தேசிய மகளிர் ஆணையமும் இதுவரை அமைதியாகவே இருந்து வருகிறது. மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதனிடம் பேசியபோது, ``இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றி பொதுவுக்குத் தெரியும் என்பதால் இதுகுறித்துத் தற்போது எதுவும் பேசமுடியாது, நாங்கள் முடிந்தவரை இதில் நடவடிக்கை எடுக்கப் பார்க்கிறோம்’ என்கிற உறுதிப்பாடற்ற பதிலையே கொடுக்கிறார். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம், பற்றி எரிந்தாலும் தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக எவ்வித விவரமும் தெரிய வரவில்லை என்பதை அவரிடம் பேசியதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது. 

சமூகச் செயற்பாட்டாளர் பாடம் நாராயணன் கூறுகையில், ``நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு கொதித்தெழுந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பெண்கள் பாதுகாப்புக்கென 13 அம்ச திட்டத்தை அறிவித்தார். அதில் பாலியல் தொல்லை தருபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பெண் காவலர்களைக் கொண்ட சிறப்புப்படை, பாலியல் கொடுமை செய்யும் ஆண்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம், அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வலிமையான சட்டம் என மிகக் கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில், ஒன்றாவது இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதே போல 2014-ல் பொள்ளாச்சியின் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் காப்பகம் ஒன்றில் குழந்தைகள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அதில் ஒரு குழந்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். அந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா, விடுதிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களைக் கொண்டுவந்தார். மொத்த மாநிலத்தையும் ஒரு சம்பவம் உலுக்கியிருக்கும் சூழலில் ஒரு பொறுப்புள்ள முதல்வர் உடனடியாக அதுதொடர்பான அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை. இனிவரவிருக்கும் தேர்தலுக்கான அறிக்கைகள் முக்கியமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருப்பது அவசியம். மற்றபடி குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் தொடுக்கப்படுவதால் எந்தவிதப் பயனுமில்லை. போலீஸுக்கும் இதுதொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் எவ்விதப் பயிற்சியும் இல்லை. நிர்பயா வழக்கில் வர்மா ஆணையம் கொடுத்த பரிந்துரைகளை இனியேனும் காலதாமதமில்லாமல் அரசு செயல்படுத்த வேண்டும்.

பாலியல் வன்முறை தொடர்பாக  மிகவும் மோசமான இடமாகக் கருதப்படுவது உத்தரப்பிரதேச மாநிலம்தான். அங்கே பெட்டிக் கடைகளில் கூட சர்வ சாதாரணமாக பாலியல் வன்முறையில் ஈடுபடும் காணொலிகள் கிடைக்கும். அங்குள்ள சிறுவர்கள் காசு கொடுத்து அந்த காணொலியை வாங்கிப் பார்ப்பார்கள். போகிற போக்கைப் பார்த்தால் தமிழகமும் அப்படியான சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுமோ என்கிற அச்சம் எழுகிறது. சமூக வலைதளத்தில் மக்கள் இந்தக் குற்றவாளிகளை நாய்கள் என்கிறார்கள். ஆனால், எந்த நாய்களும் இப்படிச் செய்யாது. பசுவைப் பாதுகாக்கும் அரசு, பெண்களைப் பாதுகாப்பது இல்லை” என்றார். 

இத்தனை அலட்சியங்கள் பாலியல் குற்ற விவகாரங்களில் தொடர்ந்து நிலவும் நிலையில் பொள்ளாச்சியில் பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் எந்த அளவிற்கு நேர்மையுடன் கையாளப்படும் என்கிற கேள்வியும் எழுகிறது. வழக்கு இழுத்தடிக்கப்படாமல் விரைந்து முடிக்கப்படும் உத்தரவாதம் மட்டுமே நீதியை நிலைநிறுத்தும்.