Published:Updated:

``படிச்சதையே திரும்பத் திரும்ப படிச்சா போதும்!'' - நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்ற தையல் தொழிலாளியின் மகள் ஜீவிதா

``படிச்சதையே திரும்பத் திரும்ப படிச்சா போதும்!'' - நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்ற தையல் தொழிலாளியின் மகள் ஜீவிதா
``படிச்சதையே திரும்பத் திரும்ப படிச்சா போதும்!'' - நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்ற தையல் தொழிலாளியின் மகள் ஜீவிதா

720 மதிப்பெண்ணுக்கு 605 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 6,678வது இடத்தைப் பிடித்துள்ளார்.

லட்சங்களைக் கொட்ட வேண்டாம் படித்ததையே திரும்பத் திரும்ப படித்தால் போதும்... எளிதாக நீட் தேர்வில் வென்றுவிடலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்.தையல் தொழிலாளியின் மகளான ஜீவிதா நடந்து முடிந்த நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 605 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 6,678வது இடத்தைப் பிடித்துள்ளார்.வறுமை நிறைந்த சூழலில் தன்னுடைய மருத்துவக் கனவை நனவாக்கியிருக்கிறார் இவர்.

"ஒன்றாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தேர்வு எழுதித்தான் அடுத்த வகுப்புக்குப் போயிருப்போம். அந்த தேர்வு மாதிரிதான் நீட்டும் நாம் கடக்க வேண்டிய ஒரு எல்லைனு நினைச்சு படிச்சா கண்டிப்பா சாதிக்க முடியும். ஒரு விஷயத்தில் நாம ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா பணம், சுத்தியிருக்கிறவங்களோட அங்கீகாரம், தகுதி எதுவுமே முக்கியம் இல்லை. நாம ஜெயிக்கிறதுக்கு நம்மளோட நூறு சதவீத உழைப்பு மட்டும் இருந்தால் போதும். கண்டிப்பா வெற்றி பெறலாம். உண்மையை சொல்லனும்னா என்னோட முயற்சி மட்டும்தான் இன்னைக்கு என்னோட அடையாளமாகவும் என் குடும்பத்தோட ஆதாரமாகவும் மாறியிருக்கு.  

``படிச்சதையே திரும்பத் திரும்ப படிச்சா போதும்!'' - நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்ற தையல் தொழிலாளியின் மகள் ஜீவிதா

எங்களோடது ரொம்ப சாதாரண குடும்பம். எங்க அப்பா தையல் வேலை பார்க்கிறாங்க. எனக்கு ஒரு அக்காவும்,ஒரு தங்கச்சியும் இருக்காங்க. மூணு பேரும் அரசாங்க பள்ளியில்தான் படிச்சோம். அப்பாவுக்கு தெனமும் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைச்சுதான் எங்க மூணு பேரையும் வளர்த்தாங்க. வீட்டில் எவ்வளவு வறுமை இருந்தாலும் படிப்பு சம்பந்தமா எந்தப் பொருள் கேட்டாலும், அடுத்த நாளே வாங்கிக்கொடுத்துருவாங்க. "நாங்கதான் படிக்கலை... நீங்களாவது நல்லா படிச்சு பெரிய ஆளா வாங்க"னு அப்பா எப்பவும் சொல்லிட்டே இருப்பாங்க. அதுக்கு ஏத்த மாதிரி, மதிப்பெண்தான் எப்போதும் எனக்கான அடையாளமாக இருந்திருக்கு. பத்தாம் வகுப்பில் 497 மார்க் எடுத்தேன். ப்ளஸ்டூவில் 1161 மார்க்" என்கிற ஜீவிதா நீட்டுக்குத் தயாரான விதம் பற்றி பேச ஆரம்பித்தார்.

