Published:Updated:

தீயணைப்பு வீரரின் கண்ணியமிக்கச் செயல்... இதுவும் பொள்ளாச்சியில் நடந்ததுதான்!

தீயணைப்பு வீரரின் கண்ணியமிக்கச் செயல்... இதுவும் பொள்ளாச்சியில் நடந்ததுதான்!
தீயணைப்பு வீரரின் கண்ணியமிக்கச் செயல்... இதுவும் பொள்ளாச்சியில் நடந்ததுதான்!

``கோவையில் பணிபுரிந்தபோது, பொள்ளாச்சியில் அசைன்மென்ட் என்றால் மனம் குதுகலிக்கும். திருப்பூர் செல்ல வேண்டுமென்றால் தலை தொங்கிப் போய் விடும். பொள்ளாச்சி என்றால் எதையாவது சாக்கு வைத்துக்கொண்டு 3, 4 நாள்கள் அங்கேயே டேரா போட்டு விடுவேன். திருப்பூர் என்றால் அசைன்மென்ட் முடிந்த அடுத்த நிமிடம் கிளம்பிவிடுவேன். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பொள்ளாச்சி அத்தகைய இனிய நினைவுகளையே கொடுத்திருக்கும் என்றே நினைக்கிறேன். வேதாத்திரி மனவளக்கலை மையம், ஆனைமலை, வால்பாறை, சின்னாறு, மறையூர், டாப்ஸ்லிப், குரங்கு அருவி, பரம்பிக்குளம் சரணாலயம் எனப் பல சுற்றுலாத் தலங்களுக்கு பொள்ளாச்சிதான் கேட்வே. சுற்றிலும் அழகிய கிராமங்கள், அணைகள், மலைகள், தென்னைகள்,  பசுமை நிறைந்த வயல்வெளிகள், கிணறுகளில் ததும்பி நிற்கும் தண்ணீர், தொடர்ச்சியான சினிமா படப்பிடிப்புகள்தான் பொள்ளாச்சியின் அடையாளங்கள். 

பொதுவாக, ஏப்ரல், மே மாதங்களில் அம்மன் கோயில்களில் கொடை விழாக்கள் நடைபெறும். இதை நோம்பி என்பார்கள் கோவைவாசிகள். கோயில் கொடை முடிந்ததும், கிடா வெட்டு இருக்கும். பெரும்பாலும் பொள்ளாச்சியை ஒட்டியுள்ள தென்னை மரங்கள் நிறைந்த பண்ணை வீடுகளில்தான் கிடா வெட்டு நடைபெறும். பல நாள்களாக நோம்பி இருந்தவர்கள் கிடா வெட்டு தினத்தில் சாப்பாட்டு ராமர்களாக மாறிவிடுவார்கள். ரத்தப் பொரியல், குடல் கறி, தலைக்கறி தனித்தனியாக தயார் ஆகிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் பிரியாணி, மறுபக்கம் வெள்ளை சாதம், ஆட்டுக் கறி தயாராகும். தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளியல் விதவிதமான சாப்பாடு எனப்  பொள்ளாச்சி பண்ணை வீடுகளில் தடபுடல் விருந்து களைகட்டும். இந்த கிடா வெட்டில் பெண்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். நண்பர்கள் என்னையும் அழைப்பது உண்டு. நானும் இத்தகைய கிடா வெட்டுகளில் பங்கேற்பேன். உண்டு கழித்தால் இரு நாள்களுக்குச் சாப்பாட்டு பக்கம் போகவே மனம் வராது. இப்படித்தான் பொள்ளாச்சி பண்ணை வீடுகள் எனக்கு அறிமுகமாகியிருக்கின்றன.

எனக்குத் தெரிந்து பொள்ளாச்சியில் இதுவரை பெரிய அளவில் கொடூரமான சம்பவங்கள் நடந்தது இல்லை. வெள்ளந்தியான, அன்பான மனிதர்களை மட்டுமே சந்தித்திருக்கிறேன். கோவையில்கூட எனக்குத் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க மனம் வராது. ஆனால், பொள்ளாச்சி சென்றால் நைட் ஷோ  கண்டிப்பாகப் பார்ப்பேன். அழகான இனிமையான ஊர் அது. நடுநிசியில் பெண்கள் நடந்து சென்றால் கூடக் கண்டுகொள்ளாத நகரமாகவே தெரிந்தது. இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவம்தான் முதன்முறையாக அழகான பொள்ளாச்சி நகரத்தைக் கோரமாக காட்டியுள்ளது. சமீபத்திய பாலியல் சம்பவம் தொடர்பான செய்திகளுக்கு மத்தியில் இதே பொள்ளாச்சியில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் செய்த கண்ணியமிக்க ஒரு செயல் வெளியே தெரியாமல் போய்விட்டது'' என்கிறார் பத்திரிகையாளர் ஒருவர். 

அண்மையில் பொள்ளாச்சி கெடிமேடு பி.ஏ.பி வாய்க்காலில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள். தண்ணீர் மிக வேகமாகச் செல்லும் வாய்க்கால் இது. தீயணைப்பு வீரர் ஒருவர் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சற்று கவனம் பிசகினாலும் அவரே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும் அபாயமான நீரோட்டம் மிகுந்த பகுதி. இது. காருக்குள் சடலங்கள் இருந்தன. காரை கயிற்றில் இணைத்துக் கட்டும்போது காருக்குள் இருந்த பெண் சடலம் ஒன்று வெளியே வந்துள்ளது. இதைக் கவனித்துவிட்ட அந்த தீயணைப்பு வீரர் பெண்ணின் சடலத்தையும் இன்னொரு கையால் பிடித்துக்கொண்டார். 

அதே வேளையில் அந்தப்  பெண்ணின் மேலாடை தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதைக் கவனித்துவிட்ட அந்த தீயணைப்பு வீரர், மேலே நின்றவர்களிடத்தில் பெரிய துணி ஒன்றைத் தருமாறு கேட்டார். பின்னர், அந்தத் துணியைக் கொண்டு, அந்தப் பெண்ணின் உடலைச் சுற்றிய பிறகே தண்ணீருக்கு மேலே எடுத்து வந்தார். இறந்து சடலம்தானே என்று கருதாமல் பெண்ணின் மானம் முக்கியம் என்று கருதிய அந்த தீயணைப்பு வீரரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு