Published:Updated:

``சுதா போன்ற பிள்ளைகளுக்குக் கல்வி சாத்தியப்படுமா?” - பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி

``சுதா போன்ற பிள்ளைகளுக்குக் கல்வி சாத்தியப்படுமா?” - பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி
``சுதா போன்ற பிள்ளைகளுக்குக் கல்வி சாத்தியப்படுமா?” - பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி

மாற்றத்துக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதில், தைரியமாக முதல்படி எடுத்துவைத்திருக்கிறது அரசுப் பள்ளிக் கல்வித்துறை; கூடவே ஆசிரியர்களும். வாழ்த்துகள்!

'A kid like jake' என்றொரு அமெரிக்கத் திரைப்படம் 2018-ல் வெளியானது. பாலின அடையாளம் தெரியாத ஒரு குழந்தையின் பெற்றோர் வீட்டிலும் சமூகத்திலும் சந்திக்கும் சிக்கல், இதற்கிடையே ஜேக் என்கிற அந்தக் குழந்தை எப்படி வளர்கிறான்(ள்) என்பதுதான் கதை. ஜேக் தனக்குப் பிடித்த பிங்க் நிறச் சிண்ட்ரெல்லா உடையை அணிந்துகொண்டு தனது அம்மா அப்பாவின் கைப்பிடித்து நடந்துசெல்வதாக இறுதியில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். தனது பாலின அடையாளத்தையும்  தன்பாலின ஈர்ப்பை உள்ளடக்கிய பாலியல் நோக்குநிலையையும் (Gender Identity and sexual orientation) தானாகவே தேர்ந்தெடுக்கும் பிள்ளைகள் இப்படியாகத் தன் அம்மா அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு செல்வதெல்லாம் இன்னும் வல்லரசு நாடுகளில்கூடச் சாத்தியப்படவில்லை என்பதற்கு இந்தத் திரைப்படம் ஓர் உதாரணம்.  

``சுதா போன்ற பிள்ளைகளுக்குக் கல்வி சாத்தியப்படுமா?” - பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி

தமிழகச் சூழலுக்கு வருவோம். அண்மையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் பாலியல் அடையாளத்தையும் பாலியல் நோக்குநிலையையும் தேர்ந்தெடுக்கும் பிள்ளைகள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் (Bullying) குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. சகோதரன் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழிநடத்தி உருவான இந்த ஆய்வறிக்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட, யுனெஸ்கோவின் தென்கிழக்கு ஆசிய இயக்குநர் எரிக் ஃபால்ட் பெற்றுக்கொண்டார். ஆய்வுப் புத்தக வெளியீடு முடிந்ததும் 32 மாவட்டங்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களுடன் ஆய்வு மேற்கொண்டவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆய்வுப் புத்தகம் வெளியிட்டதைவிட இந்தக் கலந்துரையாடல் நிகழ்வுதான் முக்கியமானதாக இருந்தது.

கலந்துரையாடலில் தோழி அமைப்பைச் சேர்ந்த சுதா, தனம் உள்ளிட்ட திருநங்கைகள் மற்றும் சகோதரன் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை ஜெயா, அமைப்பின் இயக்குநர் சுனில், பாலினச் சிறுபான்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

``சுதா போன்ற பிள்ளைகளுக்குக் கல்வி சாத்தியப்படுமா?” - பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி

மாற்றுப்பாலினத்தவர்கள் தொடர்பான புரிதலை ஆசிரியர்களிடம் ஏற்படுத்துவதற்காகத் தனது கதையையே பகிர்ந்துகொண்டார் திருநங்கை சுதா. ஆந்திராவில் சுதாகராகப் பிறந்த சுதாவின் அண்ணன் ஒரு பத்திரிகையாளர்; அப்பா உடற்பயிற்சி வல்லுநர். சுதாகருக்குப் பெண் பிள்ளைகளோடு விளையாடுவதுதான் பிடிக்கும், நெயில் பாலிஷ் வைப்பது பிடிக்கும். ஆனால், அவரது ஆறாம் வகுப்புவரை குடும்பத்தினருக்கு இது பெரிய பிரச்னையாகவே தெரியவில்லை. தனக்குள் இருந்த பெண் தன்மையை அவர் உறுதியாக நம்பத் தொடங்கியதும் அதன் பிறகுதான். பன்னிரண்டாம் வகுப்புவரை எப்படியோ தன் தன்மையை மறைத்து முட்டிமோதிப் படித்தவருக்கு சென்னையில் கிடைத்த கல்லூரிச் சூழல் உகந்ததாக இல்லை. இத்தனைக்கும் சென்னையின் மிகப்பிரபலமான பல் மருத்துவக் கல்லூரி அது. அவரது செயல்பாடுகளையும் நடத்தையையும் ஆசிரியர்களும் சக மாணவர்களும் பரிகாசம் செய்தனர்.

அந்தச் சூழல் கொடுத்த அழுத்தம் கல்லூரிப் படிப்பை நிறுத்தினார். பன்னிரண்டாம் வகுப்புச் சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு சென்னை வீதிகளில் வேலைவாய்ப்பு தேடினார். கிடைக்கவில்லை. திருநங்கைச் சமூகம் அரவணைத்துக்கொண்டது. திருநங்கையாகத் தன்னை மாற்றிக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். குடும்பத்தால் கைவிடப்பட்டு சமூகத்தால் நிராகரிக்கப்படும் திருநங்கைகள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது இரண்டு வழிகளை. ஒன்று, கைதட்டிப் பணம் கேட்பது; மற்றொன்று, பாலியல் தொழில். இரண்டாவதுக்கு மனசாட்சி சம்மதிக்காததால் தனது வயிற்றுப்பிழைப்புக்காகக் கைதட்டிப் பணம் கேட்பதைத் தேர்ந்தெடுத்தார். வாழ்க்கை ஓட்டத்தில் தற்போது தோழி அமைப்பில் இருக்கிறார் சுதா. சுதாவைப் போன்ற பிள்ளைகளை ஒருவேளை வீடும் கல்லூரியும் நிராகரிக்காமல் இருந்திருந்தால்... சுதாவின் அப்பாவும் ஜேக்கின் அப்பா அம்மாபோல அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு நடந்திருந்தால்... சுதா பல் மருத்துவராகியிருப்பார்.  

``சுதா போன்ற பிள்ளைகளுக்குக் கல்வி சாத்தியப்படுமா?” - பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி

சுதாவைப் போன்று நிராகரிக்கப்பட்ட கதை கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுனில் மேனன், ஜெயா உட்பட எல்லோருக்குமே இருந்தது. பள்ளிக்கூடங்களில் இந்த நிராகரிப்புகளைத் தடுப்பதற்கும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கும்தான் யுனெஸ்கோவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு தற்போது செயல்பட இருக்கிறது அரசுப் பள்ளிக் கல்வித்துறை. அனைவரும் பேசியபின் நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சிலர், தங்களுடைய பார்வைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். கரூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தன் பள்ளியில் ஒரு மாணவனிடம் பெண்மையின் சாயல் தெரிந்ததையும், ‘நீ இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா முன்னேற முடியாது’ எனச் சொல்லி அந்த மாணவனைத் திருத்தியதையும்(!), தற்போது அந்த மாணவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் கதையையும் பகிர்ந்துகொண்டார். 

மற்றோர் ஆசிரியர், ``நீங்கள் ஏன் திருநங்கையாக மாறி வாழ்வாதாரம் இல்லாமல் திரிய வேண்டும்? சொத்துரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி குடும்பச் சொத்தில் பங்குகளைப் பெற்றுக்கொண்டு வாழலாமே. அந்தப் பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் பள்ளிக்கூடம் கட்டி உதவலாமே?” என்று கேள்வி எழுப்பினார்.  

அதற்குப் பதிலளித்த இன்னோர் ஆசிரியர், ”அரசும் செயற்பாட்டாளர்களும் இந்த நிகழ்வை நடத்துவதன் நோக்கமே பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலைச் சிக்கல் உள்ள மாணவர்களைத் துன்புறுத்தாமல் பரிகாசம் செய்யாமல் அவர்களாகவே ஏற்றுக்கொண்டு (Acceptance) அவர்களுக்கான கல்வியை வழங்குவதைப் பற்றித்தான். நான் ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியர். என்னுடைய 25 வருட ஆசிரியர் அனுபவத்தில் இதுபோன்ற பல மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். என்ன ஆனாலும், அவர்கள் கல்வியைக் கைவிட்டுவிடாதவாறு பார்த்துக்கொள்வேன். குறைந்தபட்சம் அவர்களிடம் பன்னிரண்டாம் வகுப்புச் சான்றிதழாவது இருக்க வேண்டும். நான் அவர்களை மாற்ற முயற்சி செய்தது இல்லை. அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு அவர்களது கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால்தான் இது சாத்தியப்பட்டது. சொத்துரிமை கிடைத்தாலும், கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு அவர்களால் வீடு வாடகைக்கு எடுத்து வாழ முடியாது. அவர்களை யாரும் அத்தனை எளிதில் ஏற்றுக்கொண்டு விடுவதில்லை. அரசு, கல்வியை இலவசமாகக் கொடுத்தாலும் அதைக் கற்பதற்கான சூழலை நாம் இதுபோன்ற மாற்றுப்பாலின மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம். அதற்கு நமது சிந்தனையில் மாற்றம் வேண்டும்” என்றார்.

திருவாரூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “எங்கள் பள்ளிக்கூடங்களில் அடிக்கடி ட்ரெயினிங் அனுப்புவார்கள். அதுபோல பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு ட்ரெயினிங் என்றுதான் வந்தேன். ஆனால் இந்தத் ட்ரெயினிங் எங்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்பது இப்போதுதான் புரிந்தது. சமூகத்துக்கு மக்களை உருவாக்கி அனுப்புபவர்கள் நாங்கள்தான். மாற்றத்தை நாங்கள்தான் விதைக்க முடியும். இனி பாலின அடையாளம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு உள்ள மாணவர்களை, பள்ளிகளும் சக மாணவர்களும் அணுகும் முறையில் நிச்சயம் மாற்றம் இருக்கும். இன்றைக்கு நிகழும் இந்தக் கலந்துரையாடலின் பலனை இன்னும் ஒரு வருடத்தில் நிச்சயம் நீங்கள் பள்ளிக்கூடங்களில் பார்க்கலாம்” என வாக்குறுதி கொடுத்தார்.

மாற்றத்துக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதில், தைரியமாக முதல்படி எடுத்துவைத்திருக்கிறது அரசுப் பள்ளிக் கல்வித்துறை; கூடவே ஆசிரியர்களும். வாழ்த்துகள்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு