Published:Updated:

அனிதா முதல் பாயல் வரை... சபிக்கப்படும் பெண் கல்வி!

அனிதா முதல் பாயல் வரை... சபிக்கப்படும் பெண் கல்வி!
அனிதா முதல் பாயல் வரை... சபிக்கப்படும் பெண் கல்வி!

“உங்கள் பிள்ளை ஐ.சி.யு-வில் இருக்கிறாள், அவளை வந்து பாருங்கள்”. உங்கள் வீட்டுக்கு இப்படி ஒரு தொலைபேசி வந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் தூக்கி வளர்த்த அதே பிள்ளைதான்; உங்கள் மடியில் தவழ்ந்து, மார்பில் தூங்கி, முதல்நாள் பள்ளியில் அழுது, குடும்பம் மொத்தத்துக்குமான கனவுகளை ஒரு தேவதைபோல சுமந்து திரிந்த அதே பிள்ளைதான். 'எதுவும் நடந்திருக்காது' என்று நீங்கள் ஆயிரம்முறை மந்திரம்போல சொல்லிக்கொண்டே அங்கு சென்றபோது, `உங்கள் பிள்ளை இறந்துவிட்டாள்’ என்ற இடிபோன்ற செய்தி மட்டுமே உங்களுக்காகக் காத்திருந்தால், மனநிலை எவ்வாறு இருக்கும்?

சிறுவயதில் மிதிவண்டியிலிருந்து தவறி விழுந்த காயத்தையே அவளால் தாங்கியிருக்க இயலாது; கனவுகள் நொறுங்கியதால் தூக்கில் தொங்கிடத் துணிந்தவள், மூச்சுக்குழல் இறுகும் வலியை எப்படித் தாங்கியிருப்பாள்? தங்கள் மனதுக்கு நெருக்கமான மருத்துவர் பாயலை மரணத்துக்குப் பறிகொடுத்துவிட்டிருக்கும் அவளின் பெற்றோர், சகோதரர் மற்றும் கணவரின் வலியை எந்தச் சொல்லால் உணர்த்திவிட முடியும்?

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாயல், அவர் சமூகத்தில் முதல்முறையாகப் பட்டமேற்படிப்பு படிக்கச் சென்றவர்; அவர் குடும்பத்தின் முதல் மருத்துவர். மாற்றுத்திறனாளியான தன்னுடைய சகோதரரைப் பார்த்து வளர்ந்ததால், மருத்துவம் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, மகப்பேறு மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு படிக்கச் சென்ற பாயலுக்கு, சாதியின் ஆதிக்கம் தன்னுடைய விஷக் கரங்களை விரித்து, மும்பை நாயர் மருத்துவமனையில் காத்திருந்தது. பணியில் தன்னைவிட மூத்தவர்களான ஹேமா அஹுஜா, பக்தி மெஹர், அங்கீதா கண்டேல்வால் ஆகியோர் ஒவ்வொரு முறையும் பாயலை அவருடைய சாதிசார்ந்த வசைச் சொற்களைக் கூறி கொடுமை செய்துள்ளனர்.

தொடக்கத்தில் தற்காலிகமாகப் பக்தி, ஹேமா ஆகியோருடன் விடுதி அறையைப் பகிர்ந்துகொண்ட பாயலுக்கு, இடைவிடாமல் இருவரும் மனரீதியான தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்துள்ளனர். புகாரை அதிகாரிகளிடம் எடுத்துச் சென்ற பாயலுக்குத் தற்காலிகமாக வேறு யூனிட்டில் பணிபுரிய மருத்துவமனை நிர்வாகம் இசைவளித்தது. ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் பிரச்னை தொடர்ந்தது. இதுகுறித்து தன்னுடைய கணவரிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கூறினார். அவருக்காக மீண்டும் அவருடைய பேராசிரியர்களிடம் புகார் அளித்தபோதுகூட, பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. விளைவு, மே 22-ம் தேதி, பாயல் தன்னுடைய அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அனிதா முதல் பாயல் வரை... சபிக்கப்படும் பெண் கல்வி!

