Published:Updated:

சுழற்றிய கோயில் யானை, பறிபோன பேச்சு, தொண்டையில் டியூப்... பெண்ணின் 20 வருடப் போராட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெற்றோர் உடன் சிந்து
பெற்றோர் உடன் சிந்து ( ம.அரவிந்த் )

''என்ன நடக்குதுனு சுதாரிக்கிறதுக்குள்ள என் மனைவியையும் மகளையும் யானை தூக்கி வீசிடுச்சு. சிந்துவோட கழுத்துப் பகுதி கடுமையா சேதமடைஞ்சிடுச்சு. சொல்லப்போனா பாதி கழுத்துல சதையே இல்ல.''

பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. தனது மூன்று வயதில் கோயில் யானை தாக்கியதில் பாதிக்கப்பட்டு பேச்சை இழந்ததுடன், மூச்சுக்குழாயில் டியூப் பொறுத்தி மூச்சு விடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகத் திரவ உணவை மட்டுமே உண்ணும் நிலை. இத்தனை பிரச்னைகளுடன் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொண்டு, கல்லூரிப் படிப்பை முடுத்துள்ள சிந்துவுக்கு இப்போது வயது 24. நடந்த விபத்துக்காக இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சிந்துவுக்கு உடனடியாக அரசு வேலையும் ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

சிந்து
சிந்து

என்ன நடந்தது அன்று?

பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்தவர்வர்கள் ராஜேந்திரன் - கலைவாணி தம்பதி. ராஜேந்திரன் அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவர்களுக்கு ஒரே பிரசவத்தில் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன. ரெட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் குழந்தைகளுக்கு சிவா, சிந்து எனப் பெயரிட்டனர்.

இந்நிலையில் 1999-ம் ஆண்டு குழந்தைகள் நலமாகவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், குடும்பத்தோடு திருச்சி சமயபுரம் கோயிலுக்குச் சென்றனர்.

அப்போது பிள்ளைகள் இருவரும் மூன்று வயதை எட்டியிருந்தனர். மழலை மொழியில் இருவரும் பேச ஆரம்பித்திருந்த காலம்.

உற்சாகத்துடன் கோயிலுக்குச் சென்றவர்கள், அங்கே தன் மகள் உயிருக்கு ஆபத்து வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

'தாயே நீதாம்மா துணை' எனக் கோயிலுக்குள் நுழைகிறார்கள். அங்கே இரண்டு பிள்ளைகளுக்கும் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். ''மொட்டை எடுக்கும்போது என் ரெண்டு பிள்ளைகளும் அழுதப்போ, அதை பொறுக்க முடியாம நானும் அழுதேன்'' என்கிறார் கலைவாணி.

பின்னர் சாமி தரிசனம் முடித்த பிறகு, ஆளுக்கொரு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பிரகாரம் சுற்றி வருகிறார்கள். அப்போதுதான் யாருமே எதிர்பார்க்காத அந்த விபத்து நடக்கிறது. திடீரென கோயில் யானைக்கு மதம் பிடிக்க, பெரிய சத்தத்துடன் பிளிர்கிறது. யானை பாகன் முதற்கொண்டு அனைவரும் சிதறி ஓடுகின்றனர்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள், யானை தும்பிக்கையால் சுற்றி கலைவாணியைத் தூக்குகிறது. தும்பிக்கையின் நுனிப்பகுதி கலைவாணியின் கையிலிருந்த குழந்தை சிந்துவின் கழுத்தை இறுக்குகிறது. கலைவாணி, 'என்னைய என்ன வேணுமோ பண்ணிக்கம்மா, என் புள்ளைய விட்டுடு' என அழுகையுடன் அலறுகிறார்.

ராஜேந்திரன், 'என் பொண்டாட்டி, புள்ளைய காப்பாத்துங்க...' எனக் கதறுகிறார். அதற்குள் யானை இருவரையும் தூக்கி வீசியது. கையில் இருக்கும் தன் மகனைத் தூக்கிக்கொண்டு ராஜேந்திரன் ஓடிப்போய் முதலில் சிந்துவைத் தூக்க, கழுத்து தொங்கிய நிலையில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது குழந்தைக்கு. பெற்றவருக்கு எப்படி இருக்கும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் குழந்தை சிந்துவை அப்படியே வாரியணைத்து மார்பில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார் ராஜேந்திரன். சில நொடிகளில் நடந்து முடிந்த இந்தச் சம்பவம், சிந்துவை வாழ்நாள் முழுவதும் போராட வைத்துள்ளது. அந்தக் குடும்பத்தில் கவலை நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டது.

தற்போது சிந்துவுக்கு 24 வயதாகிறது. அந்த விபத்தில் அவருக்குப் பேச்சு நின்றுபோனது. டியூப் மூலமே மூச்சு விடுகிறார். எந்த உணவாக இருந்தாலும் கூழாக்கி திரவ உணவாக மட்டுமே சாப்பிட முடியும். இத்தனை உடல்நலப் பிரச்னைகளுடனும், வைராக்கியத்துடன் போராடி பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார்.

மகளுக்காக இழப்பீடு கேட்டு சிந்துவின் பெற்றோர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தினர். தற்போது ரூ.25 லட்சம் நஷ்ட ஈடும், உடனடியாக அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

யானை தாக்கி பாதிக்கப்பட்ட சிந்து
யானை தாக்கி பாதிக்கப்பட்ட சிந்து

ராஜேந்திரன், கலைவாணியிடம் இப்போது மெல்லியதாக ஒரு பெருமூச்சு. அவர்களைச் சந்திக்க ஒரு மதிய நேரத்தில் பட்டுக்கோட்டைக்குச் சென்றோம். கஞ்சி சாதத்தைத் தண்ணியாகக் கரைத்து, சிந்துவுக்கு வாயில் ஊற்றிக்கொண்டிருந்தார் கலைவாணி.

ராஜேந்திரனிடம் பேசினோம். ''ரெட்டை புள்ளைகப் பொறந்ததுல எங்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். புள்ளைக எந்தக் குறையும் இல்லாம இருக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டு சமயபுரம் கோயிலுக்குப் போனோம். தரிசனம் முடிச்சுட்டு பிரகாரம் சுற்றி வந்தப்போ, கோயில் யானைக்கு மதம் பிடிச்சிடுச்சு.

பக்தர்கள் எல்லாரும் சிதறி ஓடிக்கிட்டிருந்தாங்க. என்ன நடக்குதுனு சுதாரிக்கிறதுக்குள்ள என் மனைவியையும் மகளையும் யானைத் தூக்கி வீசிடுச்சு. சிந்துவோட கழுத்துப் பகுதி கடுமையாக சேதமடைஞ்சிடுச்சு. சொல்லப்போனா பாதி கழுத்துல சதையே இல்ல.

ரத்த வெள்ளத்துல புள்ள பேச்சு மூச்சு இல்லாமக் கிடந்துச்சு. அப்புடியே தூக்கிட்டு பக்கத்துல இருந்த ஆஸ்பிட்டலுக்கு ஓடினோம். என் மகளைப் பார்த்த டாக்டர்கள், இனி பொழைக்க வைக்குறது கஷ்டம்னு கைவிரிச்சாங்க. 'என்ன செலவானாலும் பரவாயில்ல, என் மகள உசுரோடு மீட்டுக் கொடுங்க'னு ரத்தம் படிஞ்சிருந்த என் கையால டாக்டரோட கையை பற்றிக்கிட்டு கதறினேன்.

முதலுதவி சிகிச்சை கொடுத்து, வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சாங்க. அங்கு சிந்துவை பரிசோதித்த டாக்டர்கள், 'மூச்சுக் குழாயும் உணவுக் குழாயும் கடுமையா சேதமடைஞ்சிருக்கு. இனி செலவு செய்றது வேஸ்ட்'னு நம்பிக்கை இழந்தபடி சொன்னாங்க. ஆனா, என் மனசுக்குள்ள என் புள்ளைக்கு ஒண்ணும் ஆகாதுதுன்னு தோணுச்சு. 'என்னவானாலும் பரவாயில்ல சார் சிசிச்சை கொடுங்க'னு கதறினேன். மூக்குத்தி உட்பட, என் மனைவி போட்டிருந்த எல்லா நகையையும் கழட்டி ஆஸ்பிட்டல்ல கொடுத்தோம்.

