`அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு' என்பது வீட்டுக்குள்ளான ஒடுக்குமுறை என்றால், படித்து வேலைக்குச் செல்லும்போது பெண்களுக்கான சரிபாதி முக்கியத்துவத்தை வழங்க மறுப்பதும், வழங்குவதற்கு காலம் தாழ்த்துவதும் பொதுவெளியில் நிகழ்கிற ஒடுக்குமுறைகள். இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்கள் அவ்வப்போது உரத்த சத்தத்துடன் எழும்புவது வழக்கம். இந்த முறை இந்தச் சத்தத்தை எழுப்பியிருப்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம் அமைப்பு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் 9 நீதிபதிகளும் ஒரே நேரத்தில் பதவியேற்றுக் கொண்டனர். புதிய நீதிபதிகளை வரவேற்கும் வகையிலும் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நோக்கிலும், உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் பாராட்டு விழா ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோதுதான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நீதித்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த தன்னுடைய கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
``நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தேவை. இது உங்கள் உரிமை. நாடு முழுவதுமுள்ள சட்டக் கல்லூரிகளிலும் சம அளவு இட ஒதுக்கீடு தேவை. நீதித்துறையின் கீழ் மட்டங்களில் 30 சதவிகிதத்திற்கும் குறைவான பெண் நீதிபதிகளே உள்ளனர். உயர் நீதிமன்றங்களில் 11.5 சதவிகிதம் மட்டுமே பெண் நீதிபதிகளாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்திலோ 11 முதல் 12 சதவிகிதம் மட்டுமே பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். நம் நாட்டில் உள்ள 17 லட்சம் வழக்கறிஞர்களில் 15 சதவிகிதம் மட்டுமே பெண்கள். மாநில பார் கவுன்சில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் பெண்களின் சதவிகிதம் 2 மட்டுமே. இந்திய தேசியக் குழுவின் பார் கவுன்சிலிலோ ஒரு பெண் பிரதிநிதி கூட இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த ஒடுக்குமுறையின் நீட்சி இது.

60,000 நீதிமன்றங்களுள் 22 சதவிகித நீதிமன்றங்களில் பெண்களுக்கான வசதிகளுடன் கட்டப்பட்ட கழிவறைகள் இல்லாதது, அவர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கும் காப்பகம் இல்லாதது எனப் பெண் வழக்கறிஞர்கள் வேலைபார்க்கும் இடங்களில் சந்திக்கின்ற சவால்கள் எண்ணிலடங்காதவை. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் உடனடியாக திருத்தம் தேவை. கார்ல் மார்க்ஸ் சொன்னதையே பெண்களுக்காக நான் மாற்றிச் சொல்கிறேன். `உலகப் பெண்கள் ஒன்று சேருங்கள். உங்கள் சங்கிலிகளைத் தவிர நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை' '' என்று பேசியிருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா.