தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியிருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ம் தேதி என மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பு வந்ததில் இருந்து, எங்கள் ஊரிலும் தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.
என் அப்பா, கணவர் இருவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இருவருமே இந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் ஊரில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடக் காத்திருந்தனர். அப்பாவின் வீடு இருக்கும் வார்டும், கணவர் வீடு இருக்கும் வார்டும் வேறு வேறு. ஒரு திருப்பமாக, இவை இரண்டுமே இப்போது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, அப்பா, கணவர் இருவருமே இப்போது, அவர்கள் சார்பாக என்னை தேர்தலில் நிற்கச் சொல்லி கேட்டார்கள், வற்புறுத்தினார்கள். சொல்லப்போனால், என்னை எந்த வார்டில் நிற்கவைப்பது என்பது குறித்து அவர்களுக்கு இடையே ஒரு நீயா, நானா போட்டியே உருவானது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனக்கு 35 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அப்பா வீடு, கணவர் வீடு என்று இரண்டு குடும்பங்களுமே அரசியல் கட்சி சார்புள்ள குடும்பங்கள் என்பதால், எனக்கு அரசியல் தெரியும், புரியும். ஆரோக்கியமான, மக்களுக்கு நல்லது சிந்திக்கும் அரசியலில் ஆர்வமும் உண்டு. சொல்லப்போனால், சமீபத்திய தேர்தல்களில் இளம் வயதினர், கட்சி சார்பற்றவர்கள் தேர்தல் களத்தில் நின்றதைப் பார்த்தபோதெல்லாம், நாமும் தேர்தலில் நின்றால் என்ன என்ற எண்ணமும் விருப்பமும் பல முறை வந்து போயிருக்கிறது.
ஆனால், என் குடும்பம் எதிர்பார்ப்பதுபோல, என் அப்பாவின் கைப்பாவையாகவோ, கணவரின் கைப்பாவையாகவோ தேர்தலில் நிற்க எனக்கு விருப்பமில்லை. சுயேச்சையாக தேர்தல் களம் காண விரும்புகிறேன். வெற்றி பெற்றால் என் வார்டு மக்களுக்கு, சாத்தியமுள்ள அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றுக்கொடுக்க உழைக்க விரும்புகிறேன்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇது பற்றி நான் என் வீட்டில் சொன்னபோது, என் அப்பா, கணவர் இருவருமே நான் இப்படி ஒரு முடிவை எடுப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. `என் பொண்ணே சுயேச்சையா நின்னா என் கட்சிக்காரன் என்ன நினைப்பான்?' என்கிறார் என் அப்பா. `நீ என் கட்சி சார்பா நிக்கலைன்னா, இத்தனை நாள் இந்த வார்டு உறுப்பினர் பதவியை மனசுல வெச்சு கட்சிக்கு நான் செலவழிச்சபணத்துக்கு எல்லாம் என்ன பதில்..?' என்று குமுறுகிறார் கணவர். இருவருமே, நான் இருவரின் கட்சியையும் தவிர்த்து சுயேச்சையாக நிற்பதை மானக்குறைவாகப் பார்க்கிறார்கள். சொல்லப்போனால், இதுவரை, `என் வார்டா, உன் வார்டா' என்று போட்டியில் இருந்த அப்பாவும், கணவரும், `எந்த வார்டா இருந்தாலும் சரி, ஆனா நாங்க சார்ந்திருக்குற ரெண்டு கட்சியில ஏதாவது ஒண்ணு சார்பா நில்லு' என்று சொல்கிறார்கள்.

நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். `நீ தேர்தல்லயே நிக்க வேண்டாம், நான் எங்க அம்மாவை நிப்பாட்டிக்கிறேன்' என்கிறார் கணவர். `அப்போ அத்தையை எதிர்த்து நான் சுயேச்சையா நிக்குறேன்' என்றேன் நான். பல கட்ட பேச்சுவார்த்தை, விவாதங்களுக்குப் பிறகும், தான் செலவழித்த காசை எடுக்க முடியாமல் போகும் என்ற கோபம் என் கணவருக்கு அகலவில்லை. என் அப்பா, `நான் உன் அம்மாவை வார்டுல நிப்பாட்டிக்கிறேன். ஆனா, உங்கம்மாவை வைஸ் பிரஸிடென்ட் ஆக்க உன் ஓட்டு வேணும். அதனால கட்சியோ, சுயேச்சையோ... எதுலயாச்சும் ஜெயிச்சு வந்துடு' என்கிறார். இந்த அரசியல் ஆதாய தேர்தல்தான் எனக்குப் பிடிக்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என் பிள்ளைகள், மாமியார், அம்மா அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். என் வார்டு மக்களுக்கு ஏற்கெனவே நான் பிடித்த பெண் என்பதாலும், தெருவில் மக்களுக்கு நலத்திட்ட, நிதி உதவி விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பது, தெரு விளக்கு முதல் குழாய் வரை பிரச்னைகள் ஏற்படும்போது வார்டு மெம்பரிடம் சென்று முறையிட மக்களை ஒருங்கிணைப்பது என என்னாலான முயற்சிகளை எடுத்து களத்தில் நின்றிருக்கிறேன் என்பதாலும், மக்களின் வாக்குகளையும் நம்பிக்கையையும் பெறுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இல்லையென்றாலும் கூட, தோல்வியையே தழுவினாலும், அரசியல் கட்சிகளுக்கு இடையில் சுயேச்சையாக என் பலம் என்ன, மக்களின் வாக்களிக்கும் எண்ணவோட்டம் எப்படி இருக்கிறதை என்பதை அறிந்து பார்க்கவாவது தேர்தலில் நிற்கவே விரும்புகிறேன். அது என் அடுத்த அரசியல் முடிவுகளுக்கு அனுபவமாக அமையும் என்று நம்புகிறேன்.

என் கணவர், அப்பாவின் அரசியல் நகர்வுகளுக்கு பகடைக் காய் ஆகாமல், அதே நேரம் அவர்களை மனம் வருந்த வைக்காமல், தன்னிச்சையாக, சுயசார்புடன் என் அரசியல் முதல் அடியை எடுத்துவைத்து பயணத்தை ஆரம்பிக்க ஆலோசனை கூறுங்களேன்.
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.