Published:Updated:

`நாங்கள் வாழ விரும்புகிறோம்!' - ரகசிய மருத்துவமனைகளால் குழந்தைகளைக் காப்பாற்றும் சிரிய மருத்துவர்

மருத்துவர் அமானி பல்லூர்
மருத்துவர் அமானி பல்லூர் ( NATIONAL GEOGRAPHIC )

``குழந்தைகளின் துன்பங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றி பேசுவதற்காகவும் ஒவ்வொரு நாளும் மக்கள் எவ்வாறு கொல்லப்படுகிறார்கள் என்பதை சொல்லவும்தான் நான் இங்கே இருக்கிறேன்”என்று கூறியுள்ளார்.

சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 2011-ம் ஆண்டு கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப்போரில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அமானி பல்லூர் என்ற பெண் மருத்துவர் கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பகுதியில் ரகசிய மருத்துவமனை ஒன்றை நடத்திவந்துள்ளார். அச்சூழலின் பல கொடூரமான கதைகளை அவரால் விவரிக்க முடியும். எனினும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கதைகளையே அதிகமாக நினைவில் வைத்திருக்கிறார்.

அமானி பல்லூர்
அமானி பல்லூர்
NATIONAL GEOGRAPHIC

அமானி பல்லூர், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ள நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது சகோதரர்களைப் போல இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்காததை எதிர்த்த அமானி, தனது மூத்த சகோதரியைப் போல 13 வயதில் திருமணம் செய்துகொள்வதையும் மறுத்துவிட்டார். பொறியியல் படிக்க வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருந்தது. அவரது பெற்றோர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஒரு பெண்ணுக்கு வேலை என்பது தேவையில்லை என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ஒருவழியாக சிரியாவிலுள்ள டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க அவருக்கு அனுமதி அளித்துள்ளனர்.

``நான் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவேன் என்று எதிர்பார்த்தார்கள்" என்று பேசத்தொடங்கிய அமானி, ``என் தந்தை என்னுடைய சகோதரிகளிடம் `சமையலறையில் பட்டம் பெறுவதே நல்லது' என்று கூறுவார். ஆனால், நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது வகுப்பில் முதலிடத்தில் இருந்தேன். நான் ஏதாவது செய்ய விரும்பினேன். பட்டம் பெற வேண்டும் என்று விரும்பினேன். பின்னர், ஒரு மருத்துவமனை தொடங்கி குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என நினைத்தேன்" என்று கடந்த காலங்களை நினைவுகூர்ந்தார்.

`இனி சாதாரண விஷயங்களைப் பார்த்தும் சிரிப்பாள்!' -சிரிய குழந்தையை மீட்ட துருக்கி அதிகாரிகள்

உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் ஒரு ஆண்டு கழித்து அமானி தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்தார். குழந்தை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். கிழக்கு கௌடா பகுதியிலுள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க படிப்பை தொடர்வதை கைவிட்டார். வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்து கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி அறைகளில் நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 6 ஆண்டுகளாக இப்படி ரகசியமாக மருத்துவமனைகளை நடத்தி குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

அமானி தற்போது துருக்கியில் வசித்து வருகிறார். உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சிரிய குடிமக்களில் இவரும் ஒருவர். ஆனால், இவரது பெற்றொர்கள் சிரியாவில்தான் வசித்து வருகிறார்கள். ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு விஷயங்களை அமானி செய்வதால் அவள் பழிவாங்கப்படுவாளொ என்ற பயத்தில் அவரது பெற்றோர்கள் உள்ளனர். ஆனால், மரபுகளை மீறுவதையும் சமூகத்திற்காக செயல்படுவதையும் வழக்கமாக கொண்டிருக்கும் அமானியின் செயல்களால் அவரது பெற்றோர்கள் பழகிவிட்டனர், என்கின்றனர்.

அமானி பல்லூர்
அமானி பல்லூர்

குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த கவலைக்குரிய அனுபவங்களைப் பற்றி அவர் பேசுகையில், ``பயங்கரமான காயங்களுடன் சுமார் 9 வயதுள்ள சிறுவனை அவனின் பெற்றோர்கள் எடுத்து வந்தனர். அவனது தலையின் பாதியை காணவில்லை. அவனது காதுகளில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. எங்களால் அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அவனது இதயம் துடித்துக்கொண்டிருந்தது. சில மணி நேரங்கள் அவன் சுவாசித்துக்கொண்டிருந்தான். சிறுவனை பிழைக்க வைக்க முடியாது என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அவனுடைய பெற்றோர்களுக்கு இது மிகப்பெரிய சித்ரவதை. இறுதியில் அவன் இறப்பதற்கு நான் எதையாவது கொடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அந்த நேரத்தில் நான் நிலைகுலைந்துவிட்டேன். என்னால் அவனுக்கோ, அவர்களுக்கோ உதவி செய்ய முடியவில்லை" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

`நள்ளிரவில் எழுந்துகொள்கிறார்கள்; அழுகை வருகிறது!’- கலவரத்தால் மன அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள்

தொடர்ந்து பேசிய அவர், ``நான் பார்த்தவற்றை ஒருபோதும் மறக்க மாட்டேன். ஒவ்வொரு குழந்தையையும் நினைவில் வைத்திருக்கிறேன். அவர்களை நான் பார்க்கவும் முடியும். அவர்களின் துன்பங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றி பேசுவதற்காகவும் ஒவ்வொரு நாளும் மக்கள் எவ்வாறு கொல்லப்படுகிறார்கள் என்பதை சொல்லவும்தான் நான் இங்கே இருக்கிறேன்”என்று கூறியுள்ளார்.

இத்லிப் என்ற பகுதி மட்டும்தான் தற்போது கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது. இதைக் கைப்பற்ற சிரிய அரசுப் படைகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில மாதங்களாக தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலால் டஜன் கணக்கில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனப் பேசி வருகிறார் அமானி.

ஆவணப்படம்
ஆவணப்படம்

பிரெஞ்சு, பெல்ஜியம், அமெரிக்கா, ஐரோப்பா, ஜெனிவா உள்ளிட்ட முக்கிய நாட்டுத் தலைவர்களை சந்தித்து அமானி சிரியாவுக்கு நட்புறவாக செயல்படும் ரஷ்யாவின் மீது தாக்குதலை நிறுத்த அழுத்தம் கொடுக்கமாறு வேண்டுகோள் விடுத்துவருகிறார். மேலும், மனிதாபிபானத்தின் அடிப்படையில் சிரியாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். ``ஐரோப்பாவில் உள்ள மக்களிடம் ஒன்றைக் கேட்கிறேன். அகதிகளாக உங்கள் நாட்டிற்குள் வருபவர்களும் மக்கள்தான் என்பதை வைத்துக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருக்கவும் வாழவும் அவர்களுக்கு உரிமை உண்டு. இந்த மக்கள் சிரியாவை விட்டு வெளியேற விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை. யாருக்குமே விருப்பமில்லை. நாங்கள் வாழ விரும்புகிறோம். எங்களால் முடிந்தால் நாங்கள் வீட்டுக்குச் செல்வோம்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

சிரியா உள்நாட்டுப்போரை விளக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு சிரிய இயக்குநர் ஃபெராஸ் ஃபைய்யத், `தி கேவ்' என்ற ஆவணப்படத்தை எடுத்தார். அமானியை மையமாக வைத்தே இந்த ஆவணப்படம் நகருகிறது. இந்தப் படத்தில் வரும் சிரியா போரால் களத்தில் நிலவும் காட்சிகளும் ரத்தம் வழியும் முகங்களோடு வரும் குழந்தைகளின் காட்சிகளும் போரின் கொடூரத்தை உலகுக்குச் சொல்லும் வகையில் இருந்தது. ஆஸ்கர் விருது பட்டியலிலும் இந்த ஆவணப்படம் இடம் பிடித்தது.

Credits : The Guardian

`குண்டுகள் விழும்போது பதுங்குக் குழிகளில் படிப்போம்!’- போர்ச் சூழலில் வாழும் காஷ்மீர் குழந்தைகள்
அடுத்த கட்டுரைக்கு