Published:Updated:

`தள்ளாத வயதிலும் கொரோனா தடுப்பு நிதி!’ - அசரவைத்த 85 வயதுப் புதுச்சேரி மூதாட்டி

மூதாட்டி தையல் நாயகி
மூதாட்டி தையல் நாயகி

புதுச்சேரியில் 85 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பு நிதியாக தனது ஒரு மாத முதியோர் ஓய்வுத்தொகையை அளிக்க வந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவரும் நிலையில், தங்களால் இயன்ற பொருளுதவிகளைக் கொடுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையடுத்து தொழிலதிபர்கள், தனி நபர்கள், சினிமா பிரபலங்கள், அரசு ஊழியர்கள் தங்களால் இயன்ற தொகையைக் கொரோனா தடுப்பு நிதியாகக் கொடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் கொரோனா தடுப்பு நிவாரண நிதியைக் கொடுத்து வருகின்றனர்.

85 வயது மூதாட்டி தையல் நாயகி
85 வயது மூதாட்டி தையல் நாயகி

புதுச்சேரி கோவிந்தசாலைப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி தையல்நாயகிக்கு வயது 85. கணவர் உயிரிழந்த பிறகு புதுச்சேரியில் உள்ள தனது மகள் ஆரோக்கியமாதாவின் வீட்டில் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகிறார்.

கேட்கும் திறன் பாதிப்பு கொண்ட இவர், தொலைக்காட்சி செய்திகளில் வரும் கொரோனா தொடர்பான செய்திகள் குறித்து தனது மகள் ஆரோக்கியமாதாவிடம் கேட்டிருக்கிறார். அப்போது அனைவரும் கொரோனா தடுப்பு நிதியைக் கொடுத்து வருகிறார்கள் என்று தெரிந்ததும், தனது முதியோர் உதவித்தொகையை முதல்வர் நாராயணசாமியிடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அதையடுத்து தள்ளாத வயதிலும் ஒரு மாத முதியோர் உதவித் தொகை 3,000 ரூபாயை எடுத்துக்கொண்டு தனது பேரனுடன் இன்று ஆட்டோ மூலம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்தார்.

ஆனால், முதல்வர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நிதி காசோலையாக மட்டுமே பெறப்படும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே காசோலையாக மாற்றித் தருகிறேன் என்று தெரிவித்தார் அந்த 85 வயது மூதாட்டி.

கொரோனா நிதி கொடுக்க புதுச்சேரி சட்டப்பேரவை வந்த மூதாட்டி தையல்நாயகி
கொரோனா நிதி கொடுக்க புதுச்சேரி சட்டப்பேரவை வந்த மூதாட்டி தையல்நாயகி

ஆனால் இன்றிலிருந்து தொடர்ந்து 3 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் அவரால் காசோலையாக மாற்ற முடியாமல் போனது. அதனால் தான் கொண்டு வந்திருந்த 3,000 ரூபாயை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிய அவர், `திங்கள்கிழமை வந்து காசோலையாக மாற்றித் தருகிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார். தள்ளாத வயதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் குழந்தையைப் போல நடந்து வந்த அந்த மூதாட்டியின் செய்கை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அடுத்த கட்டுரைக்கு