பெண்களைப் பின் தொடர்வதும், ஆண்களின் விருப்பத்துக்கு இணங்கவில்லை எனில் அவர்களின் முகத்தில் ஆசிட் அடிப்பதும் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டு இருப்பது நாட்டின் அவலம். பெங்களூரில், தன்னை கல்யாணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணின் முகத்தில் இளைஞர் ஆசிட் அடித்த மற்றுமொரு கொடிய சம்பவம் நடந்துள்ளது.
24 வயதான பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி பல முறை தொந்தரவு செய்துள்ளார் ஒரு இளைஞர். அந்தப் பெண் தொடர்ந்து மறுத்து வர, இறுதி ஆயுதமாக, திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் பல மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார். அந்தப் பெண் இதற்கு பயந்து வியாழக்கிழமை காலையில் தந்தையோடு வேலைக்குச் சென்றுள்ளார். இரவு வேலை முடித்துவிட்டு வரும்போது, அலுவலகத்தின் படிக்கட்டிலேயே நின்று வழிமறித்து, மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க, அப்பெண் மறுத்ததால் அவர் மீது ஆசிட்டை வீசிவிட்டு அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேற்கு பெங்களூரின் சுங்கடகட்டே பகுதிக்கு அருகில், அப்பெண் பணிபுரியும் ஃபைனான்ஸ் கம்பெனியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றப் பின்னணியில் ஈடுபட்டவர் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 27 வயதுடைய நாகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு இவர் தலைமறைவாகியுள்ளதால் காவல் துறையினர் இவரைத் தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகம், கழுத்து, கைகள் மற்றும் தலையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பை ஏற்படுத்திய அந்த இளைஞரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.