Published:Updated:

``என் அப்பாவுக்கு நல்ல உணவு கொடுங்கள்!'' - போராடும் நவாஸ் ஷெரீஃப் மகள்

மர்யம் நவாஸ் ஷெரீஃப்
மர்யம் நவாஸ் ஷெரீஃப் ( gdb.voanews.com )

''மர்யம், அரசியலுக்கும் சிறைச்சாலைக்கும் ஒரு மெல்லிய கோடுதான் இடைவெளி என்று, தொடர்ந்து நிரூபித்துவருகிற பாகிஸ்தான் மண்ணில், வளர்ந்துவருகிற அரசியல்வாதி.''

'மிகச்சரியான அரசியல் செய்வதற்காக, பொருத்தமற்ற ஆடைகளால், நம் கோழைத்தனங்களை மறைத்துக்கொண்டிருக்கிறோம். கோழைகளுக்குத் தைரியம் என்பது முட்டாள்தனம்போலத்தான் தெரியும். ஆனால், அதிர்ஷ்டம்கூட தைரியமிக்கவர்களுக்குத்தான் சாதகமாக நிற்கும்' - மர்யத்தின் ட்விட்டர் முகப்பு இந்த அதிரடியான வாசகங்களுடன்தான் நம்மை வரவேற்கிறது.

ஒரு பேட்டியின்போது...
ஒரு பேட்டியின்போது...
pbs.twimg.com

யார் இந்த மர்யம்? அரசியலுக்கும் சிறைச்சாலைக்கும் ஒரு மெல்லிய கோடுதான் இடைவெளி என்று, தொடர்ந்து நிரூபித்துவருகிற பாகிஸ்தான் மண்ணில் வளர்ந்துவருகிற அரசியல்வாதி. மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்து, தற்போது பாகிஸ்தான் சிறையில் இருக்கிற நவாஸ் ஷெரீஃபின் மகள். தற்போது பாகிஸ்தான் அரசின் எதிர்க்கட்சியான (நவாஸ் ஷெரீஃபால் வழி நடத்தப்பட்ட கட்சி) பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸின் துணைத்தலைவர் மர்யம்தான்.

சில தினங்களுக்கு முன்னால் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், ''என் தந்தையை விடுதலை செய்யுங்கள் இம்ரான் கான். உங்கள் ராஜினாமாவைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்புங்கள். ஊழல் வழக்கிலிருந்து என் அப்பா விடுதலை ஆவார். மீண்டும் ஒருமுறை அவர் பிரதமர் ஆவார்'' என முழங்கியிருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தற்போது பயப்படுவது மர்யத்தைப் பார்த்துத்தான் என்கின்றன ஊடகங்கள். 

அப்பாவுக்காக ஒரு மகளின் ஓங்கிய குரல் பாகிஸ்தானின் வீதியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் மக்களும் ஊடகங்களும்.

அதற்கேற்றாற்போல, அப்பா நவாஸ் ஷெரீஃபின் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்குச் செல்லும்போது, அவருடைய முகம் அச்சிடப்பட்ட சுடிதார் டாப்பை அணிந்து செல்வது, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நவாஸ் ஷெரீஃபுக்கு சிறைத்தண்டனை அளித்த நீதிபதி 'தான் சிலருடைய வற்புறுத்தலின் பேரில்தான் நவாஸுக்கு சிறைத்தண்டனை அளித்தேன்' என்று சொல்கிற வீடியோ ஆதாரத்தை வெளியிடுவது என, இம்ரான் கானுக்கு தினம் தினம் கிலியை ஏற்படுத்தி வருகிறார் மர்யம். அரண்டுபோன இம்ரான் கான் அரசு, மர்யத்தின் வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அந்த 'பிரஸ் மீட்' ஒளிபரப்பைப் பாதியிலேயே நிறுத்த உத்தரவிட்டது. இந்தச் சம்பவமும் இம்ரான் கான் அரசினுடைய நீதித்துறையின் மேல் மிகப்பெரிய களங்கத்தை சுமத்தும்வண்ணம் அமைந்துவிட்டது என்கின்றன அந்நாட்டின் ஊடகங்கள்.

ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான், மர்யம் தன் அப்பாவுக்கு ஆதரவான போராட்டத்தை இன்னமும் தீவிரப்படுத்தியுள்ளார். அப்பாவுக்காக ஒரு மகளின் ஓங்கிய குரல் பாகிஸ்தானின் வீதியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் மக்களும் ஊடகங்களும். ''என் அப்பாவுக்கு நல்ல உணவு கொடுங்கள். அல்லது வீட்டு உணவைக் கொடுப்பதற்காவது அனுமதி கொடுங்கள். இதற்கும் இம்ரான் கான் அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால், அனுமதி கிடைக்கும் வரையில் நான் உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறுவழியில்லை.''

அப்பாவின் முகம் அச்சிடப்பட்ட உடையில்
அப்பாவின் முகம் அச்சிடப்பட்ட உடையில்
twitter.com

தன் அப்பாவுக்கான மர்யத்தின் இந்த வேண்டுகோள் பாகிஸ்தானின் மனித மனங்களையெல்லாம் அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு தகவலைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னால், ஒரு பிசினஸ்மேன். மிகப் பெரிய கோடீஸ்வரரும்கூட. அப்படிப்பட்ட தன் அப்பா சாப்பிட நல்ல உணவுக்காக மகள் போராடிக்கொண்டிருப்பது பாகிஸ்தான் அரசியலில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

நவாஸ் ஷெரீஃப் மீது மட்டுமல்ல, மர்யத்தின் மீதும் பாகிஸ்தான் அரசு எக்கச்சக்க ஊழல் வழக்குகளைப் போட்டுள்ளது. என்றாலும் கட்சி, அரசியல், அப்பாவின் விடுதலை என்று இயங்கிக்கொண்டே இருக்கும் மர்யத்துக்குத் தற்போது 45 வயதாகிறது. 'பார்ன் வித் கோல்டன் ஸ்பூன்' என்று வளர்ந்த மர்யத்தின் விலையுயர்ந்த செருப்புகள், ஆடைகள் பற்றியெல்லாம் அந்நாட்டுப் பத்திரிகைகள் விமர்சனம் செய்திருக்கின்றன.

மர்யம் நவாஸ் ஷெரீஃப்
மர்யம் நவாஸ் ஷெரீஃப்
gdb.voanews.com

ஆனால், மர்யம் விமர்சனங்களுக்குப் பயந்து தன் 'அவுட் லுக்' விஷயத்தில் எந்தவித காம்பரமைஸும் செய்துகொள்ளவில்லை. சமீபத்தில் வெளிவந்த அவருடைய வீடியோ இன்டர்வியூவே அதற்குச் சாட்சி. 'மிக வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் அப்படித்தான் இருக்க முடியும் என்று புரிந்துகொண்டவர்களுக்கு மர்யத்தின் ஆடை, ஆபரணங்கள் கண்களை உறுத்துவதில்லை' என்கிறார்கள் மர்யத்தின் நட்பு வட்டத்தினர்.

ஆரம்பத்தில் மனிதநேயச் செயற்பாட்டாளராகத்தான் இருந்திருக்கிறார் மர்யம். 2013-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், தன் தந்தைக்காக தேர்தல் பிரசாரம் செய்ய வந்ததுதான் அரசியலுக்கும் அவருக்குமான முதல் தொடர்பு. அதன்பிறகு இளைஞர்களுக்காக நவாஸ் ஷெரீஃபால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பின் தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். கல்வி நிறுவனங்களுக்குச் சென்று கல்வியின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்துவதும் பெண்ணுரிமை பற்றிப் பேசுவதும் மர்யத்தின் இன்னொரு முகம்.

டாடி'ஸ் கேர்ள்
டாடி'ஸ் கேர்ள்
twitter.com

அப்பாவுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மர்யத்தை ஒரு சாரார் 'தைரியசாலி' என்று கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், மற்றொரு சாரார் டிராமா ராணி, நானி 420, இன்னும் சொல்லத்தகாத வார்த்தைகளாலும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தும் வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் மர்யம் சொல்வது, ''நான் பலசாலியான பெண். எதற்கும் பயப்பட மாட்டேன். என்னை வீழ்த்த நினைப்பவர்களுக்கு நான் பதிலளிப்பதே இல்லை. நான் பாதிக்கப்பட்டவள் அல்ல; உயிர் பிழைத்தவள். அல்லா எனக்குப் போதுமானவராக இருக்கிறார்'' என்பதுதான்.

அடுத்த கட்டுரைக்கு