Published:Updated:

`அஜினோமோட்டோவா... அப்டினா?’ - ஜாம்பஜார் `அன்னமிட்ட கை’ ஞானம்மாள் பாட்டி

`அஜினோமோட்டோவா... அப்டினா?’ - ஜாம்பஜார் `அன்னமிட்ட கை’ ஞானம்மாள் பாட்டி
`அஜினோமோட்டோவா... அப்டினா?’ - ஜாம்பஜார் `அன்னமிட்ட கை’ ஞானம்மாள் பாட்டி

முகப்பில் ஞானம்மாளின் மறைவுகுறித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ``ஐயோ... என்னாச்சு ஞானம்மாளுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டேன். கடை முன் குழுமி இருந்த பெண்கள், ``மகராசி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டா. இப்படி, சட்டுனு போயிட்டாளே'' என்று கண்கலங்கியவாறு சொன்னார்கள்.

சென்னையில் பங்களாக்கள் நிறைந்த பகுதியில் வசித்துவிட்டு, ஜாகையை ஜாம்பஜார் பக்கம் மாற்றினேன். நெருக்கடியான சந்துபொந்துகள் நிறைந்த பகுதி. அதற்கு முன்னதாக `ஜாம்பஜார்' என்ற பெயரைக்கூடக் கேட்டதில்லை. நடிகை மனோரமா இறந்தபோதுதான் `நான் ஜாம்பஜார் ஜக்கு’ என்ற பாடலைக்கூடக் கேட்டிருக்கிறேன். சந்துபொந்துகள் நிறைந்து காணப்பட்டது. நெருக்கடியான வீடுகள், கடைகள். ரோட்டில் எதிரெதிரில் இரு பஸ்கள் வந்தால்கூட டிராஃபிக் ஏற்பட்டுவிடும். அப்படியொரு குறுகலான ரோடு.

தொடக்கத்தில், `என்னடா இந்த மாதிரி இடத்துக்கு வந்துட்டோமே!’னு வருத்தமாக இருந்தது. நாளடைவில் ஜாம்பஜாரின் மகிமை தெரிய ஆரம்பித்தது. மெரினா பீச், சேப்பாக்கம் ஸ்டேடியம், தலைமைச் செயலகம், ஜெயலலிதா குறிப்பிட்ட கறுப்பு பூதக் கட்டடம், எக்மோர், சென்ட்ரல், சத்யம் காம்ப்ளெக்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, அரசு மருத்துவமனைகள் என அத்தனை முக்கிய இடங்களுக்கும் ஜாம்பஜாரிலிருந்து 10 நிமிட நேரத்தில் சென்றுவிடலாம். இதையெல்லாம் தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்ட சமயத்தில், சென்னை நகரமே வெள்ளக்காடாகிக் கிடந்தது. ஆனால், ஜாம்பஜார் பகுதியில் மட்டும் வெள்ளம் சூழவில்லை. மின்சாரமும் தங்கு தடையின்றி கிடைத்துக்கொண்டிருந்தது. `ஆஹா... எவ்வளவு அருமையான இடத்தில் வசித்துக்கொண்டிருக்கிறோம்’ என்று மனம் அப்போதுதான் யோசிக்கத் தொடங்கியது. 

ஜாம்பஜார் மார்க்கெட் ரொம்பவே பாப்புலர். என்ன வேண்டுமென்றாலும் கிடைக்கும். பறப்பதிலிருந்து ஊர்வன வரை அத்தனையும் இங்கே கிடைக்கும். ஜாம்பஜார்போலவே ஞானம்மாளின் சாப்பாட்டுக் கடையும் வெகுபிரபலம். பிரபல கடைகளில்கூடக் கிடைக்காத ருசி ஞானம்மாள் கைப்பக்குவத்தில் இருக்கும். ஜாம்பஜாரில் சாம்பாருக்கு `ரத்னா கபே’ என்றால் நான்வெஜ் ரகங்களுக்கு ஞானம்மாள் கடையை அடித்துக்கொள்ள முடியாது. மதிய உணவு மட்டும்தான் ஞானம்மாள் கொடுப்பார். மட்டன் குழம்பு, கோழிக்கறி, இறால் தொக்கு, தலைக்கறி, குடல்கறி நான்வெஜ் ரகங்களில் ருசி அட்டகாசமாக இருக்கும். ஞானம்மாள் வைக்கும் மீன்குழம்பைச் சாப்பிட்டால், சாயந்தரம் வரை கை மணத்துக்கொண்டே இருக்கும்.

சாப்பாடு விலை எவ்வளவு தெரியுமா. வெறும் 30 ரூபாய்தான். இறால் தொக்கும் 30 ரூபாய்தான். இப்படி மலிவு விலையில்தான் ஞானாம்மாள் மார்க்கெட்டில் சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார். விடுமுறை தினம் என்றால் நானும் நண்பர்களுடன் அங்கே ஆஜராகிவிடுவேன். மார்க்கெட்டில் உள்ள அத்தனை பேருக்கும் ஞானம்மாள்தான் அன்னமிட்ட கை. மதியம் உணவு மட்டும்தான் விற்றாலும் இதற்காக ஞானம்மாள் காலை 7 மணிக்கே வேலை பார்க்கத் தொடங்கிவிடுவார். அத்தனை நான்வெஜ் ரகங்களையும் தனி ஓர் ஆளாகத்தான் செய்வார். உதவிக்கு அவரின் மருமகள் இருப்பார். மாலை 5 மணிக்கு, கடை முடிந்துவிடும். இதற்குப் பிறகு, பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு வீடு போய்ச் சேருகையில், இரவு 9 மணி ஆகிவிடும். 

நன்றாகச் சாப்பிடுபவர்களைக் கண்டால் ஞானம்மாள் உற்சாகமாகிவிடுவார். நாங்கள் நான்வெஜ் வாங்கினாலும் ஞானம்மாள், காய்கறி பொரியல்களை சும்மா அள்ளிவைப்பார். `பாட்டி... போதும்’ என்று சொன்னாலும் கேட்கமாட்டார். `எய்யா... சோத்தைக் குறைச்சலா சாப்பிடணும். கூட்டு, பொரியல்னு நிறைய எடுத்துக்கணும்’ என்று பாசம் காட்டுவார்.

கடந்த சனிக்கிழமை மதியம் ஞானம்மாள் கடைக்குப் போவோம் என்று நண்பருடன் சென்றேன். கடை, அடைத்துக் கிடந்தது. முகப்பில் ஞானம்மாளின் மறைவுகுறித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ``ஐயோ... என்னாச்சு ஞானம்மாளுக்கு என்ன நேர்ந்தது?’’ என்று கேட்டேன். கடை முன் குழுமியிருந்த பெண்கள், ``மகராசி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டா. இப்படி, சட்டுனு போயிட்டாளே’’ என்று கண்கலங்கியவாறு சொன்னார்கள்.

அதிர்ச்சியடைந்த நான் அவர் வீட்டில் இருக்கும் யாருடைய போன் நம்பரையாவது கொடுங்கள் என்று கேட்டு வாங்கினேன். ஞானம்மாளின் பேரன் வினோத் நம்பர் கிடைத்தது. 

அவரிடத்தில் ஞானம்மாள் குறித்துப் பேசினேன். ``அண்ணா... பாட்டி இறந்ததுலயிருந்து நிறைய பேர் எனக்குப் போன் பண்றாங்க. எங்க பாட்டி சம்பாதிச்சது இந்த மாதிரி மனிதர்களைத்தான். `நான் கடை போடலைன்னா அங்க உள்ளவங்க எங்க போயி சாப்பிடுவாங்க?’னு ஒரு நாள்கூட கடையை அடைக்காது. `கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க பாட்டி’னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

எங்க பாட்டியோட அம்மா ஜாம்பஜார் மார்க்கெட்ல கூடை சாப்பாடு விப்பாங்க. அவங்க இறந்ததும் எங்க பாட்டி அங்கே கடை போட்டாங்க. எங்க பாட்டிகிட்ட சாப்பாடு வாங்க, பார்சல் வாங்கனு கார்லகூட வர்ற கஸ்டமர் இருக்காங்க. சின்ன கடைதான். மட்டன், மீன், கோழிக்கறி, இறால் எல்லாமே ஃபிரெஷ்ஷாவே வாங்குவாங்க ஃப்ரிட்ஜ்லயும் வைக்க மாட்டாங்க. அதே மாதிரி ருசிக்காக அஜினோமோட்டோ, வினிகர்லாம் பயன்படுத்த மாட்டாங்க. அதைப்பத்தியெல்லாம் அவங்களுக்குத் தெரியவும் தெரியாது. மசாலாகூட அவங்களே தயாரிச்சுக்குவாங்க. ஒருநாள்கூட எங்க கடையில எதுவும் மீந்ததில்லை. எங்க பாட்டியோட கைப்பக்கும் அப்படி!’’ எனச் சிலாகித்தார். 

``எப்படி திடீர்னு இறந்தாங்க... என்னாச்சு?’’ என்று கேட்டேன்.

``பாட்டி மத்தவங்க நல்லாருக்கணும்னுதான், உடலுக்கு பிரச்னை உருவாக்கிற எந்தப் பொருளையும் சாப்பாட்டுல கலக்க மாட்டாங்க. ஆனா, தன்னோட உடலைப் பத்தி யோசிச்சே பார்க்கல. பிரஷர் இருந்துச்சு. அதுக்கு மாத்திரைகூட எடுத்துக்கல. குளிக்கப் போனவங்க சடலமாயிட்டாங்க’’ என்றார் வேதனையுடன். 

ஞானம்மாள் போன்ற அன்னமிடும் கைகள்தான், சென்னையில் இளைஞர்களின் வயிற்றை நிரப்பும் அன்புக்கரங்கள்!

பின் செல்ல