Published:Updated:

மீடூ புகார் குறித்து ஆ.ராசா பேசியது சரியா? - பாலியல் புகார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!

பாலியல் புகாரைப் பொறுத்தவரை உடனடியாகப் புகார் கொடுக்கும் சூழல் இந்தச் சமூகத்தில் இல்லவே இல்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தி.மு.க எம்.பி-யான ஆ.ராசாவின் சமீபத்திய பேட்டி ஒன்றில், வைரமுத்து மீது சின்மயி வைத்துள்ள 'மீ டூ' குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி, 'பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் தி.மு.க 'மீடூ' புகாரில் சிக்கியுள்ள வைரமுத்துவை தொடர்ந்து ஆதரித்து வருகிறதே?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆ.ராசா சொன்ன பதில் பெண்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

``போற போக்குல ஒருத்தர், வைரமுத்து தன்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணுனதா சொல்றாங்க. அதுக்கு ஆதாரம் தரமாட்டேங்கிறாங்க. அந்தக் குற்றச்சாட்டை வைரமுத்து மறுக்கிறார். உறுதியற்ற புகார் (Mere accusation) என்பது வேறு, வார்த்தை தாக்குதல் என்பது வேறு, நேரடியான புகார் (Legitimate complaint) என்பது வேறு. அவர் நேரடிப் புகார் கொடுக்கவில்லை" என்பதுதான் அந்தக் கேள்விக்கு ஆ.ராசாவின் பதில்.

ஆ.ராசா
ஆ.ராசா

ஆ.ராசாவின் இந்த வாதத்துக்குப் பதில் அளிக்கும் விதமாக, வைரமுத்து மீது 'மீ டூ' புகார் எழுப்பியிருந்த சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில், 'காவல்துறை என்னிடமிருந்தும், என் அம்மா, கணவரிடமிருந்தும் எழுத்துபூர்வமான புகாரை பெற்றுக் கொண்டார்கள். தேசிய மகளிர் ஆணையத்தில் என் புகார் உள்ளது' என்று தெரிவித்திருந்தார். இது குறித்து சின்மயி கருத்தைத் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டபோது, 'இதுபற்றி இப்போது நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை' என்றார் சின்மயியின் அம்மா.

இந்நிலையில், பாலியல் தொல்லைக்கு உள்ளான ஒரு பெண், அதைச் சட்டம் ஏற்றுக்கொள்ளும்படியான புகாராகப் பதிவு செய்ய என்னென்ன செய்ய வேண்டும், வருடங்கள் கடந்தும் அந்தப் புகார் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது பற்றி, வழக்கறிஞர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான தமயந்தியிடம் பேசினோம்.

"பொதுவாக, ஒரு குற்றச் சம்பவம் நடந்தால் அது தொடர்பாக உடனடியாகப் புகார் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஆதாரங்கள் அழிக்கப்படாமல் இருக்கும், சாட்சியங்கள் கலைக்கப்படாமல் இருக்கும். எனவேதான் உடனடியாகப் புகார் கொடுக்க சட்டம் வலியுறுத்துகிறது.

பாலியல் வல்லுறவுச் சட்டம் 2013-ன் படி, குற்றம் நடந்ததிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க வேண்டும். பொதுவாக, ஒரு குற்றச் செயலுக்கான தண்டனைக் காலம் எவ்வளவோ, சம்பவம் நடந்த தேதியிலிருந்து அந்தக் காலத்துக்குள் புகார் அளிக்க வேண்டும் என்கிறது சட்டம். அதாவது, ஒரு குற்றச் செயலுக்கு ஆறு மாதம் தண்டனை எனில், சம்பவம் நடந்ததிலிருந்து ஆறு மாத காலத்துக்குள் அது குறித்துப் புகாரளிக்க வேண்டும்.

ஒருவேளை குற்றம் செய்தது யார் எனப் பாதிக்கப்பட்டவருக்கே தெரியாதபட்சத்தில், பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் என எப்போது தெரிய வருகிறதோ, அந்தத் தேதியிலிருந்து அந்தக் கால வரையைக் கணக்கிடுவார்கள்.

வழக்கறிஞர் தமயந்தி
வழக்கறிஞர் தமயந்தி

ஆனால், இந்தப் பொது விதிகளுக்குட்பட்டு எல்லா பெண்களாலும் புகார் கொடுத்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம். பாலியல் புகாரைப் பொறுத்தவரை உடனடியாகப் புகார் கொடுக்கும் சூழல் இந்தச் சமூகத்தில் இல்லவே இல்லை. ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்னால், குடும்ப மானம் போய்விடும், அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனப் பல்வேறு அச்சுறுத்தல்களை இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டித்தான் ஒரு பெண் புகார் கொடுக்க வேண்டியுள்ளது.

அதேபோல பாலியல் வல்லுறவு செய்தால்தான் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு என்று கிடையாது. ஒரு பெண்ணுக்கு மனதளவில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தால்கூட அது பெரிய பாதிப்புதான். ஆனால், இந்த ஆணாதிக்க சமூகம் பாலியல் சீண்டல்களை 'இதெல்லாம் ஒரு பிரச்னையா' என எளிதில் கடந்துவிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைரமுத்து மீது சின்மயி கொடுத்த 'மீ டூ' புகார்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது. சின்மயி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனாலும், 'இதெல்லாம் ஒரு விஷயமா... எப்போதோ நடந்ததை இப்போ ஏன் சொல்றாங்க. அதுவும் போறபோக்குல ஏன் சொல்றாங்க?' என்கிற ரீதியில் ஆ.ராசா பேசியிருக்கிறார். 'மீ டூ'-வுக்கு எதிராகப் பேசுபவர்களின் நிலைப்பாடு பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது.

`நீ பாதிக்கப்பட்டா நீதான் அதை நிரூபிக்கணும்' என்று இந்தச் சமூகம் தனக்கான பொறுப்பை தட்டிக்கழித்து, பாலியல் புகார் கொடுக்கும் பெண்களைக் கைவிட்டுவிடுகிறது. இன்னொரு பக்கம், பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை உடனடியாகக் கொடுக்கும் சூழலும் இங்கு இல்லை.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
ஆ.ராசா மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியும் மன்னிப்புக் கேட்க வேண்டும்! #VoiceOfAval

சம்பவம் நடந்தபோது, சின்மயி இளம் வயதுப் பெண்ணாக இருந்ததால், அப்போது அதற்கு எதிர்வினை ஆற்றக்கூடிய தைரியம் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அப்போது அதை வெளியில் சொல்ல முடியாத சூழல் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு பின்னணியில், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் அது குறித்துப் புகார் சொல்லலாம். ஆனால், புகார் அளிக்கத் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும். தெளிவான காரணம் இருக்கும்போது அந்தப் புகார் ஏற்றுக் கொள்ளப்படும்.

எழுத்து ரீதியாகக் காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ, மகளிர் ஆணையத்திலோ புகார் அளிப்பதுதான் நேரடிப் புகார். எல்லா வழக்குகளிலும் எடுத்ததுமே நேரடிப் புகார் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அதற்கு உதாரணமாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் வழக்கைச் சொல்ல முடியும்.

2013-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது ஒரு பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், எடுத்ததும் அது நேரடி புகாராகக் கொடுக்கப்படவில்லை. அந்தப் பெண் முதலில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்தான் எழுதினார். பிறகு, அந்தப் புகார் எல்லா ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இது குறித்து தன்னுடைய வலைதளப்பக்கக்தில் எழுதினார். அதன் பின்பே புகாராகக் கொடுக்கப்பட்டது. பிறகு, விசாரணைக் குழு அமைக்கப்பட்டு நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான புகார் நிரூபிக்கப்பட்டது.

ஆக, ஒரு குற்றச் சம்பவத்துக்கான புகார், எப்போது கொடுக்கப்படுகிறது, எப்படிக் கொடுக்கப்படுகிறது என்பது பாதிக்கப்பட்டவரின் சூழல் சார்ந்தது. தகுந்த காரணங்கள் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண் எவ்வளவு காலம் கழித்தும் புகார் கொடுக்கலாம்.

பெண்
பெண்

அப்படிப் புகார் அளிக்கும்போது, காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம். காவல் நிலையத்தில் புகார் எடுத்துக் கொள்ளப்படாத பட்சத்தில் பதிவுத் தபாலில் காவல் நிலையத்துக்குப் புகாரை அனுப்ப வேண்டும். சில நாள்கள் காத்திருந்து பார்த்து, அப்போதும் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், பதிவுத் தபாலில் புகார் அனுப்பியதற்கான ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு பதிவு செய்வதற்கான ஆணையைப் பெற முடியும். தவிர, காவல் நிலையத்துக்குச் செல்ல அச்சமாக இருக்கிறது என நினைப்பவர்கள் நீதிமன்றத்திலேயே புகாரளிக்க முடியும். அதுவும் இல்லையெனில் மகளிர் ஆணையத்துக்குப் புகார் அனுப்பலாம்" என்றார்.

பாலியல் புகார் கொடுப்பதில் உள்ள அச்சம், தயக்கம், சந்தேகம் எல்லாம் குற்றவாளிக்குச் சாதகமாகிவிடாமல் இருக்க, புகார் நடைமுறை பற்றிய விழிப்புணர்வு பெறுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு