Published:Updated:

அடங்க மறு! - 2 - செக்ஸ் ஸ்டிரைக் எனும் பேராயுதம்!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

அடங்க மறு! - 2 - செக்ஸ் ஸ்டிரைக் எனும் பேராயுதம்!

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

உள்ளிருப்புப் போராட்டம், மெதுவாக வேலை செய்யும் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், பேனாவை எடுக்க மறுக்கும் வேலைநிறுத்தம், கருவிகளைக் கையாள மறுக்கும் வேலைநிறுத்தம், அடையாள வேலைநிறுத்தம் என எத்தனையோ வகையான வேலைநிறுத்தங்களைக் கேள்விப் பட்டிருப்போம்... பார்த்திருப்போம். அனைத்துமே தொழிலாளர்கள் உரிமைக்காக நடத்தப்படுபவை. ஆனால், முதலாளி, தொழிலாளி என்று பார்க்கவியலாத குடும்பத் தில், அதிலும் கணவன் மனைவி இடையே இப்படி வேலைநிறுத்தம் சாத்தியமா... அதுவும் பொதுநலனுக்காக?

கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

அப்படி என்ன வேலைநிறுத்தம் என்கிறீர்களா?

செக்ஸ் ஸ்டிரைக்!

ஆம்... `உடலுறவு ஒத்துழையாமை போராட்டம்’. சொந்த நலனுக்காக அல்ல, பொதுநலனுக்காகவே பெண்கள் இதைச் செய்திருக் கிறார்கள். அதன்மூலம் பல பிரச்னை களுக்குத் தீர்வும் கண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யத்துக்குரிய விஷயம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பல்வேறு நாடுகளில் செக்ஸ் ஸ்டிரைக் மூலம், சமூகப் பிரச்னைகள் பலவற்றுக்கும் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். காலனி ஆதிக்கக் காலத்துக்கு முன்பு வேட்டை சமூகமாக இருந்தது மானுட சமூகம். அத்தகைய காலத்தி லேயே தங்கள் மீதான பாலியல் வன்கொடுமை, பாலியல் வதை ஆகியவற்றைத் தடுக்க, பெண்கள் ஒன்று திரண்டு செக்ஸ் ஸ்டிரைக் நடத்தியதாக மானுடவியல் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் காலத்திலும்கூட இந்த செக்ஸ் ஸ்டிரைக் தொடர்கிறது.

பண்டைய கிரீஸ் நாட்டில், ‘பெலோப் பனேசியன் யுத்த’த்தை முடிவுக்குக் கொண்டு வர, அந்த நாட்டின் நாடக ஆசிரியர் அரிஸ்டோஃபேன்ஸ், லிஸிஸ்ட்ரா என்ற தன்னுடைய பெண் கதாபாத்திரத்தின் தலைமையில் மற்ற பெண் கதா பாத்திரங்கள் ஒன்றுகூடி செக்ஸ் ஸ்டிரைக் செய்வது போன்ற காட்சியை வடிவமைத்திருக்கிறார்.

16-ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் வழக்கிலிருந்த முறையற்ற யுத்த வழிமுறைகளை மாற்றவும், போர்களை முடிவுக்குக் கொண்டு வரவும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் செக்ஸ் ஸ்டிரைக் செய்திருக் கிறார்கள். அதன் பலனாக, எதிர்காலத்தில் யுத்தங்களை நெறிப்படுத்த ‘வீட்டோ’ எனப்படும் தீர்மானிக்கிற உரிமையை தங்கள் வசம் அப்பெண்கள் எடுத்துக்கொண்டதே இதில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இதை, ‘அமெரிக்கப் பெண்ணுரிமைக்கான வன்முறையற்ற முதல் போராட்டம்’ என்று உலகத் தகவல் மையம் பதிவு செய்திருக்கிறது.

அடங்க மறு! - 2 - செக்ஸ் ஸ்டிரைக் எனும் பேராயுதம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில், ராணுவத்தினருக்கும், இனக்கலவரம் செய் பவர்களுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது உள்நாட்டு யுத்தத்தில் ஏறத் தாழ இரண்டரை லட்சம் மக்கள் கொல்லப் பட்டனர். யுத்தத்தில் ஆண்கள் ஈடுபட்டிருந்த வேளையில், சிறுவர்களை ராணுவ பயிற்சிக்குக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லும் போக்கு அதிகரித்தது. இதனால், வெகுண்டெழுந்த தாய் நெஞ்சங்கள், தம் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக கையில் எடுத்த ஆயுதம்... செக்ஸ் ஸ்டிரைக்!

போர் காரணமாகப் பலரும் மனோவியல் ரீதியில் பாதிப்புக்குள்ளாகினர். ராணுவப் பணி முடித்து வீடு வரும் ஆண்கள், தங்கள் குடும்பப் பெண்களைத் தாக்கினர். பல பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். இந்த விவகாரம் பெரிதாக உருவெடுக்க... யுத்தத்தை முடிவுக்குக்

கொண்டு வருவதற்காகப் பெண்கள் ஒன்று திரண்டனர். லைபீரியாவைக் கடந்து பிற ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த பெண்களும் கைகோத்தனர். ‘அமைதிக்கான லைபீரிய பெண்களின் அமைப்பு 2003’ உருவானது. சமூக செயற்பாட்டாளர்களான கிரிஸ்டல் ரோ காவ்டிங், லெமா போவீ மற்றும் கம்ஃபர்ட் ஃப்ரீமேன் ஆகியோரின் தலைமையில் வன்முறையற்ற எதிர்ப்பை அரசுக்குத் தெரிவித்தனர்.

‘இனி பொறுக்க மாட்டோம்' என்று பொங்கியெழுந்த பெண்கள், ‘அமைதி நிலவ வேண்டும் என்கிற எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை செக்ஸ் ஸ்டிரைக் செய்வோம்’ என அறிவித்தனர். அண்டை நாடான ‘கானா’ நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த அரங்கைச் சுற்றி நின்றிருந்த பெண்கள், தலைவர்களை வெளியேற விடாமல் தடுத்ததோடு `நிர்வாண போராட்டம் நடத்துவோம்’ என்று மிரட்டினர்.

அரங்கத்தின் கதவுகள், ஜன்னல்களை மூடினர். உள்ளே இருந்த தலைவர்களுக்கும், வெளியே செக்ஸ் பட்டினியால் வாடிய ஆண்களுக்கும் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

 லைபீரிய பெண்களின் செக்ஸ் ஸ்டிரைக்
லைபீரிய பெண்களின் செக்ஸ் ஸ்டிரைக்

14 வருடப் போர் முடிவுக்கு வந்தது. நாட்டின் முதல் தலைவியாக எல்லன் ஜான்சன் சர்லீஃப் பொறுப்பேற்றார்.

காலனி ஆதிக்கத்தின் நுகத்தடியில் நைஜீரியா சிக்கித் தவித்தபோது, இனக்குழுவின் தலைவியாக இருந்தவர் அக்பா எக்வே. பெண்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்களின் கொட்டத்தை அடக்க, பெண்களை ஒன்று திரட்டி வேலை நிறுத்தம் செய்ய வைத்தார். ‘பெண்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்கள்; குழந்தைகளைப் பராமரிக்க மாட் டார்கள்; உங்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாட் டார்கள்’ என்று அறிவித் தார்.

திணறிப்போனார்கள் ஆண்கள். பெண்களைத் தேடிச் சென்ற ஆண்கள், அடித்து விரட்டப் பட்டனர். உறுதி குறையாமல் பெண்கள் நடத்திய போராட்டத் தால், ‘பெண்களை எவ் வகையிலும் துன்புறுத்த மாட்டோம்' என்று உறுதி மொழி கொடுத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர் ஆண்கள்.

கொலம்பியா நாட் டின் பெரைரா நகரைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள், ரவுடி களிடம் பணிபுரிந்தனர். கொலை, கொள்ளைகளில் அவர்கள் ஈடு படுவதால், தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் சிதைவதைக் கண்ட பெண்கள், ‘ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும் வரை’ செக்ஸ் ஸ்டிரைக் செய்தனர்.

`பெரைராவில் 2005-ல் 488 என்றிருந்த கொலைகளின் எண்ணிக்கை, செக்ஸ் ஸ்டிரைக் காரணமாக 26.5 சதவிகிதம் குறைந் தது' எனப் பதிவு செய் திருக்கிறது, அமெரிக்க பத்திரிகையான `தி கார்டியன்’!

செக்ஸ் ஸ்டிரைக்... பல்வேறு நாடுகளில், பல்வேறு சந்தர்ப் பங்களில் வெற்றியைக் கண்டிருக்கும் அதே சமயம், தோல்வியைச் சந்தித்த சம்பவங்களும் உண்டு. என்றாலும், ஒட்டுமொத்த எதிர்ப் பைக் காட்டவும், பொது நன்மைக்காகவும் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட செக்ஸ் ஸ்டிரைக், நிச்சயமாக பெரும் போராட்ட வடிவம் என்பதில் சந்தேகமே இல்லை.

‘செக்ஸ்’ பற்றி பெண்கள் பேசுவதையே தவறென நினைக்கும் இந்திய சமூகத்தில், உலக வரலாற்றில் பதிவாகிக்கொண்டே இருக்கும் இந்த ‘செக்ஸ் ஸ்டிரைக்'... புதிய பார்வையைத் தரக்கூடும்.

- போர் தொடரும்...

*****

உலக நாடுகளில்...

2009 கென்யா நாட்டின் அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கிடையே நடைபெற்ற தரக்குறைவான, ஆபாசமான குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கச் சொல்லி, ஏழு நாள்கள் நடத்தப்பட்டது செக்ஸ் ஸ்டிரைக். போராட்டங்கள் முடிவுக்கு வந்து நிலையான ஆட்சி அமைந்தது.

2013-ல் கொலம்பிய நாட்டின் பார்பகோஸ் நகரில் சரியான சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிகளும் குழந்தைகளும் உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுக்க முடியாமல் உயிரிழப்பது தொடர்கதையானது. செக்ஸ் ஸ்டிரைக் ஆரம்பமாகவே, சாலையை அமைக்க 25 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்தும் திட்டம் நிறைவேறாத நிலையில், மீண்டும் செக்ஸ் ஸ்டிரைக் வெடித்தது. உடனடியாக சாலை போடப்பட்டது.

2011-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ தீவின் டோடோ கிராமத்தைச் சேர்ந்த ‘தையல் கூட்டுறவு சங்க’ப் பெண்கள், ராணுவம் மற்றும் கலகக்காரர்களுக்கு இடையேயான வன்முறையை நிறுத்த செக்ஸ் ஸ்டிரைக் செய்தனர். ‘நிலைகுலைந்த பொருளாதாரத்தைச் சீர்படுத்தி, அம்மக்கள் அமைதியான வாழ்வைத் தொடர இந்த செக்ஸ் ஸ்டிரைக் உறுதுணையாக இருந்தது’ என்று பதிவு செய்துள்ளது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில்.

2018-ல் அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவில் ஆறு வார கருவைக் கலைக்கத் தடை செய்யும் சட்டம் அமலில் இருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. செக்ஸ் ஸ்டிரைக் செய்ய பெண்களுக்கு அழைப்பு விடுத்தார், நடிகையும் சமூகச் செயற்பாட்டாளருமான அலிஸா மிலானோ. ஆண்களையும் உள்ளடக்கிய போராட்டமே சிறந்தது என்று கருதிய பெண்கள், அலிஸாவின் அழைப்பை நிராகரித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism