Published:Updated:

``திருநங்கைகள் இனி மூன்றாம் பாலினம்!’’- அரசு விளக்கமும் திருநங்கைகள் எதிர்ப்பும்

மூன்றாம் பாலினம் திருநங்கைகள் என்றால் முதல் மற்றும் இரண்டாம் பாலினமாக யாரைக் குறிப்பிடுகிறது அரசு?

திருநங்கை
திருநங்கை

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15, திருநங்கைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், அரசு சார்பாக 2020 ஆண்டுக்கான திருநங்கைகள் தினவிழாக் கொண்டாட்டத்துக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். சிறந்த திருநங்கை விருதுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாகவும் அதற்கான விதிமுறைகளும் அதில் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த அறிவிப்பில் 'திருநங்கை' என்கிற சொல் திருத்தப்பட்டு 'மூன்றாம் பாலினத்தவர்' என்று குறிப்பிட்டு ஆட்சியர் கையெழுத்திட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை

2006-ல் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி மாற்றுப்பாலினத்தவர்களுக்கான சுயமரியாதை, அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி அதிகாரபூர்வமாக 'திருநங்கை' என்கிற சொல்லாடலை வழக்கத்துக்குக் கொண்டுவந்தார். அதைத் தற்போது அ.தி.மு.க ஆட்சியில் மாற்றி, மூன்றாம் பாலினம் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பது அரசியல் உட்பூசல் நோக்கமாகவே தெரிகிறது எனப் பலர் கருத்து கூறிவந்தனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுக்குத் தொடர்புகொண்டோம். தமிழக அரசின் அதிகாரபூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த அவரது எந்த தொலைபேசி எண்ணும் செயல்பாட்டில் இல்லாததை அடுத்து சமூகநலத்துறைச் செயலர் மதுமதியைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், ``இந்தப் பிரச்னை ஏன் திடீரென பூதாகரமாகக் கிளம்பியிருக்கிறது எனத் தெரியவில்லை.

சரோஜா
சரோஜா

2014-ம் ஆண்டில் நால்சா மற்றும் இந்திய யூனியனுக்கு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிதான் திருநங்கை என்னும் பெயர் மூன்றாம் பாலினம் என மாற்றப்பட்டது. மூன்றாம் பாலினத்தவராக மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரித்து அவர்களுக்கான சுயமரியாதை, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்வதே அந்தத் தீர்ப்பின் நோக்கம். இவர்கள் கேள்வி எழுப்புவதென்றால் உச்ச நீதிமன்றத்தைத்தான் எழுப்ப வேண்டும்" என்றார்.

நால்சா மற்றும் இந்திய யூனியன் வழக்கு (NALSA vs Union of India) தீர்ப்பு என்ன சொல்கிறது?

நால்சா வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், 'சமூகத்தின் பெரும்பாலான மக்கள் திருநங்கைகளைக் கேலி செய்கிறார்கள். அவர்களைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதை வழங்கப்படுவது இல்லை. இதில் தவறு முழுவதும் நமது சமூகத்திடம்தான் இருக்கிறது. வெவ்வேறு பாலின அடையாளங்களைக் கொண்டவர்களை அங்கீகரிக்கத் தவறிய நமது மனநிலையை அது பிரதிபலிக்கிறது. ஆண், பெண், மூன்றாம் பாலினம் என ஒவ்வொரு பாலின அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும், அதற்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை மாநில அரசு வழங்க வேண்டும்.

கிரேஸ் பானு
கிரேஸ் பானு

அப்படி அவர்களை அங்கீகரிப்பதன் வழியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளதைப்போலவே அவர்களுக்கான உரிமைகளும் கிடைக்கின்றன. இவை தவிர, திருமணம், விவாகரத்து, குழந்தை தத்தெடுத்து வளர்ப்பு போன்றவற்றில் இருக்கும் சட்ட உரிமைகளும் திருநங்கைகளுக்கு அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆணிலிருந்து பெண்ணாக மாறுபவர்களையும் பெண்ணிலிருந்து ஆணாக மாறுபவர்களையும் அங்கீகரிப்பதற்கு உளம் சார்ந்த பரிசோதனைகளே (Psyche test) அறிவுறுத்தப்படுகிறது. உடலியல் சார்ந்த பரிசோதனைகள் சட்டத்துக்கும் உரிமைக்கும் விரோதமாகக் கருதப்படுகிறது. மேலும் பெண்ணாக மாறுவதற்கு அறுவைசிகிச்சை செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துவதும் சட்டத்துக்குப் புறம்பானது. மேலும், அவர்களுக்கான தனி பொதுக்கழிப்பறைகள், அவர்களுக்கான தனி ஹெச்.ஐ.வி விழிப்புணர்வுப் பரப்புரைகள் ஆகியன நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்' என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதவிர, சமூகநலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கான உரிமை குறித்தும் நால்சா தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசு இப்படிப் பாலினத்தை வரிசைபடுத்துவது பாலினச் சம உரிமை (Gender Eqஏuality) இல்லை என்கின்றனர் பாலின உரிமைச் செயற்பாட்டாளர்கள். மேலும், நால்சா வழக்கு சொல்வதால்தான் அரசு மாற்றியதாகச் சொல்லும் சமூகநலத்துறைச் செயலரின் கருத்தையும் மறுக்கின்றனர்.

