தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

2K kids: பெண்கள்... திருமணப் பொருளாகவே வளர்க்கப்படுகிறார்கள்!

திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமணம்

க.கண்மணி

‘ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் அடைந்த முன்னேற்றத்தின் அளவால் நான் அளவிடுகிறேன்’ என்றார் டாக்டர் அம்பேத்கர். பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவற்றில் ஒன்று, திருமணத்தை முன்வைத்துக் கொடுக்கப்படும் சமூக அழுத்தம்.

சிறு வயதில் இருந்தே பெண்கள் திருமணத்துக்கான மெட்டீரியலாக நினைத்தே வளர்க்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஆண்களின் சராசரி திருமண வயது 27.3. பெண்களின் சராசரி திருமண வயது 21.4. ஆண்களைப் பொறுத்தவரையில், தங்கள் திருமண வயதை முடிவெடுக்கும் சுதந்திரம் அவர்களிடம் இருக்கிறது. ஆனால், பெண்ணுக்கு அப்படி இல்லை. 25 வயதுக்கு மேல் ஒரு பெண் திருமண முடிவெடுக்காமல் இருந்தால், அந்தக் குடும்பம் அவளுக்குக் கொடுக்கும் அழுத்தமும், சமூகம் அந்தக் குடும்பத்துக்குக் கொடுக்கும் அழுத்தமும் நாம் அறிந்ததே.

‘`20 வயதுக்கு மேல் ஆனதும்தானா வருகிறது அந்த அழுத்தம்... பெண் குழந்தைகள் பிறந்த நொடியில் இருந்து திருமணம் முடியும்வரை, ‘திருமணத்துக்கான தகுதி’யை முன்னிறுத்தியேதான் இங்கு வளர்க்கப் படுகிறார்கள்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த ‘மனிதி’ பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசுமதி, அது பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

‘`ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனேயே, உறவில் உள்ள யாரேனும் ஓர் ஆண் குழந்தைக்கான துணையாக்கி அவளைப் பேசுவார்கள். தலை முதல் கால்வரை, திருமண அழுத்தத்தை சுமந்தபடியேதான் பெண் குழந்தைகள் இங்கு வளர்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில், பெண் களுக்குப் பிடித்தபடி உடுத்த, அலங்காரம் செய்துகொள்ள அனுமதிப்ப தில்லை. காரணம், திருமணச் சந்தையில் ‘சுதந்திரமான பெண்’ என்பதை விட, ‘குடும்பத்துக்கு அடக்கமான பெண்’ என்ற உறுதிமொழியே தேவைப் படுகிறது. ஓர் அம்மா, பதின்ம வயதில் நல்ல உயரத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த தன் மகளை வேதனையுடன் பார்த்தபடி சொன்னார், ‘ரொம்ப வளர்ந்தா அந்த உயரத்துக்கு ஏத்த மாப்பிள்ளை கிடைக்கணுமே?’ என்று.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓர் இளம்பெண், ‘நாங்கள் சைவக் குடும்பம். ஆனால், எங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அவ்வப்போது கடையில் வாங்கி அசைவம் சாப்பிடுவார்கள். நானும் ஆசைப் பட்டு கேட்டபோது அதை நிராகரித்தார்கள்’ என்றார். அதற்குப் பதில் அளித்த அவர் அப்பா, ‘இவள் அசைவம் சாப்பிட்டால் எங்கள் சமூகத்தில் இவளைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்’ என்றபோது, நான் திகைத்துப்போனேன்.

பெண்ணின் உணவுப் பழக்கங்களில்கூட, அவளுக்கு என்றோ நடக்கவிருக்கும் திருமணத்தின் தலையீடு இருக்கிறது என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? இது எவ்வளவு பெரிய உரிமை மீறல்? ‘சத்தமாகப் பேசாதே’, ‘காலை நீட்டி அமராதே’ என்பதிலிருந்து, ‘வெளியூர் வேலைக் கெல்லாம் போகாதே’ என்பதுவரை, ‘இவ்வாறு எல்லாம் இருந்தால் அது திருமணத்துக்குப் பாதகமாக முடியும், மாறாக இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும்’ என்கிற வரையறைக்குள்ளாகவே பெண் வளர்க்கப்படுகிறாள். பெற்றோரின் இந்த நிர்பந்தத்துக்கு, சமுதாயம் தரும் அழுத்தமே காரணமாகிறது.

2K kids: பெண்கள்... திருமணப் பொருளாகவே வளர்க்கப்படுகிறார்கள்!

இதற்குத் தீர்வு, பெண்களிடம்தான் இருக்கிறது. பெண்கள், தங்களை வலிமை யற்றவர்கள் என்று நினைப்பதை முதலில் விட்டொழிக்க வேண்டும். ஒருவருக்கு மனைவி ஆவதே இவ்வாழ்வின் முழுமை என்று சமூகம் அவளுக்குத் திணிக்கும் ஸ்டீரியோ டைப்களை புறம்தள்ள வேண்டும். படிப்பை முடித்தவுடன் திருமணம் என்ற நேர்கோட்டை உடைத்து, படிப்பு, வேலை, சுயசார்பு, திருமணம் என்று ஆக்கிக்கொள்ள வேண்டும். பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது, வேலைக்குச் செல்லும், தொழிலில் ஈடுபடும் பெண்களின் சதவிகிதத்தை அதிகப்படுத்துவது என்று அரசும் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்’’ என்றார் வசுமதி.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் அங்கவை இதுபற்றிக் கூறும்போது, ‘`திருமணம் குறித்த சமூக அழுத்தத்துக்குக் காரணம் பழைமையான சிந்தனைகள்தான். பெண்கள், என்ன கோர்ஸை தேர்ந்தெடுக் கலாம் என்பதுகூட திருமண வாழ்க்கையை யோசித்தே இங்க பெரும்பாலும் முடிவெடுக்கப்படுகிறது. ஒரு காலத்தில், டீச்சர் வேலை, பேங்க் வேலைதான் பெண்களுக்கு ஏற்றது என்றார்கள். இப்போதுவரைகூட, சட்டப்படிப்பைப் பெண்கள் தேர்ந்தெடுக்க விரும்பும்போது, அதை நிராகரிக்கும் பெற்றோர்கள் இங்கு உள்ளார்கள். ‘வக்கீலுக்குப் படிச்சா பொண்ணு பார்க்க வரும்போது யோசிப்பாங்க...’ என்கிறார்கள்.

2K kids: பெண்கள்... திருமணப் பொருளாகவே வளர்க்கப்படுகிறார்கள்!

இங்கு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திருமணமே வேண்டாம் என்பதல்ல பெண்நலச் செயற்பாட்டாளர்கள் சொல்ல வருவது. திருமண வாழ்க்கையில் ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும், கொடுமைப்படுத்தும், அவளை அவளாக இருக்கவிடாமல் சுயம் இழக்கச் செய்யும் வழக்கங்களையே ஒழிக்க நினைக்கிறோம். சம உரிமையுடன் வாழும் தம்பதிகள் இங்கு பலர் உள்ளனர். அதுபோன்ற திருமண பந்தங்கள் சாத்தியமாகும்போது, ‘பொண்ணுன்னா இப்படி இருக்கணும்’ என்ற கட்டுப்பாடுகளை உடைக்க அது சிறந்த வழிகளில் ஒன்றாக அமையும். அப்போதுதான் பெண்கள் திருமணச் சந்தைக்கான பொருளாக வளராமல், தங்களுக்கான தனித்துவத்துடன் வளர்வார்கள்’’ என்கிறார் அங்கவை.

நாம், நாமாக வளர்வோம் தோழிகளே!