பெற்றோர் உடன் சிந்து
பெற்றோர் உடன் சிந்து

பிறகு, மூச்சுக் குழாய் மற்றும் உணவுக் குழாயில டியூப் பொருத்தினாங்க. எந்த உணவா இருந்தாலும் கூழாக்கி திரவமாதான் கொடுக்கணும். கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும், கொஞ்சம் பிசகினாலும் உயிருக்கே ஆபத்துனு டாக்டர் சொன்னாங்க.

அப்போதைய திருச்சி கலெக்டர் ஆஸ்பிட்டல்ல வந்து பார்த்தார். ஐ.சி.யூ கட்டணத்தைக் கொடுக்க வேண்டாம்னு மருத்துவமனை நிர்வாகத்துகிட்ட சொன்னார். அதுக்கு அப்புறம் அரசு சார்பா எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கல.

அடுத்ததா, வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிட்டுப் போய் 90 நாள் சிகிச்சை கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா என் புள்ளை தேறிச்சு. ஆனா, பேச்சு நின்னுபோச்சு. ஆனாலும் புள்ள திரும்பக் கிடைச்சதே போதும்னு, கண் அசைக்கும் நேரம்கூட தனியா விடாம சிந்துவை கவனிச்சுக்கிட்டோம்'' என்பவர், பின்னர் நாகை மாவட்டம் வாய்மேடு பகுதியில் குடும்பத்தோடு வசிக்க ஆரம்பித்திருக்கிறார். வீட்டுக்கு அருகே உள்ள பள்ளியில் சிந்துவை சேர்த்திருக்கிறார்கள்.

சிந்து
சிந்து

''சிந்துவோட அண்ணன் சிவாவும் கூட படிச்சதால பள்ளியில அவன் தங்கச்சியைக் கவனிச்சுக்கிட்டான். இதுக்கு இடையில, சிந்துவுக்கு உதவி கேட்டு அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் ஏகப்பட்ட மனுக்கள் அனுப்பினேன். ஆனா, கை வலி வந்ததுதான் மிச்சம், எந்த ஆறுதலான விஷயமும் நடக்கல. 20 வருஷம் கழிச்சு, அரசு வேலையும் இழப்பீடும் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில மனுத்தாக்கல் செஞ்சோம். இப்போ நீதிபதிகள் அதுக்கான உத்தரவை பிறப்பிச்சிருக்காங்க. இது எங்களுக்கு பெரிய ஆறுதல்'' என்றவர்,

''சிந்துவுக்கு சாப்பாடு கொடுக்கிறதுல கொஞ்சம் பிசகினாலும், ஆகாரம் கொஞ்சம் திடமா இருந்தாலும் உணவு குழாய் டியூப்ல சிக்கிக்கிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுடும்.

அந்த மாதிரி அஞ்சு முறை நடந்து, பெரிய சிக்கலுக்கு ஆளாகிடுச்சு புள்ள. ஒரு கட்டத்துல, உணவுக் குழாயில் பொருத்தப்பட்டிருந்த டியூபை எடுத்தாச்சு. கழுத்துப் பகுதி வழியாக மூச்சுவிடும் வகையில, மூச்சுக் குழாயில் மட்டும் டியூப் பொருத்தப்பட்டிருக்கு இப்போ.

அடிக்கடி சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருப்பதால நிறைய செலவாகும். எங்க சக்திக்கு மீறி எல்லாத்தையும் செஞ்சிட்டு வர்றோம். பள்ளிப் படிப்பு முடிஞ்சதும், திருச்சியில உள்ள கல்லூரி ஒன்றில் சிவா, சிந்து ரெண்டு பேரையும் சேர்த்துப் படிக்க வெச்சோம். சிந்து பேச முயற்சி செஞ்சா, கழுத்துல உள்ள சின்ன டியூப் வழியா காத்துதான் வரும். அடிக்கடி சளி பிடிக்கும். இத்தனை சிரமத்துக்கு மத்தியில சிந்து கல்லூரிப் படிப்பை முடிச்சதுக்கு புள்ளையோட வைராக்கியம்தான் காரணம்.

சிந்து
சிந்து

எங்க முகம் வாடிடக் கூடாதுனு எல்லா கஷ்டத்தையும் பொறுத்துக்கும். முகத்துல சிரிப்பை மட்டும்தான் காட்டும். அமைச்சர் ஓ.எஸ்.மணியன்கிட்ட உதவி கேட்டுப் போனோம். அவரும் அக்கறையுடன் அப்போலோ மருத்துவமனைக்கு அழைச்சிக்கிட்டு போய் டெஸ்ட் எடுக்க வெச்சார்.

எப்படியாவது சிந்துவை பேச வெச்சிடணும்னு நாங்களும் போகாத இடம் இல்ல. இப்ப, உணவுக் குழாய் சுருங்கிட்டு வர்றதா வேற மருத்துவர்கள் சொல்றாங்க. அமெரிக்காவுல இதுக்கு சிகிச்சையளிக்க முடியும்னு சில டாக்டர்கள் சொன்னாங்க. நாங்க அவ்வளவு பணத்துக்கு எங்க போவோம்? ஏதாச்சும் வழி கிடைக்காதானு ஏக்கத்தோடு காத்திருக்கோம்'' என்றார்.

கலைவாணியிடம் பேசினோம். ''அம்மான்னு அவ கூப்பிட மாட்டாளானுதான் இந்த உசுரு தவம் கெடக்கு. அது மட்டும் நடந்திட்டா போதும். எல்லா புள்ளைங்க போலவும் என் புள்ளையால இருக்க முடியலையேன்னு பல நாள் ராத்திரி அழுதுருக்கேன். ஆனா, எந்த கஷ்டத்தையும் எங்ககிட்ட கடத்தாம 20 வருஷமான தன்னம்பிக்கையோடு போராடி வருது எங்க புள்ள.

இழப்பீடு வழக்குல எங்களுக்கு வழக்கறிஞர் ராகுல் பெரும் உதவியாவும் ஆறுதலாவும் இருந்தார். என் மகளுக்கு நாலு வாரத்துல அரசு வேலையும், ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடும் கொடுக்கணும்னு நீதிமன்றம் இப்போ உத்தரவிட்டிருக்கிறது பெரும் நம்பிக்கையை தந்திருக்கு.

பெற்றோர் உடன் சிந்து
பெற்றோர் உடன் சிந்து

பெரிய மனசு பண்ணி அரசு தரப்பு இதுல மேல் முறையீடு எதுவும் செல்லக் கூடாதுனு கேட்டுக்கிறோம். எங்க மக நல்லா வாழணும். அதுக்கு இந்த வேலையும் பணமும் பெரும் உதவியா இருக்கும். 20 வருஷத்துக்கு மேல போராட்டத்துடன் வாழ்ற புள்ளைக்கு இது ஆறுதலா இருக்கும். ஆனாலும், சிந்து பேசினா மட்டும்தான் ஒரு தாயா என் தவிப்பு அடங்கும்'' என்றார்.

சிந்துவிடம் பேசினோம். அவருடைய சைகைகள் மற்றும் காற்று கலந்த வார்த்தைகளின் மொழிப்பெயர்ப்பு இங்கே...

''அப்பா, அம்மா, அண்ணன்தான் என் உலகம். எத்தனையோ சிரமத்துக்கு மத்தியில என்னை வளர்த்து ஆளாக்கியிருக்காங்க. அவங்களுக்கு எந்தக் கஷ்டமும் தராம, முடிஞ்சளவுக்கு மத்தவங்களுக்கு உதவியாவும் இருக்கணும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு