Published:Updated:

``சமூகம் இவர்களை அரவணைக்க வேண்டும்!” - ஆசிட் தாக்குதலுக்கு எதிரான புகைப்பட குரல்

ஆசிட் தாக்குதல் | ஒப்பனை புகைப்படம்

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவாகவும், அந்த வன்முறைக்கு எதிராகவும், பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் வெளியிட்டிருக்கும் ஒப்பனை புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

``சமூகம் இவர்களை அரவணைக்க வேண்டும்!” - ஆசிட் தாக்குதலுக்கு எதிரான புகைப்பட குரல்

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவாகவும், அந்த வன்முறைக்கு எதிராகவும், பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் வெளியிட்டிருக்கும் ஒப்பனை புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Published:Updated:
ஆசிட் தாக்குதல் | ஒப்பனை புகைப்படம்

புதுச்சேரி நிகழ்ச்சி வர்ணனையாளர்களில் ஒருவரான கற்பகம், ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளர். சமீபத்தில் கடந்த ஹலோவீன் தினத்தில், விதவிதமான முகமூடிகளுடனும், ஒப்பனைகளுடனும் எடுக்கப்பட்ட வழக்கமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை நிரப்பிக் கொண்டிருக்க, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டதைப் போல ஒப்பனை செய்து இவர் பதிவேற்றிய புகைப்படங்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தன. முகத்தில் ஒரு பக்கம் ஆசிட் பாதிப்பு, மறுபக்கம் வழியும் கண்ணீர் என இவர் வெளியிட்ட புகைப்படங்கள், ஆசிட் தாக்குதலின் கோரத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தின.

கற்பகம்
கற்பகம்

கற்பகத்திடம் பேசினோம்... ``பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுச்சேரி. பி.ஏ., ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தபோது, பேராசிரியர் உமா அமலோற்பவ மேரி மேடம் வழிகாட்டுதலில் விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வானேன். சமூகம் குறித்த என் பார்வை, வேறு கோணத்தில் விரிவடைந்தது அப்போதுதான். அந்த தாக்கம் என்னை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி படிப்பை முடிக்க வைத்தது. அரசுப் பணிக்கு நான் முயற்சிக்கவில்லை. பெண்களின் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.

நாம் என்னவாகப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், விஜய் டி.வியில் டி.டி அக்கா நிகழ்ச்சியை பார்த்தேன். நிகழ்ச்சித் தொகுப்பாளராக விரும்பி, அதையே என் அடையாளமாக நிறுவினேன்.

அரசு நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என்று இதுவரை 300-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். நண்பர்கள் நடத்தும் யூ-டியூப் சேனலிலும் அவ்வப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவேன். இதுதான் என் ஷார்ட் பயோ.

இப்போது இந்த போட்டோவின் கதையை சொல்கிறேன். பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளும் வலி மிகுந்ததுதான் என்றாலும், அமிலத் தாக்குதல் எனும் ஆசிட் வீச்சு கொடூரமானது. பெண்கள் மீது நடத்தப்படும் இந்த குரூரத் தாக்குதல், அவர்களை உயிருள்ள சடலங்களாக்கி வீட்டுக்குள் முடக்கி விடுகிறது.

ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்கள், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கைகள் என இன்றும் சமூகம் முழுமையாக ஏற்கத் தயங்கும் பட்டியலில் இவர்களும் இருக்கிறார்கள். செய்யாத தவற்றுக்காக சமூகத்தை எதிர்கொள்ள தயங்கிய அவர்களில் சிலர், இப்போது ஃபீனிக்ஸ் பறவைகளாக பறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்தான் நம் சமூகத்திற்கு இன்னும் வரவில்லையோ என்று தோன்றுகிறது.

காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும், திருமணம் செய்துகொள்ள மறுக்கும் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராக, எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான என்னுடைய சிறு முயற்சிதான் இது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டியுடன் கற்பகம்
நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டியுடன் கற்பகம்

அதற்கு எழுத்து, போட்டோ என என்முன் இரண்டு வலிமையான வழிகள் இருந்தன. ஆனால் இவை இரண்டின் வழியாகவும் பல போராளிகள் இந்த தாக்குதலை அக்குவேர் ஆணிவேராக பிரித்து வீசி எறிந்துவிட்டார்கள் என்றாலும், நானும் அந்த வரிசையில் இணைய முடிவெடுத்தேன்.

என்னுடைய நட்பு வட்டத்தில் நிறைய மேக்கப் ஆர்டிஸ்ட்கள் இருக்கிறார்கள் என்பதால், ஆசிட் தாக்குதலுக்கு எதிராக போட்டோ மூலம் எனது எதிர்ப்பை பதிவு செய்ய முடிவெடுத்தேன். அதில் சரண்யா என்ற ஆர்டிஸ்ட் அக்கா, எனது முயற்சிக்கு உதவி செய்வதாக கூறினார். முகம் முழுவதும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டதைப் போல வடிவமைக்கலாம் என்று முதலில் நினைத்தோம்.

ஆனால் இன்ஸ்டாகிராம் போட்டோவை நீக்கிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் ஒருபக்கம் மட்டும் வடிவமைத்தோம். முழுமையாக செய்து முடிக்க மூன்றரை மணி நேரம் பிடித்தது. கண்ணில் வரும் கண்ணீர், தண்ணீரோ கிளிசரினோ கிடையாது. அந்த நிமிடம் அவர்களின் வலியை உணர்ந்தவுடன் தானாகவே கண்கள் கசிய ஆரம்பித்துவிட்டன. சாட்சுகி போட்டோகிராஃபர் அண்ணா, அதை அப்படியே பதிவு செய்துவிட்டார். அந்த போட்டோவைத்தான் ஹலோவீன் தினத்தன்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தேன்.

ஆசிட் தாக்குதல் | ஒப்பனை புகைப்படம்
ஆசிட் தாக்குதல் | ஒப்பனை புகைப்படம்

என்னுடைய அந்த மேக்கப்பை கலைப்பதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. அப்போது முகம் முழுவதும் அப்படி ஒரு வலி இருந்தது. இந்த முயற்சி 5 பேரிடம் சென்று பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த எம்பதி, மனமாற்றம் ஏற்பட்டால் கூட போதும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பார்க்காத அளவில் பலரும் தொடர்புகொண்டு, இந்த புகைப்படம் தங்களை பாதித்ததாகவும், ஆசிட் தாக்குதலுக்குள்ளானவர்கள் குறித்த தங்களின் பார்வை மாறிவிட்டதாகவும் சொன்னார்கள்.

என் கணவர் பாலாஜியும், அப்பா அம்மாவும் போட்டோவை முதலில் பார்த்தவுடன் பயந்துவிட்டார்கள். அதன்பிறகு என் முயற்சியை பாராட்டினார்கள். சிறிது நேரம் மேக்கப் போட்டு கலைத்ததற்கே இவ்வளவு வலி என்றால், காலம் முழுக்க அந்த வலியுடனே இருக்கும் அவர்களின் வேதனை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆசிட் வீச்சு
ஆசிட் வீச்சு
மாதிரிப்படம்

ஒட்டுமொத்த சமூகமும் இவர்களை அரவணைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்று கூறும் கற்பகத்திற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக வேண்டும் என்பது கனவு.

கடந்த 2016-ம் ஆண்டு 300 ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவில் பதிவாகியிருக்கின்றன. அதன்படி தோராயமாக இந்தியாவில் ஆண்டுக்கு 250-லிருந்து 300 ஆசிட் தாக்குதல்கள் நடப்பதாக தெரிவிக்கின்றன புள்ளி விபரங்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை 1000-ஐ தாண்டும் என்கிறது ‘ஆசிட் சர்வைவர்ஸ்’ என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு. இந்த தகவல்களின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது கற்பகத்தின் முயற்சி.