பெயர் மாற்றப்படாத அடையாள அட்டை
பெயர் மாற்றப்படாத அடையாள அட்டை

இதுகுறித்துப் பேசும் திருநங்கைகள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் கிரேஸ்பானு, "உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகளின் அடிப்படையில்தான் மாற்றப்பட்டது என்றால் அதற்குப் பிறகு, தொடுத்த வழக்குகளில் அவர்கள் மூன்றாம் பாலினம் என்றுதானே குறிப்பிட்டிருக்க வேண்டும். திருநங்கை என்றுதான் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்கள். மேலும், நால்சா தீர்ப்பின்படி திருநங்கைகளை/திருநம்பிகளை மூன்றாம் பாலினமாகக் கருதலாம். ஆனால், அவர்களுடைய பாலினத்தை அடையாளப்படுத்தும் உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.

மேலும், அலி, அரவாணி, ஜோகப்பா, ஹிஜிரா என ஒவ்வொரு மாநிலப்பகுதிகளிலும் ஒவ்வொரு மாதிரியான அடையாளம் இருக்கிறது. அதனால், பொதுவாக மூன்றாம் பாலினம் என்று கருதலாம். இதற்கு ஆறுமாத காலத்துக்குள் மாநில அரசுகளும் பதில் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு குறிப்பிட்டது. இதுதவிர, வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் அவர்கள் ஒதுக்கப்படக் கூடாது, அவர்களுக்கும் முழு உரிமை வழங்க மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு குறிப்பிட்டது.

அப்படியென்றால் தீர்ப்பு சொன்னதுபோல வேலைவாய்ப்பு மற்றும் படிப்பில் ஏன் இதுநாள்வரை திருநங்கைகளுக்கு/திருநம்பிகளுக்கு அங்கீகாரம் தரப்படவில்லை. திருநங்கைகள்/ திருநம்பிகளுக்கான அடையாளப் பரிசோதனைக்கு நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்யக் கூடாது என்று அந்தத் தீர்ப்பு சொல்கிறது. ஆனால், கடந்த வாரம் வரை நிர்வாணப்படுத்திதான் பரிசோதனை செய்திருக்கிறார்கள். எங்களுக்கான இடஒதுக்கீடுகூட எங்களைக் கலந்தாலோசிக்காமலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்க்கப்பட்டது.

மூன்றாம் பாலினம் எனக் குறிக்கப்பட்ட  அடையாள அடடை
மூன்றாம் பாலினம் எனக் குறிக்கப்பட்ட அடையாள அடடை

இதற்கு முன்பு அரவாணி நலவாரியம் எனப் பெயர் கொண்டிருந்தது, திருநங்கைகள் நலவாரியமாக மாறியது. ஆனால், மாற்றுப்பாலின பாதுகாப்பு மசோதாவுக்குப் பிறகுதான் மூன்றாம் பாலினம் எனக் குறிப்பிடத் தொடங்கினார்கள். மற்ற மாநிலங்களில் தற்போது வரைகூட அவர்களுடைய மாநில மொழியில் திருநர்களுக்கான சொல்லாடல்தான் பின்பற்றி வருகிறது. தமிழக அரசு மட்டும்தான் மூன்றாம் பாலினம் என மாற்றியிருக்கிறது. நால்சா தீர்ப்பில் வேறு எதையுமே நிறைவேற்றாமல் இந்த மூன்றாம் பாலினம் என்கிற வார்த்தையை மாற்றுவதற்கான நோக்கம் என்ன" என்று கேள்வி எழுப்புகிறார்.

மூன்றாம் பாலினமாக திருநர்களை அடையாளப்படுத்தி, இரண்டாம் பாலினமாகப் பெண்களைக் குறிப்பிடுவதன் வழியாக ஆண்களை முதல் பாலினமாகச் சொல்லாமல் சொல்லி வரிசைப்படுத்துவது ஒட்டுமொத்த அரசின் ஆணாதிக்க மனப்போக்கை வெட்டவெளிச்சமாகக் காட்டுவதாகவே புரிந்துகொள்ளப்படும்.

"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்!