Published:Updated:

``எனக்கு பென்ஷன் பணம். நாய்களுக்குச் சாப்பாடு ...'' - தெருநாய்களுக்கு உணவளிக்கும் சரஸ்வதியம்மா!

``எனக்கு பென்ஷன் பணம். நாய்களுக்குச் சாப்பாடு ...'' - தெருநாய்களுக்கு உணவளிக்கும் சரஸ்வதியம்மா!
News
``எனக்கு பென்ஷன் பணம். நாய்களுக்குச் சாப்பாடு ...'' - தெருநாய்களுக்கு உணவளிக்கும் சரஸ்வதியம்மா!

தெருநாய்கள் பராமரிப்பு, அவற்றுக்கான உணவு, நோய்த்தொற்று தடுப்பூசிகள், கருத்தடை சிகிச்சைகள் என ஒவ்வொன்றையும் அக்கறை எடுத்துச் செய்யும் சரஸ்வதி அம்மா உயிரினங்கள் மீதான தன்னுடைய காதலைப் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.    

சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு பெண் தினமும் ஐம்பது தெருநாய்களுக்குச் சாப்பாடு தயார் செய்து வழங்குகிறார் என்ற தகவல் அறிந்து, அவர் வீட்டுக்குச் சென்றோம். வீட்டைச் சுற்றி நாய்கள் மற்றும் பூனைகளின் கூட்டம். ``இன்னைக்கு சாப்பாடு வைக்கக் கொஞ்சம் லேட்டாயிருச்சு. அம்மாவை மன்னிச்சுகோங்கப்பா'' எனத் தெருநாய்களின் அருகில் அமர்ந்து வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துக்கொண்டே மன்னிப்பு கேட்கிறார் சரஸ்வதி அம்மா. தெருநாய்கள் பராமரிப்பு, அவற்றுக்கான உணவு, நோய்த்தொற்று தடுப்பூசிகள், கருத்தடை சிகிச்சைகள் என ஒவ்வொன்றையும் அக்கறை எடுத்துச் செய்யும் சரஸ்வதி அம்மா உயிரினங்கள் மீதான தன்னுடைய காதலைப் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.    

``எனக்கு பென்ஷன் பணம். நாய்களுக்குச் சாப்பாடு ...'' - தெருநாய்களுக்கு உணவளிக்கும் சரஸ்வதியம்மா!

எனக்குச் சொந்த ஊரு கேரளா. கல்யாணம் முடிஞ்சு வூட்டுக்காரரோட சென்னைக்கு வந்துட்டேன். அவருக்கு ரயில்வேயில் வேலை. எனக்கு சின்ன வயசிலிருந்தே நாய்கள்னா கொள்ளைப் பிரியம். கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்டில் எப்போதும் பத்து பதினைஞ்சு நாய்கள் இருந்துட்டே இருக்கும். அதுங்களை சுத்தம் பண்றது, சாப்பாடு போடுறது என எல்லா வேலைகளையும் நான்தான் செய்வேன். எங்க வூட்டுக்காரருக்கு நாய்கள்னாலே அலர்ஜி. பக்கத்துலகூட சேர்த்துக்க மாட்டாரு. அதுனால கல்யாணத்துக்கு அப்புறம் நாய்கள் பக்கமே போகாம இருந்தேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. வீட்டுக்காரு செத்து பதினைஞ்சு வருஷம் ஆகிப்போச்சு. தனி ஆளா இருந்துதான் பொன்ணுங்களை வளர்த்தேன். புள்ளைங்க பெரிசானதுக்கப்புறம் நாய் பராமரிப்பு மேல ஆசை வந்துருச்சு. முதலில் வீட்டில் நாய் வளர்க்க ஆரம்பிச்சேன்" எனப் பேசிக்கொண்டே சுவரில் தொங்கும் பொமரேனியன் நாயின் புகைப்படத்தை அறிமுகம் செய்கிறார். ``இவதான்  என்னோட ஜூலி. என் பொண்ணு மாதிரி. திடீர்னு உடம்பு முடியாம போயி இறந்து போயிட்டா. அவ ஞாபகமா இருக்கட்டுமேன்னு இந்தப் படத்தை ஃப்ரேம் பண்ணி வெச்சுருக்கேன்" எனச் சொல்லும் போது சரஸ்வதி அம்மாவின் கண்கள் கலங்குகின்றன. அமைதியாகி...  தொடர்கிறார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ``என்னோட பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன். அவ ஊட்டியில் இருக்கா. சின்ன பொண்ணுக்கு அவங்க அப்பாவோட வேலை கிடைச்சுருச்சு அதைப் பார்த்துட்டு இருக்கா. எனக்குக் கிடைக்கும் பென்ஷன் தொகையில்தான் நாய்களை பார்த்துக்கிறேன். எங்க ஏரியாவில் இருக்கும் அம்புட்டு நாய்களையும் என்னோட குழந்தைகளாகத்தான் பார்க்கிறேன். நான் ஒரு நாள் ஊருக்குப் போயிட்டா என் புள்ளைங்க தவிச்சுப் போயிருவாங்க. அதுனாலயே ஒரு நாள் கூட இவங்கள விட்டுட்டு எங்கேயும் போறதில்ல. அப்படியே அவசியமா போணும்னா என்னோட ரெண்டாவது பொண்ணு லீவ் போட்டுட்டு நாய்களைப் பார்த்துப்பா'' என்றவரிடம் நாய்களுக்கு உணவு தயார் செய்வதைப் பற்றிக் கேட்டோம்

