

`` நான் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக 18 வருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கேன். பொதுவாக நம்முடைய குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அதிகமாகச் சிரமப்படுவார்கள் என்பதால், பாடங்களை மொழிபெயர்த்து கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். தினமும் 5 ஆங்கில வார்த்தை, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிகள் போன்றவற்றைச் சாத்தியப்படுத்தினேன். இதன் ஒரு முயற்சியாக மற்ற மொழியில் உள்ளவற்றைத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் நம் தேசிய கீதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் எனத் தோன்ற... ஒரு முயற்சி செய்து தேசிய கீதத்தை பாடலாகப் பாடி 52 நிமிட காணொலியாக வெளியிட்டோம்.
மக்களிடம் அந்தக் காணொலிக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. நிறைய பேர் சமூக வலைதளங்கள் மூலமாக பாராட்டுறாங்க. அதே சமயத்தில் நிறைய எதிர்ப்புகளும்கூட வந்துச்சு. தமிழை ரசிக்கும் மக்கள் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறாங்க" என்றவர் தமிழ் தேசியகீதத்தில் உள்ள வரிகளை பாடிக் காண்பிக்கிறார்.
``இனங்களும், மொழிகளும் ஆயிரம் இருந்தும்,
மனங்களில் பாரத தாயே, வடக்கே விரிந்த
தேசாபிமானம் தெற்கில் குமரியில் ஒலிக்கும்,
இனமத வேற்றுமை உடையில் இருந்தும்,
இதயத்தில் ஒற்றுமை தானே,
உலகினில் எத்திசை அலைந்தும்,
இறுதியில் இந்தியன் ஆவேன், உறுதியில்
மூவர்ணம் தானே, இனமோ மொழியோ ஏதுவாய்
இருந்தும் நிரந்தரம் பாரத தாயே,
வாழ்க, வாழ்க என்றென்றும் நீ வாழ்க"
இது அப்படியே நம் தேசிய கீதத்துக்குத் தமிழ் மாற்று எனச் சொல்லிவிட முடியாது. எனினும், அர்த்தங்களின் அடிப்படையில் மொழிபெயர்த்து இருக்கிறேன்'' என்று சொல்லும் இவான்ஜிலின், பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஆங்கிலப் புத்தகங்களில் உள்ள ரைம்ஸ்களைப் பாடி காணொலியாக உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.