``படிச்சதையே திரும்பத் திரும்ப படிச்சா போதும்!'' - நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்ற தையல் தொழிலாளியின் மகள் ஜீவிதா

''நீட் தேர்வில் இது என்னுடைய இரண்டாவது முயற்சி. 2017-2018ம் கல்வியாண்டில் ப்ளஸ்டூ முடிச்சேன். சின்ன வயசில் இருந்தே நான் டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன். நீட்னு ஒரு விஷயம் அறிமுகமானப்போ ரொம்ப மலைப்பா இருந்துச்சு. டாக்டர் கனவே கலைந்த மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்புறம் எனக்கு நானே நம்பிக்கை கொடுத்துட்டு படிக்க ஆரம்பிச்சேன். தமிழகத்தில் நீட் விலக்கு, மதிப்பெண் விலக்குனு தினமும் ஒரு செய்தி வரும். ஆனால் யார் சொல்றதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காம, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். கோச்சிங் கிளாஸ் போனா படிக்கிற வழி தெளிவா தெரியும்னு எங்க டீச்சர் சொன்னாங்க. ஆனா குடும்ப சூழ்நிலைக்கு படிக்கிறதே பெருசுங்கிறது என் மனசுக்கு பட்டுச்சு. தயக்கத்தோடதான் அப்பாகிட்ட கேட்டேன். 'கடனா வாங்கியாவது தர்றேன் டா, நீ படி'னு சொன்னாங்க. சில மாசம் கோச்சிங் க்ளாஸ் போனேன். மாச மாசம் அப்பா எனக்காகக் கடன் வாங்குறது கஷ்டமா இருந்துச்சு. அதுனால வீட்டில் இருந்தே படிக்க ஆரம்பிச்சேன். புத்தகங்கள் எல்லாம் நூலகத்தில் இருந்து எடுத்துட்டு வருவேன். ஃபிரெண்ட்ஸ்கிட்ட கடன் வாங்கியும் படிப்பேன்.  

முதல் முறை எழுதின நீட் தேர்வில் என்னால் தேர்ச்சி பெற முடியலை. ரொம்ப அழுதேன். "வேற படிப்பு படிச்சிக்கலாம் விடுமா"னு அப்பா சொன்னாங்க. ஆனால் நான் டாக்டருக்குதான் படிப்பேன். இன்னும் ஒரு வருஷம் நீட்டுக்கு படிக்கிறேன்னு சொன்னதும் வீட்ல சம்மதிச்சாங்க. உன் எதிர்காலத்தை வீண் அடிச்சிக்கிற... ஒண்ணும் இல்லாத குடும்பத்துக்கு டாக்டர் கனவான்னு நிறைய பேர் காயப்படுத்திருக்காங்க. சுத்தியிருக்கவங்க எல்லாரும் உன்னால முடியாதுன்னு சொன்னப்போகூட என்னை நான் நம்புனேன். இன்னும் சொல்லணும்னா மத்தவங்களோட ஏளனங்கள் என்னை இன்னும் உறுதியாக்குச்சு. டிவி, மொபைல் என எந்த பொழுதுபோக்கு சாதனங்களையும் கையில் எடுத்ததில்லை. தினமும் 10 மணிநேரம் படிப்பேன். அடிக்கடி சொல்லிப்பார்த்துட்டே இருப்பேன். நீட்டைப் பொறுத்த வரை படிக்கிறதை விட திரும்ப திரும்பப் படிக்கிறது, படித்ததை நினைவுபடுத்தி பார்க்கிறதுதான் ரொம்ப முக்கியம். இந்த வருஷம் தேர்வு எழுதிட்டு வந்ததும் பாஸ் பண்ணிறலாம்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. பெயில் ஆகியிருந்தாகூட இந்த வருஷம் மறுபடியும் படிச்சிருப்பேன்.

ரிசல்ட்டை பார்த்ததும் வெற்றி பூரிப்பில் திக்குமுக்காடிப்போயிட்டேன். ஆனாலும் கூட என்னோட குடும்பம் முழுமையா சந்தோஷமா இல்லை. அடுத்தபடியா என்ன பண்ண போறோம்னு வழிதெரியாம நிக்கிறாங்க. நிச்சயம் எதாவது வழி கிடைக்கும்னு நம்பறேன். உழைப்பு என்னிக்கும் வீண் போகாது. இல்லியா!'' என்றார் ஜீவிதா.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு