Published:Updated:

செல்போன் பெர்சனல் வீடியோக்களை முற்றிலும் அழிக்க முடியுமா?! சில விளக்கங்கள்!

செல்போன் பெர்சனல் வீடியோக்களை முற்றிலும் அழிக்க முடியுமா?! சில விளக்கங்கள்!
செல்போன் பெர்சனல் வீடியோக்களை முற்றிலும் அழிக்க முடியுமா?! சில விளக்கங்கள்!

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை ஏமாற்றி, அவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னையில் முக்கியமான ஆதாரங்களாகப் பார்க்கப்படுபவை வீடியோ ஆதாரங்கள்தான். இதுவரை பல வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்படாமல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபாச வீடியோக்களைக் காட்டி, சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி அந்தச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இந்த நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்களை முழுமையாக அழித்துவிட முடியுமா என்பது குறித்து எத்திக்கள் ஹேக்கர் சிவ பாலாஜியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களைப் பெரும்பாலும் சமூக வலைதளங்களின் மூலமாகத்தான் தொடர்பு கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களைப் பாதுகாப்புடன் பயன்படுத்துவது எப்படி?’’

``தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் வந்தால் முதலில் அதற்குப் பதிலளிக்காமல் தவிர்ப்பதே நல்லது. யார் என்று தெரியாதவர்களுக்கு பதிலளித்துப் பேச்சுவார்த்தையைத் தொடரும்போதுதான், அவை இதுபோன்ற பிரச்னைகளுக்குக் காரணமாக வழிகோலும் வகையில் அமைகின்றன. சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை, யாருடன் வேண்டுமென்றாலும் பழகி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான வழிவகைகள் உள்ளன. அவை உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அதுதான். என்றாலும், தனிநபர் பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் சமூக வலைதளங்களைக் கையாள வேண்டும். பொள்ளாச்சி சம்பவம் போன்று சிலர், தவறான செயல்களுக்காகச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. அதேபோல் இந்தச் சம்பவத்தில் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களில் பெரும்பாலானவை செல்போன்கள் மூலமாகவே எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. செல்போன்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தாத நிலை உள்ளது.’’

``பதிவு செய்யப்பட்ட அனைத்து வீடியோக்களையும் முழுமையாக அழித்துவிட முடியுமா?’’

``வீடியோக்களை அழிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அதுபோன்ற வீடியோக்களை சம்பந்தப்பட்டவர்கள் எங்கு பதிவுசெய்து வைத்துள்ளனர் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயல். அதேபோல், இந்தச் சம்பவம் பல ஆண்டுகளாக நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது, அப்படியானால் குற்றவாளிகள் தங்களின் செல்போன்களை பலமுறை மாற்றியிருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்திய செல்போன்களில் இருந்த பதிவுகளையும் முழுமையாக அழிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக வேண்டுமானால் முழுமையாக அழித்துவிட முடியும். ஆனால், இணையதளங்களில் பரவத் தொடங்கி விட்டால், அவற்றை அழிப்பது என்பது மிகவும் கடினமான செயலாகிவிடும்.’’

``தற்போது இதுதொடர்பான வீடியோக்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இவற்றைத் தடுக்க வாய்ப்புகள் இருக்கிறதா?’’

``பாதிக்கப்பட்டவர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுதை நிச்சயமாகத் தடுக்க முடியும். சமூக வலைதள நிறுவனங்களை மத்திய அரசு அழைத்துப்பேசி, இத்தகைய வீடியோக்கள் பரவுவதைத் தடுத்து நிறுத்துமாறு உத்தரவிடலாம். சமீபத்தில் பொதுத்தேர்வு ஒன்றின் வினாத்தாள் முறைகேடாக வெளியானதைக் கண்டுபிடித்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அதேபோல் இந்த விஷயத்திலும் உடனடியாக அரசு தலையிட்டால் வீடியோக்கள்  பரவுவதைத் தடுக்க முடியும்.’’ 

``வீடியோ பதிவு செய்யப்பட்டது தெரியவந்தால் பெண்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன?’’

``நிறைய பேர் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை மட்டும் டெலிட் செய்துவிட்டால் போதும் என நினைக்கிறார்கள். ஆனால், இப்போது உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, டெலிட் செய்யப்பட்ட  வீடியோக்களை மீண்டும் எடுக்க முடியும். எனவே, கேமரா, செல்போன் என எந்தக் கருவியின் மூலமாக அவை பதிவு செய்யப்பட்டதோ, அந்தக் கருவியை முற்றிலுமாக அழிக்க முயல வேண்டும். தவிர, பெண்கள் உடனடியாகத் தைரியமாக முன்வந்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் வழக்கு பதிவு செய்வது அவசியம்.’’ 

முதலில் இணையத்தில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டால், அதை அழிக்க முடியாது. வெவ்வேறு தளங்கள் மூலமாக, ஆஃப்லைனிலும், ஆன்லைனிலும் அவை பகிரப்பட்டுக்கொண்டெ இருக்கும்,. அந்த வீடியோக்களை ஷேர் செய்பவர்களுக்கு இதை பகிரக்கூடாது என்கிற தார்மீக அறமும், புரிதலும் இருக்க வேண்டும். அதே போல், வீடியோவில் இருப்பவர்கள் இதைப் புறந்தள்ள முயற்சி செய்ய வேண்டும்.