Published:Updated:

``பாதிக்கப்பட்ட பெண்கள் பெயரை வெளியிட்ட இந்த அரசு மேல நம்பிக்கையில்லை'' - துப்பாக்கிக் கேட்டு விண்ணப்பித்த மாணவிகள்! # PollachiIssue

குருபிரசாத்

பாதிக்கப்பட்ட பெண்ணாக அடிபட்டு, மேலும் சில பெண்கள் பாதிக்கவும் காரணமாக இருப்பதை விட, சிறை செல்வதே மேல். இதில், உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

``பாதிக்கப்பட்ட பெண்கள் பெயரை வெளியிட்ட இந்த அரசு மேல நம்பிக்கையில்லை'' - துப்பாக்கிக் கேட்டு விண்ணப்பித்த மாணவிகள்! # PollachiIssue
``பாதிக்கப்பட்ட பெண்கள் பெயரை வெளியிட்ட இந்த அரசு மேல நம்பிக்கையில்லை'' - துப்பாக்கிக் கேட்டு விண்ணப்பித்த மாணவிகள்! # PollachiIssue

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என்று வழக்கை அவசர அவசரமாக மாற்றினாலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் தற்போது வரை கைது செய்யப்படாமல் இருக்கின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி தமிழ் ஈழம் தன் சகோதரி ஓவியாவுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அதிகாரிகளிடம், தனக்கும் தன் தங்கைக்கும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை மனுவை அவர்களிடம் வழங்கினார்.

தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் தமிழ் ஈழம் நம்மிடம் பேசுகையில், “பொள்ளாச்சி சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கோபப்பட்டோ, பரிதாபப்பட்டோ இந்த விஷயத்தைக் கடந்துவிடுகிறோம். ஆனால், எங்களுக்கு இந்தச் சம்பவம் பயமாக இருக்கிறது. நண்பர்கள் என்று நினைத்தவன், நம்மை எப்படிப் பார்ப்பார்கள்? அண்ணா என்று அழைத்தால் திருநாவுக்கரசின் ஞாபகம் வருகிறது. நண்பனாக வந்து பேசினால், சபரிராஜன் நினைப்பு வருகிறது. சாதாரணமாக வெளியில் செல்வதற்கே பயமாக இருக்கிறது. நாம் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாது. என் தோழிகளிடம் கேட்டதற்கு, `நம்ம என்ன செய்ய முடியும்?’ என்று கேட்கின்றனர். குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கக்கூடிய இடத்தில் இப்போது நாம் இல்லை.

அந்த மாதிரி சூழ்நிலையில், என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்கக் கூடாது என்ற மனப்பான்மை அனைவருக்கும் வர வேண்டும்.  பாதிக்கப்பட்ட பெண்ணை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும்? எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அந்தப் பெண்ணை சராசரியாக ஏற்றுக் கொள்பவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட அரசாங்கம் மேல் எங்களுக்கு நம்பிக்கையில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில், உரிய நீதி கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. எனவே, எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. அதற்காகத்தான் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்திருக்கிறோம். அதுதான் எங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றார் உறுதியாக.

இந்த இரண்டு மாணவிகளின் தந்தை சாந்தகுமார் பேசும்போது, “பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும், பாலியல் வணிகமும் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 200 பெண்கள் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு சம்பவம் நடந்து 15 நாள்களாகியும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொது வெளியில் விட்டுள்ளனர். இதன் மூலம், பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிப்பதற்கான சூழ்நிலையைத் தமிழக அரசு உருவாக்கவில்லை.

இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்று எஸ்.பி பாண்டியராஜன் பேட்டியளிக்கிறார். ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜனை அ.தி.மு.க-வில் இருந்து, முதல்வரும் துணை முதல்வரும் நீக்குகின்றனர். இந்த வழக்கில் பார் நாகராஜனுக்கு சம்பந்தம் இல்லை என்றால், எதற்காக அவரை அ.தி.மு.க-வில் இருந்து நீக்க வேண்டும். சில நாள்களிலேயே அவரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும் வைத்தனர். இது ஒட்டுமொத்த தமிழகத்தின் அதிர்ச்சி. இந்த வழக்குக்குப் பிறகு, பெண்களுக்கு நம்பிக்கையளிக்கும் எந்தச் செயலிலும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இனியும் இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை. இதுபோன்ற குற்றவாளிகளிடமிருந்து பெண்களே அவர்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்” என்று முடித்தார்.