``என்னோட பென்ஷன் வந்ததும் மொத்தப் பணத்தையும் எடுத்துட்டு போயி கறிக்கடையிலும் அரிசிக் கடையிலும் அட்வான்ஸ் கொடுத்துருவேன். 90 கிலோ அரிசியை மொத்தமா மூட்டையா வந்து இறங்கிரும். கறி மட்டும் தினமும் போயி வாங்கிட்டு வருவேன். கோழிக்கால், எலும்பு, கல்லீரல்னு தனித்தனியா வாங்கி சுத்தம் செஞ்சு வேக வெச்சுருவேன். அதை சாதத்தோட சேர்ந்து பிசைஞ்சு தனித்தனி டப்பாவில் போட்டு ஒவ்வொரு தெருவுலையும் போயி வெச்சுட்டு வந்துருவேன். பசங்க சாப்பிட்டு முடிச்சதும் டப்பாவை எடுத்துட்டு வந்து சுத்தப்படுத்திருவேன். சில தெருவுல நாய்களைத் தொல்லையா நினைக்குறாங்கமா. அங்க போயி நான் சாப்பாடு வெச்சா என்னையும் நாயைத் துரத்துர மாதிரிதான் துரத்துவாங்க. அவங்களுக்கு பயந்துட்டு எல்லாரும் தூங்குண பின்னாடி நைட் பத்து மணிக்கு போயி சாப்பாடு வெச்சுட்டு வருவேன். எத்தன மணி ஆனாலும் நான் வருவேன்னு அந்த ஜீவன்கள் எனக்காகக் காத்துக்கிடக்கும். நான் சாப்பாடு வைக்கப் போனதும் என் பின்னாடியே சேலையைப் பிடிச்சுக்கிட்டு ஆசையா வருவாங்கமா.

மழை நேரத்துலதான் பாவம் நாயிங்க ஒதுங்க இடம் இல்லாமல் கஷ்டப்படுங்க. அதுனால எங்க வீட்டுலதான் எல்லாரையும் தூங்க வைப்பேன். இதுனாலயே எங்களை அடிக்கடி வீட்டை காலி பண்ணச் சொல்லிருவாங்க. அதுக்குலாம் பயந்து நான் என்னோட வேலையைக் கைவிட்டதில்ல. பத்து வருஷமா நாள் தவறாம சாப்பாடு வைச்சிட்டு இருக்கேன். சாப்பாடு போடுறது மட்டுமல்ல எதாவது ஒரு நாய் புதுசா தெருவுக்கு வந்துட்டா அவங்களை அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போயி தடுப்பூசி போடுறது, எதாவது ஒரு நாய்க்கு அடிபட்டுருச்சுனா கையில இருக்க காசை வெச்சு ஆட்டோவில் ஏத்தி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயி வைத்தியம் பார்க்கிறதுன்னு என்னால் முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நான் சாப்பாடு வைச்சுட்டு போறதுனால வீட்டு முன்னாடி தெரு நாய்கள் கூடுறதுனால தெருவுல உள்ளவங்க நிறைய பேர் என் கூட சண்டைக்கு வருவாங்க. ஆனா எனக்கு மனசு கேட்கல. யார் சொல்றதையும் மண்டையில் ஏத்திக்க மாட்டேன். இப்போதைக்கு என்னால் ஒரு நேரச் சாப்பாடுதான் போட முடியுது. யாராவது உதவி பண்ண சந்தோஷமா இருக்கும். நான் யார்கிட்டயும் காசுலாம் எதிர்பார்க்கல அந்த வாய் இல்லாத ஜீவன்களுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொடுத்தா கூட போதும்'' என்று சரஸ்வதி அம்மா சொல்ல, வால் ஆட்டி விடைகொடுக்கின்றன அத்தனை ஜீவன்களும்.