'இல்லை, நாங்கள் தற்கொலைகளை நியாயப்படுத்தவில்லை', 'இது மேலும் ஒரு ராகிங் தற்கொலை' என்றும் கடந்துவிட முடியாது. எவ்வளவோ முயன்றும், ஒவ்வொருமுறை உறுதியாக எதிர்த்து நின்றும், தன் மீது வீசப்படும் சாதிய அமிலத்தைக் கடந்துசெல்ல முடியாத நிலையில், அவருடைய உடல்மீது இறுதியாக வன்முறையை அவரே செலுத்தியிருக்கிறார். தன் மீது செலுத்தப்படும் வன்முறையிலிருந்து மீள, அதைவிடக் கொடிய, வலிமிகுந்த ஒரு சுயவதையை ஒருவர் தேர்ந்தெடுக்கும்போது, அதன் ரணம் எந்த அளவுக்கு அவரைப் பாதித்திருக்கும் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. தற்கொலை செய்தவர் ஒரு பெண் மருத்துவர். தற்கொலைக்குக் காரணமாக இருந்த மூவரும் பெண் மருத்துவர்கள்தாம். சக உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையை உச்சபட்ச அறமாகக் கருதி செயல்பட வேண்டிய மூன்று மருத்துவர்கள், தங்களுடன் பணிபுரியும் சக மருத்துவரை சாதியின் பெயரால் புதைக்க அவர்களால் முடிகிறது என்றால், அவர்களிடம் நோய் நீங்கச் சரணடையும் உயிர்களை வெறும் பணம் கொழிக்கும் உடல்களாக மட்டுமே அவர்களால் பார்க்க முடியும் என்பதில் எவ்வித மறுப்பும் தயக்கமும் தோன்றுவதில்லை. சக மருத்துவரை சாதியின் பெயரால் ஒதுக்க, ஏளனம் செய்ய, இழிவுபடுத்த இவர்களால் முடியும் எனில், நாம் பேரச்சம் கொள்ள வேண்டியது இவர்களை அணுக இருக்கும் நோயாளிகளைத்தான் . தான் காக்கும் உயிரின் சாதியைப் பார்க்கும் ஒரு நபர் மனிதனே இல்லை என்னும் பொழுது, அவர்கள் எப்படி மருத்துவர்களாக இருக்க முடியும்?

'இந்த வசைச் சொற்களைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியவில்லை, மனவலிமையே இல்லாத இவரெல்லாம் மருத்துவராகி என்ன செய்யப்போகிறார்?' என்று கேட்பவர்களுக்கு என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது. உடன் பணிபுரிபவரையே இவர்களால் கண்ணியத்துடன் நடத்தமுடியவில்லை. இத்தகைய மருத்துவர்கள் எல்லாம் யாரைக் காப்பாற்றப்போகிறார்கள்? உங்களால் ஏன் அந்த மூன்று பெண்களை நோக்கிக் கேள்வி எழுப்ப முடியவில்லை?

வசைச்சொல் என்பதை வெறும் வசைச்சொல்லாக மட்டுமே கடந்துசெல்ல முடியாது. வன்முறை என்பதை மனரீதியாகக் கடத்தி, யார்மீது கூறப்படுகிறதோ, அவர்களை ஒடுக்கி, குறுக்கும் வலிமை வசைச்சொற்களுக்கு உண்டு. ஆராய்ச்சியாளரும் பெண்ணியவாதியுமான ஜூடித் பட்லர் (Judith Butler), தன்னுடைய excitable speech - a politics of the performative எனும் தொகுப்பில் இவ்வாறு கூறுகிறார்,

``One is not simply fixed by the name that one is called. In being called an injurious name, one is derogated and demeaned.”

அந்த மூன்று பெண்களும் மருத்துவர் பாயலுக்கு நிகழ்த்தியது இந்தக் கொடுமைதான். `பாயல்’ என்றால் கொலுசு என்று பொருள். அந்த இனிமையான  பெயருக்குத்தான் சாதிப்பட்டம் சூட்டியிருக்கிறார்கள் மருத்துவர்கள் மூவரும். சொற்களாலும் செய்கைகளாலும், `நீ என்னைவிட தாழ்ந்தவள்’ என்று உளவியல் ரீதியாகப் பாயலை ஒடுக்கியிருக்கிறார்கள். குடும்பத்தின் முதல் மருத்துவர், தான் சார்ந்த சமூகத்தில் முதன்முதலாகப் பட்டமேற்படிப்பு படிக்க வந்தவரின் கனவுகள்தான் பாயலுடையவை. கருக்கப்பட்டது அவருடைய கனவுகள் மட்டும் அல்ல; `பாயல் அக்கா மாதிரி நல்லா படிக்கணும்!’ என்று அச்சமூகத்தில் குட்டிக் குட்டித் தீப்பொறிகளோடு திரியும் அத்தனை பெண் பிள்ளைகளின் கல்விக் கனவுகளையும் இந்த நிறுவனமயமாக்கப்பட்ட கொலை அமிலம் ஊற்றிக் கருக்கியிருக்கிறது. 

ஒரு சமூகத்தின் முதல் பட்டதாரியை படிப்பின் நுகர்வை விட்டு ஒதுக்குவதென்பதைவிட ஆகப் பெருங்குற்றம் இந்த தேசத்தில் எதுவும் இல்லை. பல்லாண்டு காலமாய் கல்வி என்னும் சொல்லே கண்டிராதே ஒரு கூட்டத்தின் விடியலுக்கான சிறு நகர்வைக்கூட அச்சம்கொள்ள வைக்கிறது இங்கிருக்கும் சாதிய உயர்நிலை. நாம் படித்தால் மரணித்துவிடுவோம் என்பதைவிட மிகப்பெரும் பயம் எதுவாக இருக்கும்.

 பாயல் போன்றவர்கள், சாதி, பாலினம் என்ற காரணிகளால் இருமுறை ஒடுக்கப்படுதலுக்கு (oppressed twice) ஆளாகிறார்கள். ஆகப்பெரும் பின்னணியற்ற இடங்களிலிருந்து வரும் பெண் பிள்ளைகளின் கல்விக் கனவுகள், அவ்வளவு ஒடுக்கப்படுதலையும் மீறி, அவர்களுக்குத் திமிறியெழும் வலிமையையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் சேர்த்து உயிர்ப்புடன் மீட்டெடுக்கும் சக்தியையும் அளிக்கும் என்ற தவிப்புதான், பாயல் போன்ற மருத்துவர்களின் கருகிய கனவுகளைப் பதைபதைப்புடன் உற்றுநோக்கச் செய்கிறது.

இந்தியக் கல்விச் சமூகத்தில், meritocracy என்பது கடைசியாகத் தன்னுடைய கோரப்பற்களைக் காட்டும் இடம், மனித உடல். ஒவ்வொரு முறையும் சாதியின் பெயரால், சாதி சார்ந்த வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத நிலையில், முதல் தலைமுறையின் கனவுகளுக்கும் ஏக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்போதெல்லாம், லட்சியம் தவிர்த்து வேறொன்றும் அறியாத ஒரு மனித உடல், சுயவதையால் தன்னை மாய்த்துக்கொள்கிறது. ரோஹித் வெமூலா, அனிதா, பாயல் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அனிதா முதல் பாயல் வரை... சபிக்கப்படும் பெண் கல்வி!

இவர்கள் அனைவரையும் 'மனவலிமை அற்றவர்கள்' என்று பொதுச்சமூகம் முத்திரை குத்தும் முன், death of merit பல காலமாக நடந்தேறுகிறது. இடஒதுக்கீட்டால் பயன் அடைந்தவர்கள் இவர்கள், இவர்களின் தற்கொலைகளைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம் என்று வேறொரு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்ளும் பொதுச்சமூகத்துக்கு, சாதிய விஷத்தை மிகத் தந்திரமாக சமூக வலைதளப் பதிவுகளில் செலுத்தும் அறிவாளிகளுக்கு merit என்பதே எங்கிருந்து வந்தது என்று நன்றாகத் தெரியும். இந்தக் கல்விக் கட்டமைப்பு எந்தப் புள்ளியிலிருந்து அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது, எந்தெந்த இடத்தில் எளியவர்களின் வாய்ப்புகளை அறம் அற்று விழுங்கிக்கொள்கிறது என்பது புரிந்தால், இவர்கள் ஓர் உயிரிழப்பை இவ்வளவு மலினமாகப் பேச மாட்டார்கள்.

'ஒரு சமூகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை, அந்தச் சமூகத்தின் பெண்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம்' என்று கூறுவார் அண்ணல் அம்பேத்கர். அனிதாவும் பிரதீபாவும் மரணித்தபோது ஏற்பட்ட வடுக்களே இன்னும் ஆறாதபோது, இன்று பாயலையும் இழந்திருக்கிறோம். தன் உயரத்துக்கு இருக்கும் அப்பாவின் வெள்ளைச் சட்டையை அணிந்துகொண்டு பொம்மை ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு சிறுமி பாயல் டாக்டர்போல நடித்துக் காட்டியதை எல்லாம் அந்தக் குடும்பம் பூரித்துப் பார்த்திருக்கும். மருத்துவராக மாறியபோது கண்களில் நீர் நிறைய அவரை முத்தமிட்டிருக்கும். அந்தக் கனவுதான் தூக்கிட்டுக் கொண்டிருக்கிறது.

மருத்துவர் பாயலின் தற்கொலையை வெறும் ராகிங் என்று நிச்சயமாக சுருக்கிவிட முடியாது. வெறும் பொருளாதாரப் பின்புலத்தை மட்டுமே மூலதனமாகக் கருதாமல், அதோடு சமூக மற்றும் கலாசார மூலதனங்களும் இணைந்துதான் ஒருவரின் சமூக அங்கீகாரத்தைத் தீர்மானிக்கின்றன. சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து பயில வரும் மாணவர்களுக்கு, பொருளாதார மூலதனம் கிடைத்தாலும், சமூக, கலாசார மூலதனங்கள் அவ்வளவாகக் கிடைக்காததால், அவர்கள் அந்நியப்படுத்தப்படும் வாய்ப்பு அதிகமாகிறது. அதுவே உயர்கல்வி குறித்த மிரட்சியையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நேரங்களில், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஆதரவாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருக்க வேண்டிய கல்விச்சூழல், அவர்களை நசுக்குகிறது. இது ராகிங் மட்டுமே என்பதுடன் சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் பெருங்குற்றம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு