Published:Updated:

இந்தியாவின் மகள்களுக்கு ஓர் அப்பாவின் கடிதம்! #PollachiSexualAbuse

நேர்ந்துவிட்டது என்பதற்காக நிஜங்களைத் தொலைத்துவிடாதே. உலகம் முழுக்க உயிர்கள் நிரம்பியிருப்பதும், உயிர்கள் முழுக்க அன்பு நிறைந்திருப்பதும் நிஜம். அந்த யதார்த்தத்தைக் கொல்லுகின்ற மிருகங்களைக் கண்டு உன் எண்ணத் தெளிவை உடைத்துவிடாதே. இன்னும் தெளிவாக வேண்டிய தருணமிது.

இந்தியாவின் மகள்களுக்கு ஓர் அப்பாவின் கடிதம்! #PollachiSexualAbuse
இந்தியாவின் மகள்களுக்கு ஓர் அப்பாவின் கடிதம்! #PollachiSexualAbuse

ன்பு பழகு,

என் செல்லமே! யாரையும் தவிர்க்காதே, எதற்கும் தயங்காதே. எல்லோரும் இங்கு நல்லவர்களே. வாழ்வியல் சூழலும் வசதியான சூழலும்தான் ஒருவனின் - ஒருத்தியின் தன்னிலையை மாற்றுகிறது. இங்கு கைரேகைகளைப் போலவே எந்த ஒருவருக்கும் தனித்த உளவியல் உண்டு. அனைத்தையும் தேடத் தேவையில்லை நீ. உன் வாழ்வுக்கென்று உனக்கொரு வட்டத்தை உருவாக்கிக் கொள். உன் நாள்களுக்குத் துணையிருந்து கைகொடுப்பவர் மட்டுமே உனக்கானவர்கள் என்பதை உணர்.

ஒருவரின் ஞாபகம் ஒருநாள் முழுவதும் உறுத்துகிறதா? `அது ஈர்ப்பா, காதலா, இச்சையா அல்லது என்னவாய் இருக்கும்?' என்பன போன்ற வினாக்கள் குவிகின்றதா, அவற்றுக்கு விடைதேட உடன் வருகிறேன். நீதானேயம்மா என் உயிர் பிரிந்து வந்தவள். கட்டியணைத்தலிலும், தொட்டு முத்தமிடுதலிலும் துளியும் சராசரி ஆண்களைக் கண்டுவிட முடியாது உன்னால். நான் உன் தகப்பன். உன்னோடு சக தோழனாய் உன் ரகசியங்களுக்கு உண்மையானவனாய் இருப்பேன், உறுதியாய். சிறுபிள்ளையிலிருந்தே நாம் இப்படித்தான். 

நீ வயது வந்த காலத்தில் உன்னைவிட்டு இனி ஒதுங்கியிருக்கச் சொன்னார்கள். அன்றோடு அவர்களைக் காணவில்லை. நமக்குள் சண்டை என ஒரு பொய்யைப் பரப்பிப் பார், வம்பாய் வந்து நியாயம் பேசிச் செல்வார்கள். அவர்கள் அவ்வளவுதான். பண்பாட்டுப் பொக்கிஷமும் ஆணாதிக்கச் சமூகமும் கூட்டாகச் சேர்ந்து அழுத்தும்தான். அவற்றையெல்லாம் நாம் கைகோத்து உந்தித் தள்ளி எழலாம். வா, என்னோடு பேசு. உன் மாதவிடாய் காலச் சிக்கலைச் சொல். உன் மாதப் போக்கின் உதிரம் ஒன்றும் புனிதமில்லையம்மா. சுகாதாரம்தான் புனிதமெனக் கருத்துத் திருத்தம் பெற்றுவிட்டது. அடிபட்டு ரத்தம் வந்தால் அதன் விவரம் சொல்லமாட்டாயா, அது போன்றதுதான் இதுவும். 

நிறைய பயணம் செய். குளிரென்றால் உடல்மூடும் இறுக்கமான ஆடையும், வெப்பம் எனில் தளர்வான பருத்தியாடையும்தான் வசதியெனச் சிறுபிள்ளையாக இருந்த போது உனக்குச் சொல்லித் தந்தேன். இன்னும் அதைப் பின்பற்றுகிறாய். மகிழ்ச்சி. கலாசாரக் காவலர்களைக் கவனம்கொள்ளாதே. உடை விருப்பம், உன் விருப்பம். மூன்றுவயதுக் குழந்தையைப் பிடித்து, புணர்ந்து கொல்லும் தேசம் இது. அதற்காக, உன் ஆடைச் சுதந்திரத்தை அவிழ்த்துவிடாதே; வசதியாய் வலம் வா! 

மன வலிமைக்குப் புத்தகங்கள் வாசி, அம்மா. அவைதாம் எனக்கு அடுத்து உன்னை மார்போடு பிணைத்துப் பேசப் போகிறவை. உடல் வலிமைக்கு தற்காப்புக் கலைகள். அதில் கைதேர்ந்தவள் நீ. வீரம், உன்னிடத்தில் உள்ள அன்பை  சமயத்தில் அசைத்துப்பார்க்கும், கவனம். உயிர்க் காப்புக்கு வீரமும், பிற உயிர்களிடத்தில் அன்புமே நல்லதொரு வாழ்வுமுறை. என்ன, இத்தனையும் மீறி நாலைந்து நாய்கள் வெறி தீர்த்துக் கொண்டனவா, ஐயோ மகளே! வா அப்பாவிடம்... மருத்துவமனை சென்று காயம் ஆற்றிக் கொண்டாய்தானே. வருந்தாதே. மார்பில் சாய்ந்து நிம்மதியாய் மூச்சுவாங்கு. வழக்குப் பதிந்து தண்டிக்கலாம் அவர்களை. 

நேர்ந்துவிட்டது என்பதற்காக நிஜங்களைத் தொலைத்து விடாதே. உலகம் முழுக்க உயிர்கள் நிரம்பியிருப்பதும், உயிர்கள் முழுக்க அன்பு நிறைந்திருப்பதும் நிஜம். அந்த யதார்த்தத்தைக் கொல்லும் மிருகங்களைக் கண்டு, உன் எண்ணத் தெளிவை உடைத்துவிடாதே. இன்னும் தெளிவாகவேண்டிய தருணமிது. உன் நம்பிக்கையும் அன்பும் ஓரிடத்தில் தோற்றுவிட்டிருக்கிறது என்பதே இங்கு செய்தி. வெற்றிகள் தொடரட்டும். புதிய பயணத்தை நோக்கிப் புறப்படு. இதே தோல்வியை இன்னொருவர் அடைந்துவிடாதபடி ஆவணப்படுத்து. அடுத்த முத்தத்தைப் பெறுவதற்கும், தருவதற்கும் ஆவலாய் உன் அப்பா காத்திருக்கிறேன், வா மகளே!