Published:Updated:

ஐசியூவில் இருந்த அப்பா - ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் 10வது இடம் பிடித்த தர்மலாஸ்ரீ!!!

ஐசியூவில் இருந்த அப்பா  -  ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் 10வது இடம் பிடித்த தர்மலாஸ்ரீ!!!
ஐசியூவில் இருந்த அப்பா - ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் 10வது இடம் பிடித்த தர்மலாஸ்ரீ!!!

த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி நடத்தும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பாஸ் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு பட்டதாரியின் கனவு. ஆனால் சிலர் வெறும் கனவாக மட்டுமே இதை    எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், சிலரோ தீராத தாகத்தோடு படித்து இந்தத் தேர்வில் வெற்றிவாகை சூடுகின்றனர். அந்த வகையில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வில், சேலம் மாவட்டம் பேளூர் கரடிப்பட்டியைச் சேர்ந்த தர்மலாஸ்ரீ, அகில இந்திய அளவில் 409 -வது இடத்தையும், மாநில அளவில் (தமிழகத்தில்) 10-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தத் தேர்வை எப்படி எதிர்கொண்டார், அவரின் சூழல் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

``உங்களைப் பற்றிய அறிமுகம்?"  

``அப்பா தெய்வசிகாமணி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்; அம்மா வசந்தி, என் தங்கை ஹோமியோபதி முடிச்சிட்டு, இப்போது தனியார் மருத்துவமனையில் பணியில் உள்ளார். நான் ஆத்தூரில் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பின்னர் சோனா கல்லூரியில் பி.டெக். ஃபேஷன் டெக்னாலஜி முடித்தேன். எங்க கிராமத்தில் ஒரு சமயம் மிகப்பெரிய அளவில் தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது. விவசாயத்துக்குப் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வேலைதேடி வெளியூர்களுக்குப் போக ஆரம்பிச்சாங்க. என் அப்பா ஊராட்சி மன்றத் தலைவர், விவசாயிகளுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து ஆடு, மாடு வாங்கி பிழைப்பு நடத்த வைக்கலாம்னு வங்கி அதிகாரிகளிடம் பேசி கடன் வாங்கிக் கொடுத்தார். இவருடைய மனுவை ஏற்று, அப்போ இருந்த அதிகாரி போட்ட ஒரு கையொப்பம்தான் எங்க கிராமத்தின் தலையெழுத்தையே மாற்றியது. என் அப்பா அதை சொல்லக் கேட்டதிலிருந்து, இன்னும் எத்தனையோ கிராமங்களை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் விதைத்தது. அதற்காகவே பயிற்சி எடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினேன். வரலாற்றை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன், நான்கு முறை தோல்வியடைந்து, இப்போது வெற்றி அடைஞ்சிருக்கேன்". 

``வரலாறு பாடம் கஷ்டமாக இல்லையா?" 

``ஈஸின்னு நினைச்சா ஈசி, கஷ்டமென்று நினைச்சா கஷ்டம். தமிழ் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்தால் கொஞ்சநேரம் செலவழிப்போம். அதைவிடக் கூடுதலா சிறிது நேரம் செலவழிச்சா போதும் வரலாறும் ஈஸிதான். நிறைய படிக்கவேண்டும் என்றெல்லாம் கிடையாது. NCERT புத்தகத்தைப் படித்தாலே போதுமானது".

``இந்தத் தேர்வில் வெற்றிபெற தினமும் எவ்வளவு நேரம் செலவிட்டீர்கள்?"

``வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போதே ஐ.ஏ.எஸ். படிக்க ஆரம்பித்து விட்டேன். அப்பவே ஒரு நாளைக்குக் காலையில் இரண்டு மணி நேரமும், இரவு மூன்று மணி நேரமும் படித்தேன். பின்னர் பயிற்சி மையத்தில் சேர்ந்த பிறகு தினமும் 12 மணி நேரம் படித்தேன்".

ஐசியூவில் இருந்த அப்பா  -  ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் 10வது இடம் பிடித்த தர்மலாஸ்ரீ!!!

``உங்கள் பணியில் எதற்கு முதலிடம் தருவீர்கள்?"

``ஒரு  கிராமத்துப் பெண்ணான என்னை, ஒரு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெரும் அளவிற்கு உயர்த்தியது கல்வியாக இருந்தாலும், என்னுடைய முதல் நோக்கம் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதுதான். மேலும் ஒவ்வொருவரின் தனித்திறமை, கனவு போன்றவற்றைத் தவிர்த்து அவை இரண்டையும் தொடர்புப்படுத்தக்கூடிய வகையிலான கல்விமுறையைக் கொண்டுவர முயற்சி செய்வேன்".

``இந்தத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு எப்படியும் ஒருவர் ரோல் மாடலாக இருப்பார். உங்களுக்கு அதுபோன்றவர் யார்?"

``எனக்கு ரோல் மாடல், எங்க அப்பாதான். எந்த ஒரு விசயத்தையும் துணிந்து செய்வார். முடியாது என்ற வார்த்தைக்கே இடம்கொடுக்க மாட்டார். அவரைப்போலத்தான் நானும் இருக்க விரும்புகிறேன்".

``ஐ.ஏ.எஸ் ஆகவேண்டுமென்று நினைக்கிறவர்களுக்கு குறிப்பா கிராமப்புற மாணவ, மாணவியருக்கு நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீர்கள்?"

``பொதுவாகத் தேர்வுக்குத் தயாராவோர் எந்தச் சந்தேகம், தேவை என்றாலும் வெற்றி பெற்றவர்களைத்தான் அணுகுவார்கள். அவர்களை அணுகுவதில் தவறில்லை. ஆனால், தேர்வில் தோல்வி அடைந்தவர்களைத்தான் வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்கிற தெளிவு அவர்களிடம்தான் இருக்கும். ஒரு சிலர் பணம் இருந்தால்தான் படிக்க முடியும் என நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. நாட்டில் எத்தனையோ இலவச பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் பயன்படுத்தி சரியான பயிற்சியும், தொடர்ச்சியான முயற்சியும் இருந்தால் என்னைப் போன்ற எளிய மாணவர்களும் சாதனை படைக்கலாம்". 

``நீங்கள் யாருக்காவது நன்றி சொல்ல நினைக்கறீங்களா?"

``எல்லாருடைய வெற்றிக்கும் பின்னால் கண்டிப்பா யாரோ ஒருத்தர் இருப்பாங்க. ஆனால் என்னோட வெற்றிக்குப் பின்னாடி ஒருத்தர் இல்ல, பல பேர் இருக்கிறார்கள். நான் மூன்றாவது முறையாக எக்ஸாம்ல பாஸ் பண்ணி இன்டர்வியூக்காக டெல்லி போகிற நேரத்தில், என் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாம ஐ.சி.யு-வில் இருந்தார். அப்போது என் அப்பா டாக்டர்கிட்ட, `என் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவ கஷ்டப்படுவா, அவ முயற்சி வீணாகப் போயிடும். என்னை ரெண்டு நாளைக்கு நார்மல் வார்டுல வைங்க. நேர்முகத்தேர்வு முடிஞ்சதும் ஐ.சி.யு.வில் சேர்த்திருங்க'ன்னு சொல்லியிருக்காரு. அதை இப்ப நினைத்தாலும் சங்கடமாக உள்ளது. குடும்பச் சூழலால் அப்பாவால் ஃபீஸ் கட்ட முடியவில்லை. சாதிக் சார் மற்றும் என் நண்பர்கள் உதவி செய்ததை என்னால், மறக்க முடியாது. நல்ல நண்பர்கள் கிடைத்தால் எதையும் சாதிக்க முடியும்".

Vikatan